மணி என்னாச்சு

காதல் எப்படி வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். கதிருக்கு காதல் வந்தது ஒரு வித்யாசம்.
அன்று ஒரு நாள் தன் வழித்தடப் பேருந்துக்காக நின்றிருந்தான். அரக்கப்பறக்க செல்லும் மனிதர்கள். யாரையும் கவனிக்காமல் உருண்டு போகும் வாகனங்கள் என அந்தச் சாலையே பரபரப்பாக இருந்தது. இப்பிடி எங்க தான் போவானுகளோ? ஒருத்தனும் ஒரு எடத்தில நிக்க மாட்டேன்கிறானுகளே.
கதிருக்குள் கோபம் தானென்றாலும் இதை எப்படி யாரிடம் போய் சொல்வது? எப்பிடியோ போறானுக என்று தனக்குத் தானே சமாதானம் செய்து கொண்டு தன் வழித்தடத்தில் நின்றிருந்தான். அவன் திசையில் செல்லும் பேருந்து ஒன்றைக் கூட காணவில்லை.
விரக்தியின் நுனிக்குச் சென்றாலும் அவன் இலக்கை நோக்கியே நின்றிருந்தான்.
அப்போது ‘ஹலோ’ என்ற சத்தம் கேட்டுத் திரும்பினான் கதிர்.
‘ஹலோ… மணி என்னாச்சு?’ என்று கேட்டபடியே ஒருத்தி நின்றிருந்தாள்.
‘ஹலோ … மணி என்னாச்சு?’ மீண்டும் கேட்டாள்.
கதிர் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
‘சார், ஒங்களத்தான் கேக்குறேன் மணி என்னாச்சு?
‘ம்ம்’’ என்ற அவசர கதியில் நினைவுக்கு வந்தான் கதிர்.
‘மணி ஒன்பதரை’
ஒன்பதரையா?
‘ம்’ என்றே மீண்டும் சொன்னான், கதிர்.
‘அந்த இளங்கிளி, மணி கேட்டுவிட்டு கொஞ்சம் நகர்ந்து நின்றாள்.
இப்போது கதிருக்கு வரும் பேருந்தை விட, அவளைப் பார்ப்பதே பெரிய விசயமாக இருந்தது.
யார் இந்தப் பொண்ணு? இவ்வளவு அழகாயிருக்காளே. வீசும் காற்றுக்கு நெற்றியில் விழும் முடியை கைகளில் ஒதுக்கிவிட்டபடியே நின்றிருந்தாள். திசைகள் எல்லாம் அவளையே திரும்பிப் பார்த்தபடியே இருந்தன.
‘ஐயோ… இந்த அழகி தான், நம்மகிட்ட மணி கேட்டதா? பெருமையாக இருந்தது அதோடு அவளை பார்ப்பவர்களைப் பார்த்து பொறாமையாகவும் இருந்தது.
‘ஆகா, இப்படியொரு பொண்ணு தான் நம்மகிட்ட மணி கேட்டாங்களா?
அடடா, பஸ் கொஞ்சம் லேட்டா வரக்கூடாதா? இந்த தேவதைய பாத்துட்டே இருக்கலாமே. கதிருக்குள் ஒரு உற்சாக கங்கையே உருவானது.
அவளின் கன்னக் கதுப்பில் விழும் முடிகள், அவளின் உருண்டு கிடக்கும் சதையைச் சற்றே உரசி உரசி கதிருக்குள் ஒரு உற்சாகத்தை எற்படுத்தியது. எல்லோரும் அவளைப் பார்த்தார்கள். அவள் தான் யாரையும் பார்க்கவில்லை, தன் ஆடைகளைச் சரி செய்தபடியும் தன் முடியை ஒழுங்குப் படுத்தியும் நின்றிருந்தாள்.
கதிரிடம் மணி கேட்ட ஞாபகமோ அவனைப் பற்றிய சிந்தனையோ எதுவுமில்லாமல் நின்றிருந்தாள்.
என்ன இவ இப்பத்தான நம்மகிட்ட மணி கேட்டா, அதுக்குள்ள மறந்திட்டாளா? இந்த பொம்பளைங்களே இப்பிடித்தான், கொஞ்ச நேரத்தில எல்லாத்தையும் மறந்திருவாங்க. கதிருக்குள் நின்றது அவளைப் பற்றிய அபிப்பிராயங்கள். அவளை ஏதோ ஒரு பேருந்தை எதிர்பார்த்து நின்றிருந்தாள்.
கதிர் இப்போது அவளைப் பார்ப்பதே அழகு என்று நின்றிருந்தான்.
‘பஸ் பத்து நிமிசம் லேட்டா வரக்கூடாதா? இப்பத்தான் சாடமாடையா பாக்குறா? இப்பப் போயி இந்த பஸ்ஸு வந்து தொலச்சிரப் போகுது. பயத்தின் பிடியில் சிக்கி அவளையும் பேருந்து வரும் திசையையும் மாறிமாறிப் பார்த்தபடியே இருந்தான்.
‘ஆகா… பஸ் வரல. இந்த சுடிதார் சொப்பனத்த கொஞ்சம் நேரம் ரசிக்கலாம். என்றபடியே அவளின் அழகில் கிறங்கி பேருந்தையே மறந்து அந்தப் பெண்ணின் பின்னால் ஓடிக் கொண்டிருந்தான் கதிர்.
தார்ச்சாலைகள் பூச்சாலைகள் ஆகின. சத்தங்கள் சங்கீதமாயின. மனிதர்கள் புனிதர்கள் ஆனார்கள். கதிருக்குள் காதல் றெக்கை முளைத்தது. அது திசைகள் முழுவதும் பறந்து திரிந்தது.
‘காதலிக்கிறவங்க பெரிய பாக்கியசாலிகள் போல, ஒரு பெண்ணைப் பார்த்ததுமே இப்பிடிப் பத்திக்குதே! காதலிச்சா எப்பிடியிருக்கும்? அதான் லவ் பண்றவன் எல்லாம் ஒரு மாதிரியா இருக்கானுகளோ? கதிர் கனவுக்குள் விழுந்து ஆசைக்குள் நிறைந்தான்.
அவனின் எண்ணம் அந்தப் பெண்ணைப் பற்றிய நினைவிலேயே கரைந்து கொண்டிருந்தது.
அப்போது மணி என்னாச்சு? என்ற குரல் கேட்டது.
என்னது மறுபடியுமா?
அவ தான் திரும்ப கேக்குறாளா?
கதிரின் நினைவு கழன்று, மணி கேட்ட திசையைத் திரும்பிப் பார்த்தான். அங்கே ஒரு கிழவி நின்றிருந்தாள்.
‘தம்பி, மணி என்னாச்சு?’ என்றாள் பொக்கை வாய் திறந்து.
கோபம் கொப்பளிக்கக் கொப்பளிக்க இருந்தவனை மீண்டும் அந்தக் கிழவி உசுப்பேற்றினாள்.
‘தம்பி மணி கேட்டேன்’
‘ம்.. நீ போய்ச் சேர்ற நேரம் சரியா இருக்கு போ’ விரட்டினான்.
‘ஏன், இந்த பையன் இப்பிடி கோவிச்சுக்கிறான்.’’ பதறியபடியே நகர்ந்தாள் அந்தக் கிழவி.
மணி கேட்ட அழகியைக் காணாமல் திகைத்து நின்றான் கதிர்.