உத்தரகாண்டில் பள்ளத்தாக்கில் பயணிகள் பேருந்து கவிழ்ந்தது, 11 பேர் பலி

டேராடூன்,மார்ச்.13–

உத்தரகாண்ட் மாநிலத்தில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்.

உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தின் டேகாத் பகுதியில் இருந்து நைனிடால் மாவட்டம் ராம் நகருக்கு ஒரு பேருந்து இன்று காலை புறப்பட்டுச் சென்றது. காலை 10 மணியளவில் ராம்நகர்–-அல்மோரா சாலையில் உள்ள டோத்தம் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடியது.

பின்னர் சாலையில் இருந்து விலகிய பேருந்து, மலையில் இருந்து உருண்டு பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதில் பஸ் கடுமையாக சேதம் அடைந்தது. மாநில பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் மாவட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்த கோர விபத்தில், 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 13 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.