ஜெயலலிதா நினைத்த திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம்:

சேலம், மார்ச் 13–
ஜெயலலிதா என்னென்ன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்தாரோ அத்தனை திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் கூறினார்.
சேலம் மாவட்டத்தில் உழைக்கும் பெண்களுக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கும் விழா சேலம் சோனா பொறியியல் கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது.
விழாவில் மாவட்ட கலெக்டர் ரோஹிணி பாஜிபாகரே வரவேற்றார். சேலம் பாராளுமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, ஜி.வெங்கடாசலம், ஏ.பி.சக்திவேல், வெற்றிவேல், மருதமுத்து, சின்னதம்பி, ராஜா, மனோன்மணி, சித்ரா, தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கிகளின் தலைவர் ஆர்.இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு உழைக்கும் பெண்கள் 550 பேருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:– 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அம்மா உழைக்கும் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்குவதற்கு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். ஆனால் அம்மாவின் மறைவிற்குப்பிறகு அந்த திட்டம் செயல்படுத்தப்படுமா என்ற ஐயம் சிலருக்கு ஏற்பட்டது. அந்த ஐயத்தை போக்கும் விதமாக அம்மாவினுடைய அரசானது உழைக்கும் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனத்தை சிறப்பான முறையில் வழங்கி வருகிறது என்பதை இத்தருணத்தில் பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜெயலலிதா திட்டங்களை
நிறைவேற்றுகிறோம்
அம்மா என்னென்ன திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என நினைத்தார்களோ அத்தனை திட்டங்களையும் இப்பொழுது உள்ள அம்மாவின் அரசானது சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது.
அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் விழா மற்றும் அம்மாவின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு 70 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழாவிற்கு பிரதமரை அழைத்தோம். நம் அழைப்பினை ஏற்று நான் நேரிடையாக தமிழகம் வந்து இரு திட்டங்களையும் துவங்கி வைக்கிறேன் என்ற வாக்குறுதிப்படி அவரே நேரில் வந்து உழைக்கும் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனத்தை அளித்தார். அம்மாவின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு 70 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை சென்னை கலைவாணர் அரங்கில் மரக்கன்றினை நட்டு வைத்து துவக்கி வைத்தார். அம்மாவின் இந்த இரண்டு கனவு திட்டங்களை பிரதமர் துவக்கி வைத்தார் என்பதை இந்நேரத்தில் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தில் 3 லட்சத்து 30 ஆயிரம் பேர் தமிழகத்தில் அம்மா இருசக்கர வாகனம் தங்களுக்கு வழங்குமாறு பதிவு செய்துள்ளார்கள். ஆண்டுக்கு 1 லட்சம் உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்படும் என அம்மாவின் அரசு அறிவித்து வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை பிரதமர் சென்னையில் துவக்கி வைத்தார். இன்றைய தினம் சேலம் மாவட்டத்தில் முதன் முறையாக 1004 பயனாளிகளுக்கு உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது. ரூ.20,000 மானிய விலையானது இப்பொழுது ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இன்றைக்கு உழைக்கும் மகளிரின் வேலைச்சுமையினை குறைக்கும் வகையிலும், பயணத்தின் போது மகளிருக்கு ஏற்படும் இன்னல்களை தவிர்க்கும் வகையிலும் அம்மா தொலைநோக்கு பார்வையுடன் அம்மா இருசக்கர வாகன திட்டத்தை உருவாக்கினார்.இந்தியாவிலே எந்த ஒரு மாநிலத்திலும் இந்த திட்டம் கிடையாது. குறித்த நேரத்தில் மகளிர்கள் வீடு திரும்புவதற்காக இந்த திட்டத்தை செயல்படுத்தி உள்ளோம். பதிவு செய்த 3 லட்சத்து 30 ஆயிரம் பயனாளிகளுக்கு முதற்கட்டமாக தகுதி வாய்ந்த நபர்களுக்கு வழங்கப்பட்டு பின்னர் மற்ற பயனாளிகளுக்கு வழங்கப்படும் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஊரக வளர்ச்சி துறையின் மூலம் 1200 பயனாளிகளுக்கும், சமூக நலத்துறையின் மூலம் 535 பயனாளிகளுக்கும், வருவாய் துறையின் மூலம் 227 பயனாளிகளுக்கும், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் 100 பயனாளிகளுக்கும் என மொத்தம் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக 3066 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. அம்மா விட்டு சென்ற பணியினை தொய்வு இல்லாமல் சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம்.
