சம்பாதிப்பதை சேமித்துப் பெருக்கணும்

என்னங்க விவசாயம் இல்லாமல் வருமானம் எல்லாம் போச்சு. மூத்த பையனை கஷ்டப்பட்டு படிக்க வச்சோம். அதுக்கு அப்புறம் பிறந்த 2 பொட்ட பிள்ளைகளையும் கடைசி பையனையும் எப்படி தான் கரைச் சேர்க்க போறோம்னு தெரியலை என்று தனது கணவர் பாண்டியனிடம் மூக்கம்மாள் புலம்பினார்.
ஆத்தா நீங்க எதுக்கு இப்ப கவலை படுறீங்க. நான் தான் டிப்ளமோ படிச்சிருக்கேன். ஒரு கம்பெனியில் வேலைக்கும் சேர்ந்து சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டேன். நீங்க கவலைப்படாம இருங்க. நான் பார்த்துக்கிறேன் என்று மூத்த மகன் சுந்தரம் தன் தாய்க்கு ஆறுதல் கூறினான்.
இல்ல ராசா நீ சம்பாதிக்கிற பணம் குடும்ப சிலவுக்குத்தான் சரியா இருக்கு. மிச்சம் பிடிக்க முடியலை. இப்படி இருந்தா உன் இரண்டு தங்கச்சியையும் எப்படி படிக்க வச்சு கல்யாணம் பண்ணி கொடுக்க முடியும். உன் தம்பியை எப்படி படிக்க வைக்க முடியும் என்று மூக்கம்மாள் புலம்பினார்.
ஆத்தா நீங்க சொல்றது சரிதான். எனக்கு புரியது. அதுக்குத்தான் நான் யோசனை செய்திருக்கேன். வெளிநாட்டுக்கு வேலைக்கு போனா நல்லா சம்பாதிக்கலாம். அதற்காக வேலையை செய்துகிட்டு இருக்கேன் என்று சுந்தரம் கூறினான்.
வெளி நாட்டுக்கு எல்லாம் வேணாம் ராசா.. எங்கேயோ ஏதாவது நல்லா வேலையை பார்க்க வேண்டியது தானே என்று சுந்தரத்தின் தந்தை பாண்டியன் கூறினார்.
இல்ல அப்பா இங்க இருந்தா இதுக்கு மேல சம்பாதிக்க முடியாது. வெளிநாட்டுக்கு போனால் தான் நல்லாச் சம்பாதிக்க முடியும்.
நான் அங்க போய் சம்பாதித்து பணம் அனுப்புறேன் நீங்க இரண்டு தங்கச்சிக்கும் நல்ல இடத்தில் கல்யாணம் பண்ணிக் கொடுங்க. நம்ம குடும்பம் நல்ல நிலைக்கு வந்ததும் நான் இங்க வந்துடுறேன் என்று சுந்தரம் கூறினான்.
உன்னை நினைச்சா எங்களுக்கு பெருமையா இருக்கு என்று மூக்கம்மாளும் பாண்டியனும் கூறினர்.
கிராமத்தில் விவசாய கூலி வேலை செய்து வந்த மூக்கம்மாள், பாண்டியன் தம்பதிக்கு சுந்தரம் என்ற மகனும் தேவி, லட்சுமி என்ற இரண்டு மகள்கள், கடைசியாக வெள்ளையன் என்ற தம்பியும் உள்ளனர்.
அந்த கிராமத்தில் தண்ணீர் இல்லாமல் விவசாய தொழில் மிகவும் பாதிக்கப்பட்டது. அதனால் வருமானம் இன்றி இவர்கள் குடும்பம் வறுமையில் வாடத் தொடங்கியது.
மூக்கம்மாள் தனது மூத்த மகன் சுந்தரத்தை டிப்ளமோ படிக்க வைத்தார். இரண்டு மகள்களும் 11ம் வகுப்பும், 9ம் வகுப்பும் படித்து வந்தனர். வெள்ளையன் 8ம் வகுப்பு படித்தான்.
தான் பட்ட கஷ்டம் தன் மகள்கள் படக்கூடாது என்பதற்காக மூக்கம்மாளுக்கு தனது மகள்கள் இரண்டு போரையும் நல்ல இடத்தில் கல்யாணம் செய்து கொடுக்க விரும்பினார்.
அதை தன் மகனின் மூலம் நிறைவேற்ற எண்ணினார்.
