கல்வியே சிறந்த செல்வம்

காலை நேரம். அரசு பள்ளி வளாகம் பரபரப்பாக இருந்தது. மாணவர்கள் கூட்டம் கூட்டமாக பள்ளிக்குள் வந்து கொண்டிருந்தனர்.
வகுப்பு தொடங்குவதற்கான மணி அடிக்கப்பட்டதும் ஆசிரியர்கள் தங்கள் வகுப்பறைக்கு சென்றனர்.
8ம் வகுப்பு ஆசியர் பழனி தனது வகுப்பிற்குள் நுழைந்தார்.
மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்று காலை வணக்கம் சொன்னார்கள்.
மாணவர்களை அமரச் செய்த ஆசிரியர், வருகைப் பதிவேட்டை எடுத்து அதில் இருந்த பெயர்கள் ஒவ்வொன்றாக படிக்க தொடங்கினார்.
அவர் வாசிக்க வாசிக்க ஒவ்வொரு மாணவர்களாக எழுந்து ‘‘உள்ளேன் ஐயா’’ என்று கூறி அமர்ந்தனர்.
மாணிக்கம்… என்று ஆசிரியர் கூப்பிட பதில் ஏதுமில்லை.
அதனால் மாணவர்கள் கூட்டத்தை பார்த்தார் ஆசிரியர்.
மாணவன் மாணிக்கம் வகுப்பறையில் இல்லை.
மாணவன் மாணிக்கம் – அந்த கிராமத்தில் மிகப்பெரிய செல்வந்தரும் ஆசிரியர் பழனியின் நெருங்கிய நண்பருமான ராமசாமியின் மூத்த மகன்.
மாணிக்கம் பள்ளிக்கு வராததற்கு என்ன காரணம் என்று சக மாணவர்களிடம் கேட்டார் ஆசிரியர் பழனி.
மாணவர்கள் அதுபற்றி தங்களுக்கு தெரியாது என்று கூறிவிட்டனர்.
இதைத் தொடர்ந்து ஆசிரியர் பாடம் நடத்தத் தொடங்கினார்.
வழக்கம் போல் பள்ளி முடிந்தது. மாணவர்கள் அனைவரும் வீட்டுக்கு சென்றனர்.
மறுநாள் வழக்கம் போல் பள்ளி தொடங்கியது.
ஆசியர் பழனி இன்றும் வருகைப் பதிவேட்டை எடுத்து வாசிக்க தொடங்கினார்.
இன்றும் மாணவன் மாணிக்கம் வரவில்லை.
இதே போல் ஒருவாரமாக மாணவன் மாணிக்கம் பள்ளிக்கு வரவில்லை.
இதனால் ஆசிரியர் பழனிக்கு சந்தேகம் வந்தது.
அன்று வெள்ளிக்கிழமை மாலை பள்ளி முடிந்ததும் ஆசிரியர் பழனி தனது நண்பரும் செல்வந்தருமான ராமசாமியின் வீட்டுக்கு சென்றார்.
அவரை பார்த்ததும் ராமசாமி, வா வாத்தியாரே… வா… உன்னை தான் பார்க்கனும்னு நினைச்சுகிட்டே
இருந்தேன் . நீயே வந்துட்ட. வா உங்காரு என்றார்.
தனது மனைவி மூக்கமாளை அழைத்தார். சாப்பிட ஏதாவது எத்துவரும்படி கூறினார்.
என்ன ராமசாமி என்றார் ஆசிரியர்.
இந்த மாணிக்கம் பையன் பள்ளிக்கூடம் போகமாட்டேன்னு சொல்லிட்டான். நான் சொல்லிப்பார்த்தேன் கேட்கவில்லை.
சரி அவன் படிச்சு என்ன செய்யபோறான். அதனால் வீட்டில் இருந்து பண்ணையையும் நம்ம வயலையும் பார்த்துகிடட்டும்னு சரி சொல்லிட்டேன்.
