தவிப்பு

“மணிக்கு அந்த இரவெல்லாம் தூக்கம் வரவில்லை.
புரண்டு புரண்டு படுத்தார். அவர் செல்களில் எல்லாம் செல் போன் தொலைந்து போன ஞாபகமே செல்லரித்து நின்றது.
“ச்சே…. எப்படிக்காணாப் போகவிட்டேன்.
அவர் மூளை, காலை முதல் இரவு எங்கு சென்றார்? எங்கு நின்றார்? என்ன செய்தார்? என்பதையே திரும்ப திரும்ப யோசித்தது. எத்தனை தடவை ஞாபகப்படுத்தியும் எதுவும் பிடி கொடுக்கவில்லை. எல்லாம் வெறுமையே வந்து நிறைந்து நின்றது.
“ஆபிஸ்ல விழுந்திருக்குமா?
இல்லையே, அங்க இருந்துச்சே. அப்புறம் எங்க காணாமப் போயிருக்கும்,? ஒரு வேள பஸ்ல மிஸ் பண்ணிருப்பமோ?
அங்கயும் இல்லையே, அங்க பெரிய கலவரத்தையே ஏற்படுத்தினோம். அப்பெறம் எங்க காணாமப் போயிருக்கும்?
வர்ற பாதையில…. ம்ஹுகும் …சான்ஸே இல்ல. சிந்தனைகள் எத்தனையோ வேகத்தில் சென்று காணாமல் போன இடத்திலேயே வந்து நின்றது.
போன், போனாக்கூட பரவாயில்ல. ஆனா, அதுல இருக்கிற கான்டக்ட்ஸ தான் கண்டுபிடிக்கிறது
ரொம்ப கஷ்டம் . புரண்டு புரண்டு படுத்தவர் ஒரு கட்டத்தில் எழுந்து உட்கார்ந்தார்.
ஜன்னல் வழியே வானம் பார்த்தார்.
கருப்பு மேகங்களுக்கு ஊடே வெள்ளை நிலா, வலம் வந்து கொண்டிருந்தது.
விண்மீன்கள் மினுக் ….மினுக் … என மின்னிக் கொண்டிருந்தன. அவர் நினைவில் செல்போன் சுழன்றடித்ததால் துளியும் கண்ணில் தூக்கம் துளிர்க்கவில்லை.
இந்நேரம் எத்தனை போன் கால்கள் யார் யார் பண்ணினாங்களோ? ஒரு பிராஜக்ட் விசயமாக வேற ஒருத்தர் போன் பண்ணுறேன்னு சொன்னாரு, அவரும் போன் பண்ணியிருப்பாருன்னு நெனைக்கிறேன்.
யாராவது போன எடுத்திருப்பாங்களோ?
எடுத்திருந்தா இந்நேரம் வித்திருப்பாங்களோ? ஆனா செல்போன் காணாமப் போனதில இருந்து எத்தனையோ தடவ போன் பண்ணிட்டோம்.  ரிங் ஆகுது யாரும் எடுத்திருந்தா, இந்நேரம் சிம்கார்ட எடுத்து கீழ போட்டுப்பாங்களே துயரம் உச்சிக்கே போன மணியால் நிம்மதியாக ஒரு இடத்தில் நிற்கவோ, உட்காரவே முடியவில்லை, நிலையில்லாமல் தவித்துக்கொண்டே இருந்தார்.
அவரின் எண்ணம் முழுவதும் செல்போனே முன்னால் வந்து நின்றது.
யாருக்காவது போன் பண்ணிக் கேக்கலாமா? யோசித்தவரின் புத்தியில் ஒருவரின் நம்பர் கூட ஞாபகத்திற்கு வரவில்லை. எல்லாம் இந்த செல்போன் மோகம். எதையும் எழுதி வைக்காம விட்டுட்டோம் .எந்த நம்பரும் நம்ம நினைவில் இல்லையே” அவதிகளில் முட்டி மோதினார்.
அதுல ரெண்டு மூணு வீடியோ வேற இருக்கு. அத எப்படி திரும்ப எடுக்கிறது. பத்து பதினஞ்சு வருசத்துக்கு முன்னாடி எல்லாம் இது எதுவும் கெடையாது. இப்ப இந்த செல்போன் தான் நம்மள பெரிய கஷ்டத்துக்கு உள்ளாக்குது. எதுபோனாலும் பரவாயில்ல, செல்போன் போச்சே” மணியின் அன்றைய இரவு களவாடப் பட்டது, நிற்கவும் முடியாமல், தூங்கவும் முடியாமல்தவித்தார். அந்த இரவு அவருக்கு பெரிய அனுபவத்தைத் தந்தது.