சுந்தரம் தனது கிராமத்திற்கு அருகில் உள்ள ஒரு டவுனில் உள்ள கம்பெனியில் 4 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்கு சென்றான்.
அந்த வருமானம் குடும்ப செலவுக்கே போதுமானதாக இருந்தது.
இதனால் தனது மகள்களின் எதிர்காலத்தை பற்றி கவலைப்பட்ட மூக்கம்மாள் தனது மகனிடம் கவலையுடன் பேசினார்.
தனது குடும்ப சூழ்நிலையை உணர்ந்த சுந்தரம் வெளிநாட்டுக்கு சென்று வேலை பார்க்க முடிவு செய்து, அதற்காக பாஸ்போர்ட் எடுத்துக் கொண்டு வெளிநாட்டுக்கு வேலைக்கு ஆள் அனுப்பும் நிறுவனத்திடம் வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தான்.
அவனது எண்ணப்படி துபாயில் பணி புரிவதற்கு வாய்ப்பு வந்தது.
ஐந்து வருட ஒப்பந்தப்படி சுந்தரம் துபாய் செல்ல சம்மதம் தெரிவித்தான்.
மூக்கம்மாளுக்கு தனது மகனை பிரிய மனம் இல்லை.
ஐயா, ராசா வெளிநாட்டுக்கு எல்லாம் வேண்டாம். இங்கேயே எங்காவது வேலைக்கு போகலாமே என்று கூறினார்.
அம்மா நான் கஷ்டப்பட்டாவது என் தங்கச்சிகளுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுப்பேன் என்று கூறினார்.
குடும்ப சூழ்நிலையை உணர்ந்த மூக்கமாள் தனது மகன் வெளிநாடு செல்ல சம்மதம் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து சுந்தரமும் துபாய் கிளம்பிச் சென்றான்.
ஆரம்ப கட்டத்தில் சாதாரண உதவியாளர் வேலைக்கு சேர்ந்தான் சுந்தரம்.
அவன் வேலை பார்க்கும் இடத்தில் தங்குவதற்கும், சாப்பாட்டுக்கும் வசதி செய்து கொடுத்தனர். அதனால் சுந்தரத்திற்கு சம்பளம் பணம் பெருமளவில் மிச்சமானது.
வேலைக்கு சேர்ந்த ஒரு வாரத்தில் சுந்தரத்திற்கு அங்கு இருக்கவே பிடிக்கவில்லை. சாப்பாடும் அவனுக்கு பிடிக்கவில்லை. அங்குள்ள சூழ்நிலை அவனுக்கு புதிதாக இருந்ததால் அவனால் அங்கு இருக்க முடியவில்லை.
அங்கிருந்து கிளம்பி தனது கிராமத்திற்கே வந்து விடலாமா என்று யோசிச்சான்.
ஆனால் அவனது கண் முன் இரண்டு தங்கைகளின் முகம் தெரிந்தது.
தனது தங்கைகளுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பது மனதில் தோன்றியதும் தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டு தொடர்ந்து வேலை பார்க்க தொடங்கினான்.
நாட்கள் போக போக சுந்தரத்திற்கு வேலையில் ஆர்வம் ஏற்பட்டு வேலையை தொடர்ந்தான்.
பதவி உயர்வு கிடைத்து அந்த நிறுவனத்தின் மேலாளர் பதவிக்கு வந்தான்.
வாரம் வாரம் சுந்தரம் தன் குடும்பத்தாருடன் போனில் பேசி வந்தான்.
சுந்தரம் தான் சம்பாதிக்கும் பணத்தில் குறைந்த அளவு தொகையை மட்டுமே தனது செலவுக்கு எடுத்துக் கொண்டு பெரும்பாலனவற்றை வங்கி மூலம் தனது குடும்பத்திற்கு அனுப்பி வைத்தான்.
அவனுடன் வேலை பார்க்கும் நண்பர்கள் அவனை பல்வேறு கேளிக்கை நிழ்ச்சிக்கு அழைப்பர். ஆனால் சுந்தரம் எந்தவித கேளிக்கை நிகழ்ச்சியும் கலந்து கொள்ளாமல் பணத்தை மிச்சப்படுத்தி தனது குடும்பத்திற்கு அனுப்புவதற்காக தனது சந்தோஷத்தை தியாகம் செய்து வாழ்ந்து வந்தான்.
சுந்தரம் அனுப்பும் பணத்தை வைத்து அவனது தாய் மூக்கம்மாள் தனது மகள்களுக்கு நகை வாங்கத் தொடங்கினார்.
