செல்போன் மூலம் கண்ணை படம் பிடித்து விழித்திரை பாதிப்பை கண்டறியும் வசதி

சென்னை, மார்ச். 10–
நீரழிவு நோயால் கண்ணில் விழித்திரை பாதித்து கண் பார்வை இழப்பு ஏற்படுகிறது. ‘டயாபடிக் ரெட்டினோபதி’, என்னும் இந்த பார்வை இழப்பு நோயை துவக்க நிலையில் கண்டுபிடித்தால் பார்வை இழப்பை தடுக்க முடியும். டாக்டர் மோகன் நீரழிவு சிகிச்சை மருத்துவமனை மற்றும் இதன் மெட்ராஸ் நீரழிவு ஆராய்ச்சி மையமும் சேர்ந்து விழித்திரை ஆராய்ச்சி செய்தனர். செல்போனில் கண்ணை படம் எடுத்தால், அதிலிருந்து விழித்திரை பாதிப்பை கண்டறியும் வசதியை டாக்டர் வி.மோகன் கண்டுபிடித்துள்ளார்.
இதுவரை கண்பார்வை குறைபாடு பற்றி விழித்திரையை கண் மருத்துவர், கண் மருத்துவமனைகள் மட்டுமே பரிசோதனை செய்து கண்டறிந்தனர். ஆனால் டாக்டர் வி.மோகன் புதிய கண்டுபிடிப்பாக விழித்திரையை செல்போன் மூலம் படம் பிடித்து, அதன் தன்மையை கண்டறியும் யந்திரத்தை உருவாக்கி உள்ளார். இந்த சாதனம் விழித்திரையின் பாதிப்பை எவ்வளவு பாதித்துள்ளது என்று கண்டறியும். இதனால் பார்வை இழப்பு பாதிப்பு உள்ளவரை இனி எளிய முறையில் கண்டுபிடிக்க முடியும் என்று டாக்டர் வி.மோகன் கண்டறிந்துள்ளார். இதற்காக ” செயற்கை நுண்ணறிவு ஐ ஆர்ட்’, என்னும் சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது.
இது விழித்திரை பாதிப்பு எவ்வளவு அளவில் உள்ளது என்று வரிசைப்படுத்துகிறது. இதன் மூலம் பார்வை இழப்பு ஏற்படும் என்பதை முன்னதாக கண்டறிந்து அறிவித்து, உடன் சிகிச்சை பெற்று, கண் பார்வையை தக்க வைத்துக் கொள்ளமுடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
டாக்டர் வி. மோகன் எழுதிய இந்த ஆராய்ச்சியை சர்வதேச ஸ்பிரிங் நேச்சர் குரூப் கண் இதழில், மெட்ராஸ் டயபடிக் ஆராய்ச்சி மையம் சீனியர் கண் சிகிச்சை நிபுணர் ஆர். ராஜலட்சுமி கட்டுரையாக வெளியிட்டுள்ளார்.
இனி ஸ்மார்ட் போன் அடிப்படையில் விழித்திரையை படம்பிடித்து, 95.8% அளவுக்கு துல்லியமாக நீரிழிவால் விழித்திரை பாதிப்பை கண்டறிய முடியும். பார்வை இழப்பு ஏற்படும் என்பதை 99.1% அளவுக்கு இனி துல்லியமாக அறிவிக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.
டாக்டர் வி.மோகன் பேசுகையில், இந்தியாவில் 5 இந்தியர்களில் ஒருவருக்கு நீரிழிவு நோயினால் கண்பார்வை பாதிப்பு ஏற்படும் என கண்றியப்பட்டுள்ளது. இது மிகவும் அபாயகரமானது ஆகும். விழித்திரை பாதிப்பை கண்டறிய அதிக கண் மருத்துவர் இல்லை. சாதனங்களும் பற்றாக்குறையாக உள்ளது. எளிமையாக செல்போன் மூலம் கண்ணை படம் எடுத்தால் உடனே விழித்திரை பாதிப்பை கண்டறியலாம் என்றார்.
இந்த மருத்துவமனை விழித்திரை சிகிச்சை பிரிவு தலைவி டாக்டர் ஆர். ராஜலட்சுமி பேசுகையில், வளரும் ஏழ்மை நாடுகளில் விழித்திரை பாதிப்பை கண்டுபிடிப்பது அதிக செலவு மற்றும் சிரமம் ஏற்பட்டது. முகாம்களிலும் கண்டுபிடிக்க சாதனங்கள் தேவைப்பட்டது.
டாக்டர் வி.மோகன் கண்டுபிடிப்பால் செல்போன் மூலம் விழித்திரை பாதிப்பை கண்டுபிடிப்பது எளிதாக உள்ளது. சிக்கன கட்டணத்தில் இனி எளிதாக விழித்திரை பாதிப்பை கண்டறிந்து, பார்வை இழப்பை தடுக்கலாம்.
ரெமிடியோ இனோவேடிவ் சொல்யூஷன்ஸ் தலைமை எக்சிகியூடிவ் அதிகாரி ஆனந்த் சிவராமன் பேசுகையில், கம்ப்யூட்டர் மூலம் கண்ணையும் விழித்திரையையும் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் மிக சிக்கன செலவாக 10ல் ஒரு பகுதி செலவாக செல்போன் கேமரா மூலம் விழித்திரையை கண்டறியும் வசதியை “ஐ ஆர்ட்” என்னும் சாப்ட்வேர் மூலம் பெரும் அளவில் பரிசோதனை செய்ய முடியும் என்றார் அவர்.
ஐநாக் நிறுவன தலைமை எக்சிகியூட்டிவ் அதிகாரி டாக்டர் கவுசல் சோலங்சி பேசுகையில், பாதுகாப்பாக, விரைவாக, துல்லியமாக கண்டறியும் “ஐ ஆர்ட்” சாப்ட்வேர் செல்போன் அடிப்படை புகைப்படம் தொழில்நுட்பம் உத்திரவாதமாக உள்ளது. எங்கள் நிறுவனம் இதை பெருமளவில் மக்களுக்கு பரிசோதனை செய்ய உதவும் என்றார்.