140 ஆண்டு
இல்லாத வறட்சி
வேளாண்மைத்துறையில் 140 ஆண்டு கால வறட்சியை தமிழ்நாடு சந்தித்தது. அப்படிபட்ட நேரத்தில் கடுமையான வறட்சி நிலவியபோது கூட குடிநீர் தட்டுப்பாடு எற்படாமல் பாதுகாக்கப்பட்ட குடிநீரை மக்களுக்கு வழங்கினோம். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.2,246 கோடி மானியமாக வழங்கப்பட்டது. அதேபோல விவசாயிகளுக்கு பயிர்காப்பீட்டு திட்டத்தின் மூலம் ரூ.3,100 கோடி பெற்று தந்துள்ளோம். இந்தியாவிலேயே எந்த ஒரு மாநிலத்திலும் பயிர் காப்பீட்டு திட்டத்திற்காக இவ்வளவு பெரிய தொகை கொடுத்தது கிடையாது.
மேட்டூர் அணையானது ஜீவ நதியான காவிரி நதியிலிருந்து பெறப்படும் நீரைக்கொண்டு பெறப்படுகிறது. மேட்டூர் அணையானது 84 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்து வந்தது. ஆனால் அம்மாவின் அரசானது இப்பொழுது குடிமராமத்துத் திட்டத்தின் மூலம் வண்டல் மண் எடுக்கப்பட்டு தூர்வாரப்பட்டு வருகிறது. விவசாயிகள் இந்த வண்டல் மண்ணை எடுத்து தங்களது விளைநிலங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். தற்பொழுது தங்களுக்கு தேவையான அளவு வண்டல் மண்ணை மேட்டூர் அணையிலிருந்து எடுத்துக்கொள்ளலாம். இதன் மூலம் மேட்டூர் அணையானது ஆழப்படுத்தப்பட்டு 10 முதல் 15 டிஎம்சி நீரை சேமிக்கலாம். பருவ காலங்களில் அதிக வெள்ள நீர் வரும் பொழுது அதை தேக்கி வைத்து பயன்படுத்த முடியும்.
உணவு உற்பத்தியில்
முதல் மாநிலம்
இதனால் மழை நீரானது வீணாகாமல் தடுத்து விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பயன்படுத்த முடியும். குடிநீர் ஆதாரமாக விளங்கும் மேட்டூர் அணையானது 16 மாவட்டங்களுக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விளைச்சல் அதிகமாக உள்ளது. இதற்கு காரணம் வண்டல் மண்ணை விவசாயிகள் எடுத்து பயன்படுத்துவதினால்தான் என்பதினை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். உணவு தானிய உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது.
அதேபோல் சேலம் மாவட்டத்தில் விவசாய கடன் தள்ளுபடி திட்டம் 2016ன் மூலம் 81,223 விவசாயிகளுக்கு ரூ.408.72 கோடி பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வறட்சி நிவாரணமாக 1,41,272 விவசாயிகளுக்கு ரூ.65.7 கோடி அம்மாவின் அரசால் விவசாயிகள் நலனுக்காக வழங்கப்பட்டுள்ளது. மின்சார துறையின் மூலமாக அனைத்து வீடுகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் கைத்தறி நெசவாளர்களுக்கு 10,173 நபர்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், 76,829 விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. சமூக நலத்துறையின் மூலம் திருமாங்கல்யத்திற்கு வழங்கப்பட்ட தங்கம் 4 கிராமிலிருந்து 8 கிராமாக உயர்த்தப்பட்டதன் மூலம் 4,301 பயனாளிகளுக்கு ரூ.16.08 கோடி நிதி உதவி மற்றும் 34,408 கிராம் தங்கமும் வழங்கப்பட்டுள்ளது.