சுந்தரத்தின் தங்கைகளும் தம்பியும் அவனது வாழ்க்கையை பற்றி கவலைப்படாமல் அவன் அனுப்பும் பணத்தை வைத்து தங்களது வாழ்க்கையை வளமாக்கும் வழியில் ஈடுபட்டனர். அதற்கு அவர்களது தாய், தந்தையும் உடைந்தயானார்கள்.
இது தெரியாத சுந்தரம், ஏமாளித்தனமாக தன் வாழ்க்கையின் சேமிப்புகள் எல்லாவற்றையும் தனது குடும்பத்திற்காக தியாகம் செய்ய முடிவு செய்தான்.
சுந்தரத்துடன் வேலை பார்க்கும் நண்பர்கள் அவனுக்கு பல அறிவுரை கூறினர்.
நீ சம்பாதிக்கும் பணத்தை திட்டமிட்டு தேவையான வகைகளில் நீயே முதலீடு செய்து பெருக்கா விட்டால் அதன்பலனை நீ அனுபவிக்க முடியாது என்று அறிவுரை கூறினர்.
ஆனால் சுந்தரம் அவற்றை பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து தன் குடும்பத்தினருக்கு பணம் அனுப்பி கொண்டிருந்தான்.
இப்படியாக 4 நான்கு ஆண்டுகள் ஓடியது.
சுந்தரத்தின் மூத்த தங்கை தேவிக்கு மிக பெரிய பணக்கார வீட்டில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
அதற்காக சுந்தரம் தனது சொந்த கிராமத்திற்கு திரும்பி வந்தான்.
திருமணம் நல்லபடியாக முடிந்தது.
சுந்தரம் தான் அனுப்பி பணத்தை வைத்து இங்கு ஏதாவது தொழில் செய்யலாமா? என்று யோசித்தான்.
ஆனால் அவனது தாய், நீ அனுப்பிய பணம் மூத்த மகள் திருமணத்திற்கே சரியாகி விட்டது. அடுத்து தங்கைக்கு என்ன செய்வது என்று கேட்டார்.
அவர் சொன்னதை கேட்டதும் மனம் மாறிய சுந்தரம் மீண்டும் வெளிநாட்டுக்கு புறப்பட்டு சென்றான்.
அதே போல் மேலும் மூன்று ஆண்டுகள் அங்கு வேலை பார்த்து மாதம், மாதம் பணம் அனுப்பினான்.
அந்த பணத்தை கொண்டு அவனது தாய், அடுத்த மகளுக்கும் திருமணம் நிச்சயம் செய்தார்.
இந்த முறையும் சுந்தரம் சொந்த கிராமத்திற்கு வந்து திருமணத்தை நல்லபடியாக முடித்து வைத்தான்.
கடந்த முறையை போல் இந்த முறையும் இங்கேயே தங்கி விடலாமா என்று யோசித்தான் சுந்தரம்.
ஆனால் அவன் அனுப்பிய பணத்தில் மிச்சம் எதுவும் இல்லை என்பதை தாய் கூறினார்.
நாம் வெளிநாட்டில் கஷ்டப்பட்டு அனுப்பிய பணத்தை நாம் எதுவும் அனுபவிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் சுந்தரத்திற்கு ஏற்பட்டது.
மேலும் அவனுக்கு 30 வயதும் ஆகிவிட்டது.
திருமணம் செய்து தானும் இங்கே இருந்து விடலாம் என்று யோசித்தான் சுந்தரம்.
ஆனால் கையில் பணம் ஏதும் இல்லை. எல்லா பணத்தையும் தங்கைகளுக்கே செலவு செய்து விட்டேன் என்று தாயும் தந்தையும் கூறிவிட்டனர்.
வேறு வழியில்லாமல் சுந்தரம் மீண்டும் வெளிநாடு புறப்பட்டான்.
இந்த சமயத்தில் சுந்தரத்தின் தம்பி வெள்ளையனும் படிப்பை முடித்தான்.
அதைத் தொடரந்து அவன் சொந்த தொழில் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டான்.
தனது ஆசையை தனது அண்ணனிடம் கூறினான்.
சுந்தரமும் தான் பணத்தில் கொஞ்சம் தம்பிக்கு கொடுத்து தொழில் தொடங்க உதவுமாறு தாய் மூக்கமாளிடம் கூறினான். மீதியை தனது பெயரில் இடம் வாங்கி வைக்குமாறு கூறினான்.
