‘ஏர்செல்’ நிறுவனத்தில் இருந்து வேறு சேவைக்கு மாறும் எளிய வழி

சென்னை, மார்ச் 13–

சிக்னல் இல்லாத நிலையில், குறுஞ்செய்தி அனுப்பி ‘போர்ட்’ எண் பெற முடியாத நிலையில், ஏர்செல் வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனத்துக்கு மாறுவது எப்படி என்பது குறித்து, எளிய வழியை தெரிந்து கொள்வோம்.

ஏர்செல் நிறுவனம், தமிழக வாடிக்கையாளர்களை பொறுத்தவரை, வாடிக்கையாளர்களிடம் அதிக நம்பிக்கையை பெற்ற நிறுவனங்களில் ஒன்றாக இருந்தது. 1999 ல் தமிழகத்தில் தொடங்கப்பட்ட ஏர்செல் நிறுவனம், இந்தியா முழுவதும் 23 தொலைத்தொடர்பு வட்டங்களில் தனது சேவையை விரிவாக்கி செயல்பட்டு வந்தது.

பாதிப்பு வந்தது எப்படி?

2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜியோ நிறுவனம் தனது 4 ஜி சேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. ஏறத்தாழ ஓராண்டு காலத்திற்கு பேசுவதற்கான கட்டணம், குறுஞ்செய்தி, இணைய சேவை ஆகியவற்றை இலவசமாகவே அளித்து வந்தது. இதனால், பல்வேறு மொபைல் நிறுவனங்களும், வருவாய் இழப்பில் சிக்கி கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில் ஏர்செல் நிறுவனம் அதிகமாகவே பாதிக்கப்பட்டது .

அதுவரையில் ஒவ்வொரு காலாண்டுக்கும் ரூ.250 கோடி வரை லாபம் பார்த்து வந்த நிறுவனம், ஜியோ வருகைக்கு பிறகு, ஒவ்வொரு காலாண்டுக்கும் ரூ.5 கோடி வரையில் இழப்பை சந்தித்தது. எனவே, தனது ஊழியர்கள் 5 ஆயிரம் பேருக்கு சம்பளம் கொடுப்பது மற்றும் வேறு செலவினங்களை செய்ய முடியாமல் தவித்தது. இந்நிலையில் ரூ.15 ஆயிரம் கோடி ரூபாய் கடனை செலுத்த முடியவில்லை என்று தனது சேவையை நிறுத்திக்கொள்வதாக டிராயிடம் கடிதம் கொடுத்து விட்டது. ஏர்செல் வாடிக்கையாளர்கள், வேறு நிறுவனத்துக்கு மாறிக்கொள்ள வசதியாக, ஏப்ரல் மாதம் 15 ந்தேதி வரை சேவையை தொடர வேண்டும் என்று ‘டிராய்’ அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில், ஏர்செல் வாடிக்கையாளர்கள், தனக்கு பிடித்த வேறு தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு மாறி வருகின்றனர். ஆனால், அதிலும் சிலருக்கு சிக்கல் எழுந்து வருகிறது. பல இடங்களில், ஏராளமான ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு, சிக்னல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதனால், தனது செல்போன் எண்ணை மாற்றாமல், வேறு நிறுவனத்துக்கு மாறும் எம்என்பி (Mobile Number Portability) வசதியை பெற, குறுஞ்செய்தி அனுப்ப முடியாமல் தவிக்கின்றனர்.

மாறும் வழிமுறைகளில் சிக்கல்

வங்கி, ரேஷன் கடை என பலவற்றுக்கும் தங்கள் ஏர்செல் எண்ணை கொடுத்திருக்கும் வாடிக்கையாளர்கள், ‘போர்ட்’ எண் இல்லாமல், வேறு நிறுவனத்தில், அதே எண்ணை பெற முடியாது என்பதால், பாதிக்கப்பட்டுள்ளனர். ஏர்செல் சேவை நிலையங்களில் ஏராளமான கூட்டம் இருப்பதால், பணிக்கு செல்வோர் மற்றும் குடும்ப பெண்கள், ஏர்செல் வாடிக்கையாளர் சேவை மையத்தில் காத்திருந்து பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

ஏர்செல் சிக்னல் கிடைக்காதவர்கள், தங்கள் போனின் நெட்வொர்க் அமைப்பில், ஏர்டெல் உள்ளிட்ட மற்ற நிறுவன நெட்வொர்க்கை தேர்ந்தெடுத்து, பின்னர் குறுஞ்செய்தி அனுப்பலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், பல இடங்களில் அதுவும் செயல்படவில்லை என்று வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.

மற்றொரு வசதியாக, ஏர்செல் வாடிக்கையாளர் சென்னை எண்ணான 98410 12345 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு, ஐவிஆர் எனப்படும் தானியங்கி சேவையில், தனது ஏர்செல் எண் மற்றும் தனது ‘ஏர்செல் சிம் கார்டின்’ கடைசி 5 எண்களை உள்ளீடு செய்வதன் மூலம் போர்ட் எண் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிலும் சிலருக்கு பிரச்சினை இருப்பதாக கூறுகிறார்கள்.

உறுதியாய் ‘போர்ட்’ எண் கிடைக்கும்

இவை எல்லாவற்றையும் விட, 100 விழுக்காடு உறுதியாக ‘போர்ட்’ எண் பெறும் வழியைதான் நாம் இப்போது பார்க்க போகிறோம். இதற்கு இணையப் பயன்பாடு உள்ள செல்போன் அல்லது கணினி இருந்தால் போதும்.

https://ekyc.aircel.com:444/ekyc/genUPC.html

என்ற இணைய முகவரிக்கு சென்று, அதில் கேட்கப்பட்டுள்ள செல்பேசி எண் பெட்டியில் உங்கள் ஏர்செல் செல்பேசி எண்ணை பதிய வேண்டும்.

அதற்கு அடுத்ததாக உள்ள ஒரு பெட்டியில், உங்கள் ஏர்செல் சிம் கார்டில் உள்ள கடைசி 5 எண்களை உள்ளிட வேண்டும். பின்னர், ஜெனரேட் யூபிசி (Unique portability code) என்பதை சொடுக்கினால், உங்களுக்கு யூபிசி எனப்படும் ‘போர்ட்’ எண் கிடைக்கும். ஏர்செல் சர்வர்களை அதிகம் பேர் உபயோகிப்பதால் சிலவேளைகளில் உடனே கிடைக்காமல் இருக்கும். அடுத்தடுத்து முயற்சி செய்தால், சில நிமிடங்களில் உங்களுக்கு போர்ட் எண் கிடைத்துவிடும். அந்த எண்ணை, நீ்ங்கள் விரும்பும் வேறு செல்போன் நிறுவனங்களுக்கு கொடுத்து, உங்கள் செல்போன் எண்ணோடு, எளிமையாக மாறிக்கொள்ளலாம்.