ராமசாமி அது வந்து…. பசங்க ஓரளவுக்கு படிச்சா தான் நல்லது.
அதுசரி அவன் தான் படிக்கமாட்டேன்னு சொல்லிட்டான். படிப்பு வராதவனை படிக்க சொல்றது நல்லது இல்லை.
அது மட்டும் இல்லாம என்னால பண்ணை வேலை, சொத்துக்கள் எல்லாத்தையும் பார்த்துக்கிட முடியலை.
என்னைக்கு இருந்தாலும் என் சொநத்துகள் எல்லாத்தையும் பசங்க தான் பார்த்துகிடனும்.
அதனால் மாணிக்கத்தை பண்ணைகளை கவனிக்க அனுப்பிட்டேன் என்றார் ராமசாமி.
உடனே ஆசிரியர், ஒருவனுக்கு கல்வி தான் பெரிய சொத்து. நீங்க ஒருவனுக்கு எவ்வளவு சொத்து கொடுத்தாலும் கல்விக்கு ஈடாகாது.
நீயும் இதே மாதிரி படிக்காம படிப்பை நிறுத்திட்ட. அதே மாதிரி உன் பையனையும் அப்படி செய்ய விடாதே. கொஞ்சம் யோசன பண்ணு என்றார்.
அதெல்லாம் தேவையில்லை வாத்தியாரே. சொத்து இருக்கு.
கணக்கு பார்க்க தெரிந்தா போதும். அவன் தான் எட்டு வரைக்கும் படிச்சிட்டானே. இதை வச்சி அவன் சமாளிச்சுக்கிடுவான் என்று கூறினார்.
ராமசாமி தனது பேச்சை கேட்கவில்லை என்ற ஏமாற்றத்துடன் ஆசிரியர் பழனி… சரி உன் இஷ்டம். ஒரு சின்ன வேண்டுகோள், இளையவன் ஆறுமுகத்தையாவது கொஞ்சம் படிக்க வை என்று கூறினார்.
சரி பார்க்கலாம் வாத்தியாரே என்றார் ராமசாமி.
அதன் பின் அங்கிருந்து கிளம்பி சென்றார் ஆசிரியர் பழனி.
செல்வந்தர் ராமசாமியின் இளைய மகன் ஆறுமுகம் அந்த பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தான்.
அவன் படிப்பில் கொஞ்சம் ஆர்வமாக இருந்ததால் நன்றாக படித்தான்.
ஆறுமுகம் 7ம் வகுப்பு முடித்து, 8ம் வகுப்புக்கு முன்னேறினான்.
ஆசிரியர் பழனி, அவனிடம், ஆறுமுகம் நீயாவது ஒரு டிகிரி வாங்கு. உங்க அண்ணன் மாதிரி பாதியிலே படிப்பை நிறுத்திவிடாதே என்று அறிவுரை வழங்கினார்.
ஆசிரியர் பழனியின் ஆலோசனையை ஏற்று ஆறுமுகம் நன்றாக படித்தான்.
10ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவன் ஆறுமுகம், வெளியூருக்கு சென்று 11ம் வகுப்பை தொடர விரும்பினான்.
ஆனால் செல்வந்தர் ராமசாமி அவனை வெளியூருக்கு சென்று படிக்க வேண்டாம். நமக்கு படிப்பு எல்லாம் தேவையில்லை சொத்துக்களை கவனித்துக் கொள் என்று கூறினார்.
ஆறுமுகம், தனது தந்தையின் நெருங்கிய நண்பர் ஆசிரியர் பழனியை நேரில் சந்தித்து தனது தந்தை கூறியதை சொல்லி, தான் தொடர்ந்து படிக்க விரும்புவதாகவே கூறினான்.
இதைத் தொடர்ந்து ஆசிரியர் பழனி, தனது நண்பரை ராமசாமியை நேரில் சந்தித்து,
உன் மகனுக்கு கொடுக்கும் பெரிய சொத்து – உன்னுடைய அசையும் அசையா சொத்துக்கிடையாது. கல்வித் தான் அவனுக்கு நீ கொடுக்கும் பெரிய சொத்து.