எதையும் பாதுகாப்பா வச்சுக்கிரணும். பணம் காணாமப் போனாக் கூட திருப்பிச் சம்பாரிச்சிரலாம். செல்போன் அதுவும் வெறும் செல்போனா இருந்தாக் கூட பரவாயில்ல.  அதுவ எத்தன பேரோட நம்பர் இருக்கு .எத்தன வாட்ஸ் ஆப் வீடியோ எஸ் எம்எஸ் ம்ஹுகும் சான்ஸே இல்ல. புது மொபைல் வாங்குனாலும் இது அவ்வளவையும் கூட்டிச்சேக்கிறது. ரொம்ப கஷ்டம் தான் போல. ஒரு கட்டத்தில் புலம்பியே தீர்த்தார்.
அவர் அப்படிப் புலம்பித்தீர்த்ததை அருகில் படுத்திருந்த “குட்டி” கவனித்து விட்டான்.
“அப்பா இன்னும் தூங்கலையா?
மணி அதற்கு பதில் சொல்லாமலே இருந்தார்.
ஒன்னத்தான் கேக்குறேன்ப்பா, நீ இன்னும் தூங்கலையா? மணி பதில் ஏதும் சொல்லாமல் நடந்து கொண்டே இருந்தார். அட்லீஸ்ட் ஒரு செல்போன் காணாமப் போனது நம்மள எவ்ளவு பெரிய கஷ்டத்துக்கு உள்ளாக்கிருச்சு ” ச்சே “மணி நிலையில்லாமல் புலம்பிக் கொண்டே இருந்தார், அந்த இரவு அவருக்கு ரணமாய்த் தகித்தது. உடனிருக்கும் ஒரு பொருளைத் தவற விட்டு விட்டுத் தவிக்கும் உணர்வை என்னவென்று சொல்வது, அது பட்டால் தான் தெரியும். மணியின் அவஸ்தை நீண்டு கொண்டே சென்றது. அந்த இரவு வெறுமையாகவே விடிந்தது.முதலில் அலுவலகத்திற்குத்தான் பறந்தார்.
முன்னதாகவே பிரேம், அலுவலகத்திற்குச் சென்றிருந்தான்.
அலுவலக நூலகத்தில் ஒரு செல்போன் கிடந்தது. இது யாருதா இருக்கும்? அவனின் எண்ணம் எங்கோ சிறகடித்தது.
நேத்து ராத்திரி இங்க யாரு ஒக்காந்திருந்தது.?
பாரதி, மணி ரெண்டு பேருதான ஒக்காந்திருந்தாங்க. இவங்க ரெண்டு பேர்ல ஒருத்தவங்களுதா தான் இருக்கணும் முடிவுக்கு வந்து மணியின் நம்பரைப் போட்டான்.
தமிழுக்கு அமுதென்று பேர், அந்த தமிழ் இன்ப, தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்ற பாடல் வந்தது. “ஆகா இது நம்ம மணி சார் போனே தான், எடுத்து ஓபன் செய்தான் பிரேம். இருபதுக்கு மேற்பட்ட போன்கால்கள் வந்திருந்தன.
ஐயோ என்ன பாடுபட்டிருப்பாரோ? நினைத்துக் கொண்டிருக்கும் போதே, மணி நூலகத்திற்குள் அரக்கப்பரக்க நுழைந்தார்.
சார், ஒங்க போனு, இங்க கெடந்தது  என்று பிரேம் சொன்ன போது, ஒரு குழந்தையைத் தொலைத்த தாய் போல ஆவலோடு அந்த செல்போனை வாங்கினார்.
அப்பாடா இதக் காணாமப் விட்டுட்டு ராத்திரி எல்லாம் நான் ஒரு பொட்டு தூங்கலங்க. பைத்தியகாரன் மாதிரி தூங்காமக் கெடந்தேன்.
என்ற படியே செல்போனை வாங்கிய போது, அவர் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி தெரிந்தது.
தொலைந்து போன அவரின் போனைச் கொடுத்த பிரேம் தன் செல்போனைக் காணவில்லை என்று கூக்குரலிட்டான்.
என்னது ஒன் செல்போனக் காணாமா பிரேம்.  மணியும் சேர்ந்து தேடினார். இப்ப எதுவேனாலும் நாம காணாப்போட்டுட்டு வாங்கிரலாம்ங்க . ஆனா செல்போன் மட்டும் காணாமப் போச்சுன்னா அத கண்டுபிடிக்கிறது. ரொம்ப கஷ்டம்ங்க” என்றார் மணி அமைதியாக.  பிரேமுக்குள் ஒரு புயலே ஆரம்பமானது.