சமுதாய வளைகாப்பு
சமூக நலத்துறையின் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு அம்மா தாயாக இருந்து கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு திட்டத்தினை செயல்படுத்தினார். இந்தியாவிலேயே இத்திட்டம் தமிழகத்தில் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் சேலம் மாவட்டத்தில் 3,600 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டு சரித்திர சாதனை படைக்கப்பட்டது. குடும்ப அட்டைகளுக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தின் மூலம் 9,40,515 குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறையின் மூலம் 28,300 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளும், 25,640 மாணவ, மாணவியர்களுக்கு மிதிவண்டிகளும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாணவ, மாணவியர்களுக்கென கணித உபகரண பெட்டிகள், பாட நூல்கள், பாட குறிப்பேடுகள், வண்ணசீருடைகள் போன்ற எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
மக்கள் நலதிட்டங்கள்
உயர்கல்வி துறையின் மூலம் அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி ஆசிரியர் கல்வியியல் கல்லூரி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இலவச பேருந்து பயண அட்டை 1,12,801 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் மேட்டூர் பாதாள சாக்கடை திட்டம் தற்பொழுது நிறைவடையும் தருவாயில் உள்ளது. மேச்சேரி நங்கவல்லி காவேரி கூட்டு குடிநீர் திட்டம் இன்னும் 4 மாத காலங்களில் பயன்பாட்டிற்கு வரும். இத்திட்டத்திற்கென ரூ.158.64 கோடி அம்மாவினால் ஒதுக்கீடு செய்யப்பட்டது.நிலையான பாதுகாப்பான காவேரி குடிநீர் மேச்சேரி நங்கவள்ளி கிராமத்தில் உள்ள அத்தனை குடும்பங்களுக்கும் கிடைக்க அம்மாவின் அரசால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ஆத்தூர் நரசிங்கபுரம் காவேரி கூட்டு குடிநீர் திட்டம் தற்பொழுது பயன்பாட்டில் உள்ளது. இவ்வாறாக அம்மாவின் அரசால் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் 24,023 நபர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் ரூ.48.27 கோடி வழங்கப்பட்டுள்ளது. அம்மா நல பரிசு பெட்டகம் 19,943 ஏழை, எளிய குழந்தைகள் சுகாதாரமாக வாழ ரூ.2.75 கோடி மதிப்பிட்டில் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறையின் மூலம் 64,966 விவசாயிகளுக்கு ரூ.355.01 கோடி பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளது. நகைகடன் 3,30,150 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வட்டி மானிய தள்ளுபடியுடன் மூலம் 8,777 விவசாயிகளுக்கு ரூ.5.05 கோடி அம்மாவின் அரசால் விவசாயிகளின் நலனுக்காக வழங்கப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் பசுமை வீடுகள் திட்டத்தின் மூலம் 1900 வீடுகள் ரூ.34.19 கோடி மதிப்பீட்டில் கட்டித்தரப்பட்டுள்ளது. மேலும் தனிநபர் இல்லக்கழிப்பறை 97,799 நபர்களுக்கு ரூ.34.19 கோடி மதிப்பீட்டில் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஊரக சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் மூலம் 121 சாலைப்பணிகள் ரூ.41.31 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் நபார்டு திட்டம், தாய் திட்டம், சுய உதவிக்குழுக்களுக்கான வங்கி கடன் திட்டம் போன்ற ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதில் ரூ.374.84 கோடி சுய உதவி குழுக்களுக்கான வங்கி கடன் திட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் 4,806 நபர்களுக்கு விலையில்லா ஆடுகள் ரூ.62.52 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது. உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் மூலம் 43,059 விவசாயிகளுக்கு ரூ.47.36 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. சமூக பாதுகாப்புத்திட்டத்தின் மூலம் 43,771 முதியவர்களுக்கு ரூ.48.14 கோடி, 3381 ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3.71 கோடி, 9,386 கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு ரூ.10.32 கோடியும் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் விலையில்லா மிதிவண்டிகள் 7,054 மாணவர்களுக்கு ரூ.2.8 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பற்ற 367 மாற்றுத்தி றனாளிகளுக்கு ரூ.26.22 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
பாலங்கள்
நெடுஞ்சாலைத்துறையின் மூலம் அறிவிக்கப்பட்ட அனைத்து பாலத்திட்டங்களும் தற்பொழுது செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் திருவாக்கவுண்டனூர் பாலம் மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. விரைவில் சேலம் ஏவிஆர் சாலை சந்திப்பில் அமைக்கப்பட்டு வரும் உயர்மட்ட பாலப்பணிகள் விரைவில் மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும். மேலும் 5 ரோடு மற்றும் இரும்பாலை, சேகோசர்வ் சந்திப்பில் உயர்மட்ட பாலப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் குறைக்கப்படும். எங்கெல்லாம் பாலம் வேண்டுமோ அங்கெல்லாம் பாலப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அனைத்துப்பணிகளும் முடிவுறும் பொழுது சேலம் மாவட்டம் போக்குவரத்து நெரிசல் இல்லாத மாவட்டமாக அம்மாவின் அரசால் உருவாக்கப்படும்.