உன்னுடைய மூத்த மகன் மாணிக்கத்தை படிக்கவிடாமல் செய்துவிட்டாய். இவனையும் அதே போல் செய்துவிடாதே.
ஆறுமுகத்தை அவசியம் படிக்க வைக்க வேண்டும் என்று கண்டிப்புடன் கூறினார் ஆசிரியர் பழனி.
பழனி கூறியதை தவிர்க்க முடியாத காரணத்தால் ஆறுமுகம் படிப்பதற்கு ராமசாமி சம்மதம் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து ஆறுமுகம் வெளியூர் சென்று படிக்கத் தொடங்கினான்.
அவன் தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தான்.
அதே நேரத்தில் இங்கு கிராமத்தில் ராமசாமியின் மூத்த மகன் மாணிக்கம் பல தவறான பழக்கவழக்கத்திலும் தவறான செயல்களிலும் ஈடுபடத் தொடங்கினான்.
அவனைக் கட்டுப்படுத்த தந்தை ராமசாமி மற்றும் தாய் மூக்கம்மாள் ஆகியோரால் முடியவில்லை.
ஆறுமுகமும் தனது அண்ணன் மாணிக்கத்திற்கு அறிவுரை கூறினான். ஆனால் அவன் யார் சொல்லையும் கேட்கவில்லை.
அவனது செயல்பாடுகளால் சொத்துகளை விற்கவேண்டிய நிலை ஏற்பட தொடங்கியது.
இதே நிலை தொடர்ந்ததால் ராமசாமி தான் குடியிருக்கும் வீட்டை தவிர மற்ற அனைத்து சொத்துக்களையும் விற்றுவிட்டு வறுமை நிலைக்கு சென்றார்.
இந்த நிலையில் வெளியூரில் பட்டப்படிப்பை முடித்து வீட்டுக்கு வந்த ஆறுமுகம் தனது குடும்பத்தின் நிலையை உணர்ந்து வருத்தப்பட்டான்.
தனது படிப்பை வைத்து வேலைக்கு சென்று தனது குடும்பத்தை காப்பாற்றுவேன் என்று தந்தையிடம் ஆறுமுகம் கூறினான்.
அவன் கூறியதை கேட்டவுடன் தந்தை ராமசாமியின் கண்ணில் தண்ணீர் வந்தது. அவரால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.
கல்வியின் அருமை அவருக்கு அப்போது தான் புரிந்தது.
உன்னை படிக்க வைத்தது போல் உன் அண்ணனையும் படிக்க வைக்காமல் போய்விட்டேனே.
ஆசிரியர் பழனி எவ்வளவோ எடுத்துச் சொன்னான். அவர் சொன்னதை கேட்காமல் உதாசீனப்படுத்தினேன்.
சொத்து… சொத்துன்னு அழியக் கூடிய சொத்துக்கள் இருந்ததால் அழியா சொத்தான கல்வி செல்வத்தை அவனுக்கு கொடுக்க தவறி விட்டேனே என்று அழுதார்.
தந்தைக்கு ஆறுதல் கூறிய ஆறுமுகம், தனது படிப்புக்கு ஏற்ற நல்ல வேலையில் சேர்ந்து தனது குடும்பத்தை காப்பாற்றினான்.
தனது அண்ணனுக்கு நல்ல புத்திமதி கூறி அவனையும் திருத்தி நல்ல வேலைக்கு அனுப்பினான் ஆறுமுகம்.
ஆறுமுகத்தின் கல்வியால் ராமசாமியின் குடும்பம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்ற பாதைக்கு சென்றது.
இதைப்பார்த்த மாணிக்கம் திறந்த நிலைப்பல்கலைக்கழகத்தில் சேர்ந்து விட்ட படிப்பைத் தொடர்ந்தான்.