பொக்கே

  • ராஜா செல்லமுத்து

‘சார் இந்த ‘பொக்கே’வ டைரக்டருக்கு குடுக்கணுக’

‘ம்.. குடுக்கலாம் சார்’ நீங்க வாங்க என்று உதவி இயக்குனர் வேலன் பொக்கே வைத்திருப்பவரை இயக்குனர் அறைக்குக் கூப்பிட்டுக் கொண்டு போனான்.

அங்கு இயக்குனர் வேறொருவருடன் பேசிக் கொண்டிருந்தார்.

சார் கொஞ்ச நேரம்இருங்க , டைரக்டர் பேசிட்டு இருக்காரு

‘இருக்கட்டுங்க. நமக்கே இவ்வளவு வேல, என்கேஜ்மெண்ட் இருக்கு, அவங்க டைரக்டர். எவ்வளவு பெரிய ஆளு. ஆளுக வரமாட்டாங்களா? என்ன? வெயிட் பண்றேன்’ என்பறபடியே ஒரு குழந்தையைப் போல அந்த ‘பொக்கே’வை அமர்ந்தபடியே இருந்தார் வந்தவர்.

கண்ணாடிக் கதவுகள் பூட்டப்பட்ட அந்த அறையிலிருந்து ஈரம் அப்பிய குளிர்காற்று மெல்ல வெளிவந்து கொண்டிருந்தது.

வேலன் வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தான். கண்ணாடிக் கதவின் வழியே வேலன் விழிகளைப் பார்த்த இயக்குனர் அவனைச் சைகையில் கூப்பிட்டார்.

சத்தமில்லாமல் கண்ணாடிக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தான், வேலன். என்னய்யா? என்று கொஞ்சம் முரட்டுத்தனமான மொழியில் கூப்பிட்டுக் கேட்டார் இயக்குனர்.

‘சார்…. ஒங்க படங்கள பொக்கே வச்சுட்டு நிக்கிறவரு பாப்பாராம். ஒங்கள நேர்ல பாத்திட்டு ஒரு பொக்கே குடுத்திட்டு போகலாம்ணு வந்திருக்காரு. நீங்க சொன்னா உள்ள வரச்சொல்றேன்’ என்றான் வேலன்.

‘யோவ் …. என்னய்யா பொக்கே, கிக்கேன்னு. வேறு ஏதாவது கொண்டு வர மாட்டாணுகளா? இத வச்சு என்னயா பண்றது. முக்காத்துட்டுக்கு பிரயோசப்படாது. இத வாங்கி என்னய்யா பண்றது. சரி சரி… வரச்சொல்லு என்றார் சலிப்பாய்.

‘ஓடிய வேலன், ‘பொக்கே’ காரரை கூப்பிட்டு வந்தான்.

‘சார், டைரக்டர் கூப்பிடுறாங்க’

‘ஓ.கே.’ என்றபடியே உள்ளே வந்தார்.

‘சார் வணக்கம்’ என்றபடியே உள்ளே வந்தவர், இயக்குனரிடம் பொக்கே கொடுத்தார்.

‘நன்றிங்க’ என்றபடியே ‘பொக்கே’வை வாங்கிய இயக்குனர் ‘இந்தா வேலா’ என்று நீட்டினார்.

‘பொக்கே’ வை வாங்கிய வேலன், பொக்கேக்காரரை வழியனுப்பி விட்டு பொக்கே வை ஒரு பெட்டியில் போட்டுத் தண்ணீர் தெளித்து வைத்தான்.

இயக்குனர் அவரின் பேச்சைத் தொடர்ந்தார். அன்று இரவு உதவி இயக்குனர்கள் எல்லாம் ஒன்று கூடினார்கள்.

‘வேலா … நைட்டு சாப்பிட காசு இருக்கா? என்றான் மகேஷ். இன்னொரு உதவி இயக்குனர்.

‘இல்லையே’ கை விரித்தான் வேலன்.

‘ரமேஷ் உன்கிட்ட இருக்கா?’

‘இல்ல’

‘ரஞ்சித்’

‘ம்….கும்’ எல்லோரிடமும் பணம் இல்லையென்றே பதில் வந்தது.

யார்கிட்டயும் பணமில்லையா?

‘ஆமா’ என்று பதில் ராத்திரி வரப்போகும் பசியை நினைத்து இப்பவே உதறல் எடுக்க ஆரம்பித்தது.

‘அப்ப இன்னைக்குப் பட்டினி தான்’ நினைத்துக் கொண்டிருக்கையில் அவர்கள் அலுவலகக் கட்டிடத்தை ஒட்டிய கல்யாண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான மேளச் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.

‘ரமேஷ், மண்டபத்தில் யாருக்கு கல்யாணம்?

‘ஏதோ சேட்டு வீடாம்?

‘சூப்பர்’ குதி குதித்தான் வேலன்.

‘என்னாச்சு?’

இன்னைக்கு நல்லா சாப்பிடலாம்யா

‘எப்பிடி?’

‘நானிருக்கேன்’ என்றான் வேலன்.

வீணாகி அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொக்கேக்களில் இரண்டை எடுத்தான்.

ஒன்றை ரமேஷ் கையில் கொடுத்தான்.

‘ஒன்னை அவனே வைத்துக் கொண்டான்.’

‘வாங்கடா… சாப்பிடப் போவோம். நாம சும்மாவெல்லாம் சாப்பிடப் போகல’ பொக்கே கொடுக்கப் போறோம். சாப்பிடப் போறோம். தெரியுமா வாங்கடா’ என்று நண்பர்கள் படையுடன் சென்றான்.

வேலன் கொண்டுபோன ‘பொக்கே’வை மாப்பிள்ளை கையில் கொடுத்துவிட்டு எத்தனையோ வகையான உணவுகளை உண்டு மகிழ்ந்தார்கள். அது முதல் இயக்குனர்களைப் பார்க்க வருபவர்களில் பொக்கே கொண்டு வருபவர்களுக்கே முதலிடம் கொடுத்தனர் உதவி இயக்குனர்கள்.

அன்று, ஒருவர் பொக்கே’வுடன் அலுவலகம் வந்தார்.

‘சார் வாங்க’ டைரக்டர பாக்கணுமா?

‘ஆமா சார், பொக்கே கொடுக்கணும்.

‘இந்தா ஒடனே’ முன்மொழிந்தனர் உதவி இயக்குனர்கள்.

‘வேலன் இயக்குனர் அறையின் கண்ணாடிக் கதவைத் திறந்தபடியே உள்ளே வந்தான்.’

சார், ஒங்கள பாக்க ஒருத்தர் பொக்கோவோட வந்திருக்கார்.

‘யோவ்… பொக்கே’ எதுக்குய்யா அதான் எதுக்கும் ஒதவாதே’ வரச்சொல்லுய்யா’ கடுப்பாய்ச் சொன்னார் இயக்குனர்.

அன்று பக்கத்தில் உள்ள கல்யாண மண்டபத்திலிருந்து திருமணத்தின் மேளதாளச் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.