இந்தியாவில் பஜாஜ் டாமினர் 400 விற்பனை நிறுத்தம்

புதுடெல்லி,மார்ச்.12–

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் டாமினர் 400 ஏ.பி.எஸ். இல்லாத மாடலின் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பஜாஜ் ஆட்டோ நிறுவனம் டாமினர் 400 ஸ்போர்ட்ஸ் க்ரூசர் மோட்டார் சைக்கிள் மாடலை 2016-ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்தது. டூயல் சேனல் ஏ.பி.எஸ். (ABS) மற்றும் நான் ஏ.பி.எஸ். (Non ABS) என இருவித மாடல்களில் டாமினர் 400 இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.

தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி டாமினர் 400 மோட்டார் சைக்கிள் ஏ.பி.எஸ். வசதி இல்லாத மாடலின் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மோசமான விற்பனையின் காரணமாக ஏ.பி.எஸ். இல்லாத மாடல் விற்பனை நிறுத்தப்படுவதாக கூறப்படுகிறது. டாமினர் சீரிஸ் மோட்டார் சைக்கிள் வாங்குவோரில் 80 சதவிகிதம் பேர் ஏ.பி.எஸ். வசதி கொண்ட மாடல்களையே தேர்வு செய்வதாக கூறப்படுகிறது. அதிகளவு வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யாத நிலையில் ஏ.பி.எஸ். வசதி இல்லாத மாடலின் விற்பனையை இந்தியாவில் நிறுத்த பஜாஜ் ஆட்டோ முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏ.பி.எஸ். வசதி தவிர இரண்டு மாடல்களின் சிறப்பம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. டாமினர் 400 மாடலில் புல் எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டிஸ்க் பிரேக், ஸ்லிப்பர் கிளட்ச், டூயல் சேனல்-ஏ.பி.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

பஜாஜ் டாமினர் 400 மாடலில் 373சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு, பியூயல் இன்ஜெக்டெட் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 35 பி.ஹெச்.பி. பவர், 35 என்.எம். டார்கியூ மற்றும் 6- ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. சமீபத்தில் பஜாஜ் ஆட்டோ 2018 டாமினர் 400 மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது.

புதிய நிறம், தங்க நிற அலாய் வீல், முன்பக்கம் டெலிஸ்கோபிக் போர்க், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.