அவை அறிந்து பேச வேண்டும்

அரசு கலை கல்லூரி வளாகத்தில் வரலாற்றுத் துறையின் சார்பில் ஆய்வரங்கம் நடந்து கொண்டிருக்கிறது.
சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட பல்வேறு வரலாற்றுதுறை நிபுணர்களும் கல்லூரி முதல்வரும் துறை தலைவரும் ­ பல்வேறு கல்லூரிகளில் இருந்து வந்திருந்த பேராசிரியர்களும் கலந்து கொண்டு தங்களது வரலாற்று குறிப்புகளை விளக்கி பேசினர்.
அப்போது அந்த அரசு கலை கல்லூரியின் வரலாற்றுத்துறை உதவி பேராசியர் கந்தசாமியும் அந்த ஆய்வரங்கத்தில் கலந்து கொண்டு ‘‘சுதந்திர இந்தியாவின் மாண்புகள்’’ என்ற தலைப்பில் ஆங்கிலயர்கள் இந்தியர்களை எவ்வாறு அடிமைபடுத்தி வைத்திருந்தனர் என்பதையும் சுதந்திர போராட்டங்கள் குறித்தும் தற்போது சுதந்திர இந்தியாவின் வளர்ச்சி குறித்தும் பேசினார்.
அவரது பேச்சைக் கேட்டு அந்த அரங்கத்தில் இருந்தவர்கள் பலத்த கரகோஷம் எழுப்பினர்.
அவர் பேச்சை முடித்ததும் மேடையில் இருந்த சிறப்பு விருந்தினர்களும் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் அவருக்கு கைக் கொடுத்து பாராட்டு தெரிவித்தனர்.
அந்த அளவுக்கு மிக அருமையாக பேசினார் உதவி பேராசிரியர் கந்தசாமி.
நிகழ்ச்சி முடிந்ததும் கந்தசாமி மேடையிலிருந்து கீழே இறங்கி வந்தார். அப்போது அவருடன் பணியாற்றும் சக பேராசிரியர்களும் மாணவர்களும் பாராட்டினர்.
அப்போது கந்தசாமியை அவரது நண்பரும் அந்த கல்லூரியில் தமிழ் துறையில் பணியாற்றும் பேராசிரியருமான சந்திரன் சந்தித்தார்.
கந்தசாமி நீ நல்ல பேச்சாளன் என்று கேள்விபட்டு இருக்கேன். ஆனால் இந்த அளவுக்கு சிறப்பா பேசுவேன்னு எனக்கு இப்பத்தான் தெரியுது.
நீ பேசுவதை கேட்டா கேட்டுக் கிட்டே இருக்காலாம் போலு இருக்கு. அந்த அளவுக்கு சிறப்பா பேசுன.
அது மட்டுமல்லாமல் நீ சொல்லவந்த விஷயத்தை எல்லாருக்கும் புரியும் படி மிக அழகாக எளிமையான வார்த்தைகளால் பேசியதை கேட்கும் போது சுதந்திர போராட்ட நிகழ்ச்சிகள் நம் கண் முன் நடப்பது போன்றே இருந்தது. அந்த அளவுக்கு அருமையாக பேசினாய் என்று பாராட்டினார்.
ரொம்ப நன்றி சந்திரன் என்று கூறினார்.
உடனே சந்திரன், கந்தசாமி சார் நீங்க வேற எங்காவது நிகழ்ச்சியில் பேசினால் என்னை அவசியம் அழைத்து போக வேண்டும். உங்கள் பேச்சை கேட்க நான் ஆர்வமாக இருக்கிறேன் என்று கூறினார்.
நான் எங்காவது பேச சென்றால் உன்னை அவசியம் அழைத்து செல்வேன் என்று கந்தசாமி கூறினார்.
நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் சென்று விட்டனர்.
மறுநாள் கந்தசாமி கல்லூரியில் இருந்த போது, கல்லூரி முதல்வர் அழைப்பதாக உதவியாளர் கூறினார்.
அதைத் தொடர்ந்து கந்தசாமி முதல்வரை சந்திக்க சென்றார்.
அப்போது கல்லூரி முதல்வர், நேற்று நடந்த நிகழ்ச்சியில் நீங்கள் பேசியது ரொம்ப நல்லா இருந்தது.
