கவிஞர் முத்துலிங்கம் பேச்சு ‘‘எம்.ஜி.ஆர் என்பது மூன்றெழுத்து: அம்மா என்பதும் மூன்றெழுத்து; அதுதான் அண்ணா தி.மு.க.வின் ஆயுத எழுத்து’’

வேலூர், மார்ச். 12–

‘‘எம்.ஜி.ஆர். என்பதும் அம்மா என்பதும் மூன்றெழுத்து. இதில் எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்துத்தான் அன்றைக்கும் இன்றைக்கும் அண்ணா தி.மு.கவின் ஆயுத எழுத்தாக விளங்குகின்றது. எம்.ஜி.ஆரும் அம்மாவும் இல்லையென்றால் இன்றைக்கு இருக்கும் அண்ணா தி.மு.க. பிரமுகர்களில் பலர் அநாதைகளாக ஆகியிருப்பார்கள்’’ என்று வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகம் நடத்திய எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் முத்துலிங்கம் பேசினார்.

இந்நாட்டின் நிலப்பரப்பை விட எம்.ஜி.ஆரின் மனப்பரப்பு பெரியது. இவரைப் போல் ஒரு தலைவர் இதுவரைக்கும் பிறந்ததில்லை. இனிப் பிறப்பார் என்று சொல்வதற்கும் உறுதியில்லை. மக்கள் மனங்களில் மாறாமல் மணம் வீசிக்கொண்டிருக்கிற வாடாத வசந்த முல்லை எம்.ஜி.ஆர் என்றும் முத்துலிங்கம் கூறினார்.

விழாவிற்கு வி.ஐ.டி. வேந்தரும் முன்னாள் அமைச்சருமான ஜி.விசுவநாதன் தலைமை வகித்தார். இரண்டு நாள் நடந்த விழாவில் 2ம் நாளில் எம்.ஜி.ஆருடன் திரைப்படங்களில் பங்கேற்ற பல கலைஞர்களை அழைத்துப் பேச வைத்து சிறப்பு செய்தார் விசுவநாதன்.

இவ்விழாவில் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், நடிகைகள் லதா, வாணிஸ்ரீ, சச்சு, ரமாபிரபா, பேபி இந்திரா, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். இதில் முத்தாய்ப்பாக அவையோரின் கைத்தட்டல்களுக்கு இடையே திரைப்பாடலாசிரியரும், முன்னாள் அரசவைக் கவிஞரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கவிஞர் முத்துலிங்கம் எழுச்சியுரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:–

மலர்களில் சிறந்தது தாமரை, நதிகளில் சிறந்தது கங்கை, மலைகளில் சிறந்தது இமயம், மனிதர்களில் சிறந்தவர் எம்.ஜி.ஆர். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சி பூவைப்போல் நூற்றாண்டுகளுக்கு ஒரு முறை தோன்றக் கூடிய தலைவர்களில் அல்லது மனிதர்களில் ஒருவர் தான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.

குறிஞ்சி மனம் பரப்பிய கொடைக்கானல்

குறிஞ்சி மனம் படைத்த தலைவர்கள் நிறைந்திருக்கும் இந்நாட்டில் குறிஞ்சி மனம் பரப்பிய கொடைக்கானலாகத் திகழ்ந்தார். நேருக்கும் காந்திக்கும் நிகரான செல்வாக்கைப் பாருக்குள் பெற்றிருந்த பண்பான தலைவர் இவர். எடுக்கும் பழக்கமுள்ள எத்தனையோ கைகளிடையே கொடுக்கும் பழக்கமுள்ள கொடை கைகள் இவர் கைகள். கொடை குணமும் படைக் குணமும் கூடப் பிறந்த இரட்டைக் குணங்களாகக் கொண்டிருந்தவர் அவர்.

மூன்றெழுத்து அதிசய மனிதர் எம்.ஜி.ஆர் என்று வி.ஐ.டி. வேந்தரும் முன்னாள் அமைச்சருமான ஜி.விசுவநாதன் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்துத் தான் இன்னமும் மக்கள் மனதில் அழியாமல் வாழ்கின்ற உயிரெழுத்தாகவும் உயிர்மெய் எழுத்தாகவும் உலா வருகிறது. அந்த மூன்றெழுத்து தான் அன்றைக்கும் இன்றைக்கும் அண்ணா தி.மு.க.வின் ஆய।த எழுத்தாகத் திகழ்கிறது. அந்த எழுத்துத் தான் எதிரிகளின் ஆயுதங்களைத் தாங்குகின்ற கேடயமாகவும் திகழ்கிறது.

அம்மா என்பதும் மூன்றெழுத்துத் தான். ஆக எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்தும் அம்மா என்ற மூன்றெழுத்தும் இல்லையென்றால் இன்றைக்கு அண்ணா தி.மு.க. பிரமுகர்களாக இருப்பவர்களில் பலர் அநாதைகளாக ஆகியிருப்பார்கள்.

உலக இருட்டை நீக்க சூரிய வெளிச்சம்

பூமி குளிர வேண்டும் என்பதற்காக மேகம் பொழிவதைப் போல காடுகரைகள் செழிக்க வேண்டுமென்பதற்காக நதிகள் பாய்ந்தோடிச் செல்வதைப் போல உலக இருட்டை நீக்குவதற்காகச் சூரிய வெளிச்சம் தோன்றுவதைப் போல ஏழை எளிய மக்கள் வாழ்வில் ஒளி விளக்கு ஏற்றி வைக்க வேண்டுமென்பதற்காக அண்ணா தி.மு.கவைப் புரட்சித் தலைவர் தோற்றுவித்தார்.