பஸ்போர்ட்
ராசிபுரத்திலிருந்து நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பிரிந்து வெண்ணந்தூர், ஆட்டையாம்பட்டி, காக்காபாளையம், இடங்கணசாலை, கே.ஆர்.தோப்பு, முத்துநாயக்கன்பட்டி வழியாக ஓமலூர் செல்வதற்கு புறவழிச்சாலைகள் அமைக்கும் பணிகள் விரைவில் துவங்கப்படவுள்ளன. அதே போல் தமிழகத்திலேயே முதல்முறையாக சேலம், மதுரை, கோவை ஆகிய 3 மாநகராட்சிகளில் ஏர்போர்ட் என்பதை போல அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய பஸ்போர்ட் நமது சேலம் மாவட்டத்தில் அரபிக்கல்லூரி அருகில் அமைக்கப்படவுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் துவங்கப்படும். இந்தியாவிலேயே இரண்டாவதாக சேலம் முதல் சென்னை வரை 8 வழி பசுமைச்சாலை ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சேலம், திருவண்ணாமலை, செங்கம் வழியாக நேரிடையாக 3 1/4 மணி நேரத்தில் விரைவாக செல்லும் வகையில் அமைக்கப்படவுள்ளது. அதே போல் திருச்செங்கோடு, சங்ககிரி வழியாக ஓமலூர் வரை மற்றும் நாமக்கல்லிலிருந்து திருச்சி வரை 4 வழிச்சாலை அமைக்கப்படவுள்ளது. மேலும் பவானி, மேட்டூர், தொப்பூர் வரை 4 வழிச்சாலைஅமைக்கப்படவுள்ளது. இவ்வாறாக இச்சாலைகளெல்லாம் விரிவுப்படுத்தப்படும்பொழுது சேலம் மாவட்டம் போக்குவரத்து நெரிசல் இல்லாத மாவட்டமாக அம்மாவின் அரசால் உருவாக்கப்படும்.
ரூ.300 கோடியில்
குடிமராமத்து பணி
குடிமராமத்து திட்டத்தின் மூலமாக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 1,535 ஏரிகள் பணி நிறைவடைந்து ஆழப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் மீண்டும் கோரிக்கை வைத்ததின் பேரில் மேலும் சுமார் 2,000 ஏரிகள் குடிமராமத்து திட்டத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு மேலும் 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏரிகளிலிருந்து அள்ளப்படும் வண்டல் மண்ணானது விவசாயிகளின் விளைநிலங்களுக்கு இயற்கை உரமாக பயன்படும்.ஏரிகளை ஆழப்படுத்தும் பொழுது நீர் அதிகமாக சேமிக்கப்படுகிறது.மேலும் ஆங்காங்கே தடுப்பணை கட்டுவதற்காக 3 ஆண்டு திட்டத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பருவ காலங்களில் பெய்கின்ற மழைநீர் கடலில் கலந்து வீணாகாமல் தடுப்பணை கட்டி சேமிப்பதின் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயரும். இந்த ஆண்டு இதற்காக 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அம்மாவின் அரசின் மூலம் சேலம் மாவட்டத்தில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. மேலும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிகைகளின் அடிப்படையில் சேலம் மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் அம்மா அரசால் மேற்கொள்ளப்படும்.
அம்மா அறிவித்த அத்தனை திட்டங்களும் அம்மாவின் அரசால் செயல்படுத்தப்பட்டு தற்பொழுது ஓராண்டு நிறைவடைந்து வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டு அடியெடுத்து வைக்கிறது. மேலும், பல்வேறு புதிய திட்டங்கள் அடிக்கல் நாட்டப்பட்டு துவக்கி வைக்கப்பட்டுள்ளன.
தொழில்முதலீட்டாளர்
மாநாடு
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா 32 மாவட்டங்களிளும் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொது மக்களின் கோரிகைகள் நிறைவேற்றும் வகையில் அங்கே புதிய திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் அனைத்து கோப்புகளுக்கும் விரைவில் தீர்வுகாணப்பட்டு வருகின்றன. தொழில் வளம் பெருகுவதற்காக தொழில்முதலீட்டாளர் மாநாட்டை ஜனவரி 2019–ல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் படித்த எண்ணற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். அம்மா தொழில் முதலீட்டாளர் மாநாட்டை சென்னையில் நடத்தி 62 ஆயிரம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. அதேபோல் விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள் ஆகிய அத்தனை பேரின் நலன்களும் பேணி காக்கும் அரசாகவும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் அரசாகவும் இருக்கும். அம்மாவின் அரசு மக்களுடைய அரசு, எந்த சூழ்நிலையிலும் மக்களுடைய பிரச்சனைகளை முழுமையாக தீர்க்கக்கூடிய அரசாக அம்மாவின் அரசு திகழும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் மேயர் சவுண்டப்பன், அண்ணா தி.மு.க. பகுதி செயலாளர்கள் தியாகராஜன், சண்முகம், சரவணன், யாதவமூர்த்தி, மாநகர் மாவட்ட துணை செயலாளர் ஏ.கே.எஸ்.எம்.பாலு, பொதுக்குழு உறுப்பினர் எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, சோனா கல்லூரி தாளாளர் வள்ளியப்பா, அய்யம்பெருமாம்பட்டி நகர கூட்டுறவு கடன் சங்க தலைவர் பி.பழனி உள்பட கூட்டுறவு வங்கி தலைவர்கள், முன்னாள் கவுன்சிலர்கள், அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக சோனா பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரக்கன்றுகளை நட்டார்.