ஜியோ டிவியில் அறிமுகமாகும் புதிய வசதி

மும்பை,மார்ச்.12–

ஜியோ டிவி ஆப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு புதிய இன்டராக்டிவ் அனுபவம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோ டிவி ஆப் தனது வாடிக்கையாளர்களுக்கு இன்டராக்டிவ் ஸ்போர்ட்ஸ் எனும் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. புதிய சேவை இலங்கையில் நடைபெறும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரையொட்டி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

இலங்கை முத்தரப்பு கிரிக்கெட் தொடர் இந்தியாவில் ஜியோ டிவி செயலியில் மட்டுமே பார்த்து ரசிக்க முடியும். புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், ஜியோ டிவி செயிலியிலேயே விளையாட்டுடன் ஒன்றிய அனுபவத்தை பெற முடியும்.

இந்தியாவில் விளையாட்டு பார்த்து ரசிக்கப்படும் விதத்தையே இன்டராக்டிவிட்டி ஸ்போர்ட்ஸ் அனுபவம் முற்றிலுமாக மாற்றிவிடும். ஜியோ செயலியில் வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக தகவல்கள் தொடர்ந்து வழங்கப்படுகிறது. கூடுதலாக வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

இலங்கையில் நடைபெறும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரை ஐந்து வித கேமரா கோணங்களிலும், ஆடியோவினை மைதானத்தில் உள்ள சத்தம், ஸ்டம்ப் மைக் உள்ளிட்டவற்றில் இருந்து தேர்வு செய்யும் வசதி மற்றும் வாடிக்கையாளர்கள் விரும்பும் மொழியில் வர்ணனை உள்ளிடவற்றை தேர்வு செய்ய முடியும்.

இத்துடன் ஒற்றை கிளிக் செய்து முன்னணி கிரிக்கெட் வல்லுநர்கள், வர்ணனையாளர்கள், ஸ்கோர் மற்றும் இதர தகவல்களை பார்க்க முடியும். நேரலையின் போது சில இடங்களில் பார்க்காமல் விட்ட பந்து அல்லது சிக்சரை பேக்வேர்டு சென்று பார்க்கும் வசதியும் செயலியில் வழங்கப்படுகிறது.