லவ் பேர்ட்ஸ்

கிரீச்…. கிரீச்….. என்ற பறவைகளின் சத்தம் அந்தக் குடியிருப்புப்பகுதியையே நிறைத்துக் கொண்டிருந்தது.
” என்னங்க ஒரு பறவைகளோட சரணலாயமே இங்க இருக்கு போல’’
“ஆமா…. இந்த வீட்டுல வெங்கடேசன்னு ஒருத்தர் இருக்கார் . அவர்தான் இந்த லவ்பேர்ட்ஸ் எல்லாம் வளத்திட்டு இருக்காரு, நல்ல ரசனையான ஆளா இருப்பார் போல
“ம்”
எவ்வளவு பறவைகள் இருக்கும்
“நெறையா”
“நெறையான்னா எவ்வளவு இருக்கும் கொஞ்சம் ஆச்சர்யப்பட்டே கேட்டார் ரமேஷ்
நெறையான்னு சொல்றத விட இங்க லவ்பேர்ட்ஸ் தான் அதிகமா இருக்குன்னு நெனைக்கிறேன்.
அப்பார்ட்மெண்ட்க்குள்ள இப்படி குருவிகள வச்சிட்டு இருக்கிறது. தொந்தரவா இல்லையா? என்ற ரமேஷின் கேள்விக்கு செல்வம் கொஞ்சம் சிரித்துக் கொண்டே பதில் சொன்னார்.
இசையும் காத்தும் என்னைக்கும் நமக்கு சலிக்கிறதேயில்ல. அப்பிடித்தான் இந்த பறவைகளோட சங்கீத சத்தமும் காலை விடியும் போது ஒரு அருமையான குரல்ல கூடி எந்திரிக்கும். அப்பெறம் பொழுது அடையும் போது சேர்ற குரல்ல ஒண்ணா கத்தும் இங்க இருக்கிறது. ஒரு பறவைகளோட சரணாலயத்தில இருக்கிற மாதிரியே நமக்குத் தோனும் என்று செல்வம் சொன்ன போது பறவைகள் ஆனந்தமாய் ஏதேதோ தன் குரலில் பேசிக் கொண்டிருந்தன. அந்தச் சத்தம் அவர்களை பறவைகளின் சரணாலயத்திற்குள் வைத்தது போலவே இருந்தது.
இருவரும் அந்தக் குடியிருப்புப் பகுதிக்குள் உள்ள வீட்டிற்குள் நுழைந்தார்கள். நீங்க லவ்பேர்ட்ஸ் வளக்கலையா?
‘ம்ஹுகும்… அத வச்சு எங்களால சமாளிக்க முடியாது’ என்ற செல்வம் தன் குடியிருப்பு வீட்டின் கதவை சாவி கொண்டு திறந்தார்.
“செல்வம் “”ம்”
“நல்ல வீடா இருக்கே, எவ்வளவு? ’’என்ற வினாவை அவர் முன்னால் வைத்தார் ரமேஷ்
பெருமூச்சை வெளித்தள்ளிய செல்வம் அத ஏன் கேக்குறீங்க.‘‘ இந்த வீட்ட வாங்கி பத்து வருசத்துக்கு மேல ஆகிப்போச்சு. இன்னும் இ.எம்.ஐ கட்டி முடிக்கல .ஒத்த வீட்ட வாங்கிட்டு நாம படுற வேதனை கொஞ்ச நஞ்சமில்ல. மாசாமாசம் அதுக்கு கட்டுறதுக்குள்ள இடுப்பெலும்பு நொறுங்கிப் போகுது. எப்படித்தான் நாலு வீடு அஞ்சு வீடு வச்சீருக்காங்களோ தெரியல. நொந்தபடியே ரமேஷ்க்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார்.
“செல்வம்”
“ம்”
ஒங்க மிஸஸ் இப்ப பொண்ணு வீட்டுல தான இருக்காங்க.
ஆமா …ரமேஷ் டெலிவரி டைம் அதான்
“ஓ …… டெலிவரியா”
“ஆமா”
இப்ப என்ன மாசம் நடந்திட்டு இருக்கு “
“ஒன்பது”
“அடுத்த மாசம் பேரனோ? பேத்தியோ? இங்க வெளையாடுவாங்க இல்லையா?
“ஆமா “
“மாப்பிள்ளை யாரு செல்வம்?
சொந்தமா? இல்ல அசலா?
ரெண்டுமே இல்ல,
பெறகு
எம்பொண்ணுக்குப் புடிச்ச பையன அவளே தேடிக் கண்டுபிடிச்சுக்கிட்டா
லவ் மேரேஜா?
“ஆமா கூட வேல பாக்குற பையன். சொன்னா எங்களுக்கும் அதுதான் சரின்னு பட்டது. நாம மாப்பிள்ளை பாத்தாலும் அவளுக்கு பிடிக்கணுமே அவளுக்குப்பிடிச்ச மாப்பிள்ளைய அவளே தேர்ந்ததெடுத்ததில எங்களுக்கு சந்தோசம் அப்போதும் லவ் பேர்ட்ஸின் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.
” யாரா இருந்தா என்ன சேந்து வாழ்றவங்களுக்கு பிடிச்சா போதும் என்று செல்வம் சொன்னபோது வெங்கடேசின் வீட்டிலிருந்து பயங்கரமான சத்தம் கேட்டது.
என்னங்க இப்படியொரு சத்தம் செல்வம் கொஞ்சம் எழுந்தே கேட்டார்.
‘அதுவா நீங்க கேட்டீங்களே அந்த லவ்பேர்ட்ஸ் வீடு’ அங்க இருந்து தான் இந்த சத்தமெல்லாம்
ஏன் என்னவாம்?
அவங்க பொண்ணு ஒரு பையன லவ் பண்றா போல
இவங்க அவளுக்கு வேற மாப்பிள்ள பாத்து வச்சுருக்காங்க . வேணாம் நான் லவ் பண்ணுனவனத் தான் கல்யாணம் பண்ணுவேன்னு அந்த பொண்ணு சொல்றாமுடியாது. நாங்க விடமாட்டோம்னு அவங்க குடும்பமே அந்த லவ்வுக்கு எதிர்த்து நிக்கிறாங்க என்று செல்வம் சொன்ன போது ரமேஷ் விக்கித்து நின்றார்.
என்னது லவ்வுக்கு எதிர்ப்பா?
“ஆமா”
காதலுக்கு எதிர்ப்பு தெரிவிச்சிட்டு இதுல லவ் பேர்ட்ஸ் வளக்கறாங்களாம், லவ்பேர்ட்ஸ் நல்ல முரண்பாடா இருக்குங்க என்று சொன்ன போது, வெங்கடேசின் வீட்டிலிருந்து பயங்கரமான சத்தம் வந்து கொண்டிருந்தது.
லவ் பேர்ட்ஸ் தங்கள் மொழியில் அழகாய் ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தன.
ராஜா செல்ல முத்து