அதன் மூலம் அடையாளம் இல்லாமல் இருந்தவர்களுக்கெல்லாம் ஓர் அடையாளத்தைக் கொடுத்தார். பேர் தெரியாமல் இருந்தவர்களை எல்லாம் சமுதாயத்தில் பெரிய மனிதர்களாக்கினார். அதுபோல் அம்மாவும் ஊருக்கு மட்டுமே தெரிந்தவர்களாக இருந்தவர்களை எல்லாம் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், அமைச்சர்களாக்கி உலகளறியச் செய்தார். இவர்கள் இருவரும் கீழ் மட்டத்திலிருந்தவர்களை எல்லாம் கை கொடுத்து மேல் மட்டத்திற்கு உயர்த்தியவர்கள்.

நமக்கெல்லாம் ரேகை, எம்.ஜி.ஆருக்கோ ஈகை

ஒருவன் நடந்து வரக்கூடிய நடையை வைத்தே அவனது குணத்தை அறிந்துகொள்ளும் கூர்த்த மதி உடையவர் எம்.ஜி.ஆர். அவரை நாடி யாரேனும் ஒருவர் உதவி கேட்டு வந்தால் இப்படி ஒரு வந்திருக்கிறார் என்ற செய்தி அவர் காதுக்குப் போய்விட்டால் போதும் வந்தவர் வெறுங்கையோடு திரும்ப மாட்டார்.

எல்லாருக்கும் உள்ளங்கையில் இருப்பது ரேகையென்றால் எம்.ஜி.ஆருக்கு இருந்தது ஈகை. அதனால் தான் அவர் சூடினார் அனைத்திலும் வாகை.

‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் ’’ படத்திற்கு பாடல் எழுதும்போது என் மனைவிக்கு கருச்சிதைவு ஏற்பட்டுவிட்டது. டாக்டரிடம் காட்டுவதற்குப் பணமில்லை. கையில் 2 ரூபாய் தான் இருந்தது. அதைப் பேருந்துக்கு வைத்துக்கொண்டு எம்.ஜி.ஆரைப் பார்க்க சத்தியா ஸ்டுடியோவிற்குச் சென்றேன். அப்போது படப்பிடிப்பு முடிந்து காரில் ஏறி விட்டார். கார் புறப்படத் தொடங்கியது. நான் வேகமாக வந்ததைப் பார்த்துவிட்டு காரை நிறுத்தச் சொல்லி கார் அருகே என்னை அழைத்து என்ன விஷயமென்று கேட்டார்.

நான் இந்தச் செய்தியைச் சொல்லிவிட்டு, நேற்றுதான் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் கம்பெனியில் பாட்டெழுவதற்கான காட்சியைச் சொன்னார்கள். நாளைக்குத்தான் கம்போசிங் இருக்கிறது. பாட்டெழுதிய பிறகு வாங்க வேண்டிய பணத்தை நிலைமை இப்படி இருப்பதால் முன்கூட்டியே வாங்கிக் கொள்ளலாமா என்று கேட்டேன்.

அப்படி கேட்கக் கூடாது, இதற்கு முன்பு அந்தக் கம்பெனியில் நீ எழுதியிருந்தால் கேட்கலாம். நான் சொன்னதால் தான் உன்னைக் கூப்பிட்டிருக்கிறார்கள். அதனால் முன் கூட்டியே நீ கேட்டால் அது உனக்கும் அசிங்கம் எனக்கும் அசிங்கம் கேட்கக் கூடாது என்று சொல்லிவிட்டு காரில் இருந்த அவர் உதவியாளர் மாணிக்கத்திடம் டிக்கியில் இருக்கிற பெட்டியை எடுத்துக் கொண்டு வா என்று சொல்லிவிட்டு காரைவிட்டு இறங்கி என்னை மேக்கப் ரூமுக்குள் கூட்டிச் சென்றார்.

அன்றைக்கு ரூ.2000 இன்றோ ஒரு லட்சம்

இரண்டாயிரம் ரூபாயை எடுத்துக் கொடுத்து நம்ம டாக்டர் பி.ஆர். சுப்பிரமணியத்தை பார். இல்லையென்றால் நீ எந்த டாக்டரிடம் காண்பிக்கிறாயோ அவரிடம் காட்டி என்ன நிலை என்பதை என்னிடம் சொல் என்றார். அப்போது ஒரு பவுன் நானூற்று ஐம்பது ரூபாய்க்கு விற்கலாம். இரண்டாயிரம் ரூபாய்க்கு நான்கு பவுன் வாங்கலாம். இப்போது நான்கு பவுன் வாங்க வேண்டுமென்றால் ஒரு லட்சம் ரூபாயாகும். அன்றைக்கு இரண்டாயிரம் ரூபாய்க்கு இன்றைய மதிப்பு ஒரு லட்சம்.

மேக்கப்பைக் கலைத்துவிட்டு காரில் ஏறி உட்கார்ந்து விட்டால் காரை விட்டிறங்கி மேக்கப் அறைக்குள் வரமாட்டார். இது அவர் இயல்பு. நான் சொன்னவுடன் காரை விட்டு இறங்கி மேக்கப் அறைக்குள் வந்தாரென்றால் எனக்காக வந்தார் என்று சொல்ல மாட்டேன். என்னுடைய நிலைமையில் யார் வந்து சொல்லியிருந்தாலும் அப்படித்தான் உதவி செய்திருப்பார். ஏன் என்றால் அது தான் இரக்கக் குணம். அது தான் மனித நேயம். இந்த மனித நேயம் இன்று எத்தனை பேருக்கு இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.