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்கத்து ஊரில் உள்ள தனியார் கல்லூரி வரலாற்று பேராசியர் தங்களது கல்லூரியில் நடக்கும் வரலாற்று துறை நிகழ்ச்சியில் நீங்கள் அவசியம் கலந்து கொண்டு பேச வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார்.
உங்களுக்கு சம்மதம் என்றால் நீங்கள் சென்று கலந்து கொள்ளலாம் என்று கூறினார்.
முதல்வர் கூறியதை கேட்டதும் கந்தசாமி மகிழ்ச்சி அடைந்தார்.
உடனே அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு சம்மதம் தெரிவித்தார்.
மறுநாள் காலை 11 மணிக்கு நிகழ்ச்சி நடப்பதாக முதல்வர் கூறினார்.
இதைத் தொடர்ந்து கந்தசாமி மாலை வீட்டுக்கு சென்றதும் அந்த நிகழ்ச்சியில் பேசுவதற்கு தேவையான குறிப்புகளை எடுக்கத் தொடங்கினார்.
அப்போது கந்தசாமி, தனது நண்பர் சந்திரனை உடன் அழைத்துச் செல்லலாம் என்று முடிவு செய்து, இது குறித்து சந்திரனிடம் கேட்டார்.
சந்திரனும் அதற்கு சம்மதம் தெரிவித்தார்.
மறுநாள் காலை 9 மணிக்கு காலை உணவை முடித்துக் கொண்டு கந்தசாமி வீட்டில் தயாராக இருந்தார்.
அப்போது அங்கு வந்த சந்திரன், தன்னுடைய மோட்டார் சைக்கிளில் கந்தசாமியை அழைத்துக் கொண்டு நிகழ்ச்சி நடக்கும் பக்கத்து ஊருக்கு சென்றார்.
அந்த ஊரின் எல்லை பகுதிக்குள் செல்லும் போது மணி பத்து.
நிகழ்ச்சி 11 மணிக்கு தான் தொடங்குவதால் கொஞ்சம் மெதுவாக செல்லலாம் என்று கந்தசாமி கூறினார்.
உடனே சந்திரன், டீ சாப்பிட்டு செல்லலாமா? என்று கேட்டார்.
கந்தசாமி சம்மதம் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து அந்த வழியாக டீக் கடை இருக்கிறதா? என்று பார்த்துக் கொண்டே சென்றனர்.
அங்கு ஒரு சின்ன டீக் கடை ஒன்று இருந்தது. அதன் வாசலில் பந்தல் போடப்பட்டு அதில் 5 பேர் உட்கார்ந்து இருந்தனர்.
மோட்டார் சைக்கிளை அந்த டீ கடையின் முன் நிறுத்தினார் சந்திரன்.
அங்கு உட்கார்ந்து இருந்தவர்களை பார்த்தால் கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் போல் இருந்தது.
அவர்கள் அருகில் சந்திரனும் கந்தசாமியும் அமர்ந்து டீ போடும்படி கூறினார்.
கடையில் இருந்த மாஸ்டர் டீ போட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அருகில் இருந்தவர்கள் அன்றைய செய்தித்தாளில் உள்ள செய்திகளை பார்த்து தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
அரசியலுக்கு புதுசு புதுசா ஆள் வந்துக்கிட்டே இருக்காங்க. எல்லாரும் நேர முதலமைச்சர் சேருக்குத் தான் போகனும்னு சொல்றாங்க.
அத விடுடா…. அங்க டெல்லியில் ஆட்சி செய்றவங்க ஏழைகளை காக்கும் அரசுன்னு சொல்லிட்டு பணக்காரங்களை எல்லாம் பாதுகாத்து, கோடி கோடியா ஏமாத்திட்டு போறாங்க.
யாரு ஆட்சிக்கு வந்தாலும் மக்களை ஏமாற்றி அவங்க தான் சம்பாதித்துட்டு போறாங்க.
எந்த அரசியல் கட்சித் தலைவரை கேட்டாலும் அடுத்தது எங்க ஆட்சிதான் சொல்றாங்களே தவிர, எவனும் அடுத்து வந்து மக்களுக்கு என்ன செய்யபோறோம்னு சொல்லவே இல்லை.
எத்தனை கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும் நம்மைப் போன்ற கூலி தொழிலாளிகள் வாழ்க்கையில் முன்னேற்றமே இல்லை.
