குரங்கணி தீ விபத்தின்போது பணியில் இருந்த வன அதிகாரி சஸ்பெண்ட்

உத்தமபாளையம்,மார்ச்.13–

குரங்கணியில் தீ விபத்து நடந்தபோது பணியில் இருந்த ஜெய்சிங் என்ற வன அதிகாரி சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். போடி அருகில் உள்ள குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். 26 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெல்லியை சேர்ந்த வனத்துறை அதிகாரி முருகானந்தம் தலைமையில் சென்னை மற்றும் தேனியை சேர்ந்த வனத்துறையினர் இன்று தீ விபத்து நடந்த பகுதிகளை ஆய்வு செய்தனர். விபத்து நடந்ததற்கான காரணம் மற்றும் அவர்களுக்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடத்தினர்.

இதனிடையே தீவிபத்து நடந்தபோது பணியில் இருந்த ஜெய்சிங் என்ற வன அதிகாரி சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து வனத்துறையினர் தெரிவிக்கையில், 3 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு கொண்ட தேனி மாவட்ட வனப் பகுதியை கண்காணித்து பராமரிக்க 107 பேர் பணியில் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 57 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.

சென்னையில் இருந்து வந்த மலையேற்ற குழு வனத்துறையினரிடம் அனுமதிபெற்றதாக கூறுவது தவறு. ஏனெனில் யாருக்கும் மலையேற்ற பயிற்சியில் உரிய வழிகாட்டிகள் இல்லாமல் அனுமதி கொடுக்கப்படமாட்டாது. மேலும் தொடர்ந்து தீ எரிந்து வந்த நிலையில் வனப்பகுதிக்குள் செல்ல வனத்துறையினரால் எப்படி அனுமதி அளிக்க முடியும். மலையேற்ற பயிற்சிக்கு சென்றவர்கள் 10-ந் தேதி இரவே சென்று வனப்பகுதியில் தங்கி உள்ளனர்.

இதற்கு வனத்துறையினரின் குடும்பத்தினருக்குகூட அனுமதி கிடைக்காது. இவர்கள் அனுமதியின்றி சென்றதால்தான் 2 நாட்கள் வனப்பகுதியில் தங்கி இருந்துள்ளனர். தற்போது நடந்த விபத்துதான் தேனி மாவட்டத்தில் நடந்த மிகப்பெரிய உயிரிழப்பாகும்.

சென்னையை சேர்ந்த சிலர் மலையேற்ற பயிற்சிக்கு அழைத்து செல்வதாக ஆன்லைன் மூலம் பலரை அழைத்து ஒரு நபருக்கு ரூ.5 ஆயிரம் கட்டணம் வசூலிக்கின்றனர். குரங்கணி வரை வந்து விட்டு சுற்றி பார்க்க செல்வதாக கூறி மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டபோது ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக இதனை கண்காணிக்க முடிவதில்லை.

அவ்வாறு சென்ற குழுவினர்தான் தற்போதும் விபத்தில் சிக்கி உள்ளனர். மலையேற்ற பயிற்சிக்கு செல்பவர்களுக்கு உதவுவதற்காக மலை கிராமங்களில் சில இளைஞர்கள் உள்ளனர். அவர்கள் ஒரு குழுவிடம் ரூ.5 ஆயிரம் வரை பணம் வசூல் செய்து வருமானம் பார்த்து வருகின்றனர்.

இதுபோன்ற தவறான வழிகாட்டிகளால் விபத்து நடந்து வருகிறது. வரும் காலங்களில் இதுபோன்ற விபத்து நடைபெறாமல் இருக்க கூடுதல் பணியாளர்களை நியமிக்க வனத்துறையினர் முன்வர வேண்டும் என்று தெரிவித்தனர்.