அதைத் தொடர்ந்து சுந்தரம் அனுப்பும் பணத்தை அவனுது தம்பி எடுத்து தனது வாழ்க்கையை வளமாக மாற்றிக் கொண்டான்.
மீதிப் பணத்தில் தாய் மூக்கம்மாள் ஒரு பெரிய இடம் ஒன்று வாங்கி அதனையும் அவனது தம்பி வெள்ளையன் பெயருக்கு பத்திரப் பதிவு செய்தார்.
இப்படியாக சுந்தரத்தின் தங்கைகளும் தம்பியும் சுந்தரத்தின் எதிர்கால வாழ்க்கையை பற்றி கவலைப்படாமல் தங்கள் வாழ்க்கையை வளமாக மாற்றிக்கொண்டு நல்ல நிலைக்கு உயர்ந்தனர்.
சுந்தரத்திற்கு வயது 34 ஆனது. உடல் நிலையும் கொஞ்சம் மோசமானது.
அந்த நேரத்தில் அவனது தந்தை இறந்த செய்தி கிடைத்தது.
இதைத் தொடர்ந்து தனது சொந்த கிராமத்திற்கு திரும்பி வந்த சுந்தரம். திருமணம் செய்து இங்கேயே வாழலாம் என முடிவு செய்துதான்.
ஆனால் அவனுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
அவன் அனுப்பிய பணம் எதுவும் மிச்சம் இல்லாமல் எல்லா பணத்தையும் அவனுது தம்பியும் தங்கையும் அனுபவித்து வந்தனர். சுந்தரத்திற்கு என எதுவும் மிச்சம் வைக்கவில்லை என தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து தனது தாய் மூக்கம்மாளுடன் சண்டை போட்டான் சுந்தரம்.
ஊர் பெரியவர்களிடம் முறையிட்டு தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கூறினான்.
அதைத் தொடர்ந்து ஊர் பெரியவர்கள் சமாதானம் செய்து, மூக்கம்மாள் இருக்கும் வீட்டையும் சுந்தரம் சம்பாதித்து வாங்கிய நிலத்தையும் அவனுக்கே கொடுக்க வேண்டும் என்று பேசி முடித்தனர்.
மூக்கம்மாள் கடைசி மகன் வெள்ளையுடன் சென்று விட்டார்.
சுந்தரம் தனக்கு கிடைத்த இடத்தை விற்பனை செய்து அந்த தொகையை வைத்து திருமணம் செய்து வாழலாம் என முடிவு செய்தான்.
ஆனால் விதி அவனை விடவில்லை.
உடல்நிலையும் கொஞ்சம் மோசமானது.
அவனுக்கு பெண் கொடுக்கவும் யாரும் முன்வரவில்லை.
இதனால் திருமணம் செய்யும் எண்ணத்தை கைவிட்டான் சுந்தரம்.
பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே தனது நிலத்தை விற்பனை செய்து அதன் மூலம் கிடைத்த பெரும் தொகையை வங்கியில் முதலீடு செய்தான். அப்போது தான் சுந்தரத்திற்கு தன்னுடன் வேலை பார்த்த நண்பர்கள் கூறியது ஞாபகம் வந்தது.
‘‘ஒருவன் தான் சம்பாதிக்கு பணத்தை திட்டமிட்டு தேவையான வகைகளில் அவர்களே முதலீடு செய்து பெருக்கா விட்டால் அதன்பலனை அனுபவிப்பது அரிதான செயலாகிவிடும்’’ என்று கூறியது ஞாபகம் வந்தது.
உடனே சுந்தரத்திற்கு மனத்தில் ஒருவித தெளிவு ஏற்பட்டது.
தனது வங்கி கணக்கில் இருந்த பணத்தின் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு சென்னையில் இருக்கும் தனது நண்பர்களை பார்க்க சென்றான்.
அவர்களிடம் நடந்த விபரத்தை கூறினான்.
அவர்களும் உடனே சுந்தரம் சொந்தமாக தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகளை கூறினர்.
அவர்கள் கூறியது போலவே சுந்தரம் சொந்தமாக தொழில் தொடக்கி நடத்தினான் .
அதன் மூலம் கிடைத்த வருமானத்தை திட்டமிட்டு சேமித்து செலவு செய்து புதிய வாழ்க்கையைத் தொடங்கினான்.