அட இந்த ஆட்சியை கலைத்து விட்டு பேசமா ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வந்திடலாம். அப்போவாவது இந்த கொள்ளையடிக்கும் அரசியல் வாதிகள் அமைதியா இருப்பாங்க.
அட அது வேண்டாம்டா. ஜனாதிபதி ஆட்சினா அதிகாரிகளை கையில் பிடிக்க முடியாது.
ராணுவ ஆட்சியை கொண்டு வரலாம்?
அட அது கூட வேண்டாம்.
அதற்கு பேசாமா ஆங்கிலேயர்களே ஆட்சி செய்திருந்தால் நல்லாதான் இருக்கும்.
இந்த காந்தி ஏன் தான் சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார்னு தெரியலை…
இப்படி ஒவ்வொரும் வரும் ஒரு கருத்தை கூறிக் கொண்டு இருந்தனர்.
இதை கேட்ட சந்திரனுக்கு அமைதியாக இருக்க முடியவில்லை.
கந்தசாமியை பார்த்து, சார் சுதந்திரத்தின் அருமை பெருமை தெரியாம இருக்காங்க. நீங்க கொஞ்சம் இவங்களுக்கு புத்திமதி கூறுங்கள் என்று கூறினார்.
உடனே கந்தசாமி, சந்திரனை அமைதியாக இருக்கும்படி கூறினார்.
அவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டு சந்திரனால் அமைதியாக இருக்க முடியவில்லை.
அவர்களிடம் ஏங்க இந்த சுதந்திரத்திற்காக எத்தனை பேர் உயிரை தியாகம் செய்திருக்காங்க தெரியுமா… என்று கூறினார்.
ஆனால் அவர்கள் விடுவதாக இல்லை.
சந்திரனிடம் தங்களது கருத்தை கூறி அதற்கு நியாயம் கேட்டனர்.
சந்திரன் அவர்களுக்கு பதில் கூற முற்பட்டார்.
ஆனால் கந்தசாமி அவரை தடுத்து நிறுத்தி எதுவும் பேச வேண்டாம் என்று கூறினார்.
சிறந்த பேச்சாளர். அதுவும் வரலாற்று துறை பேராசியரியரான கந்தசாமி இவர்கள் பேசுவதற்கு ஒரு வார்த்தை கூட விளக்கம் கொடுத்து பேசமாட்டேங்கிறாரே என்று சந்திரனுக்கு புரியவில்லை.
அந்த நேரத்தில் கந்தசாமி வேகவேகமாக டீயைக் குடித்துவிட்டு, அதற்குரிய ரூபாயை டீக் கடைக்காரரிடம் கொடுத்துவிட்டு வா போகலாம் என்று சந்திரனை அழைத்தார்.
சந்திரன், கந்தசாமியை நிறுத்த முயற்சித்தார்.
ஆனால் முடியவில்லை கந்தசாமி வண்டி நிறுத்திய இடத்திற்கு சென்றுவிட்டார்.
அவரை பின் தொடர்ந்து சந்திரனும் சென்றார்.
வண்டியை எடுத்துக் கொண்டு இரண்டு பேரும் கிளம்பி சென்றனர்.
சிறிது தூரம் சென்ற பின்னர் சந்திரன், கந்தசாமியிடம் ஏன் சார் அவர்களிடம் பேசாமல் திரும்பி வந்திட்டீங்க என்று கேட்டார்.
உடனே கந்தசாமி, உணர்ந்து கொள்ளக்கூடிய ஆற்றல் உள்ளவர்களின் முன்னிலையில் பேசுதல், வளரக்கூடிய பயிர் உள்ள பாத்தியில் நீர் பாய்ச்சுவது போலப் பயன் விளைக்கும். பேச தெரியாதவர்களிடம் நாமும் பேச தெரியாதவர் போல் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.
கந்தசாமியின் மவுனத்திற்கான காரணத்தை உணர்ந்த சந்திரன், வேகமாக வண்டியை ஓட்டினார்.
அவர்கள் செல்லவேண்டிய கல்லூரி வந்தது.
கல்லூரிக்குள் சென்ற கந்தசாமி அங்கு நடந்த நிகழ்ச்சியில் வரலாற்று நிகழ்வுகளை அருமையாகப் பேசினார்.
அவரது பேச்சைக் கேட்டவர்கள் கை தட்டி உற்சாகப் படுத்தினர்.