நட்பை முறிக்கும் பொறாமை குணம்

பிற்பகல் 12 மணி உச்சி வெயிலில் கையில் சாப்பாட்டு பையுடன் வேகவேகமாக நடந்து சென்று கொண்டிருந்தார் மஞ்சுளா.
அப்போது ஸ்கூட்டரில் வந்த ஷோபனா, மஞ்சுளா வாங்க வண்டியில் போகலாம் என்று தனது ஸ்கூட்டரில் ஏற்றிக் கொண்டார்.
வண்டி தனியார் பள்ளியில் வாசலுக்கு வந்து நின்றது.
ஷோபனாவும் மஞ்சுளாவும் வேக வேகமாக வண்டியிலிருந்து இறங்கி பள்ளிக்குள் சென்றனர்.
அந்த பள்ளியில் ஷோபனாவின் மகளும் மஞ்சுளாவின் மகளும் 1ம் வகுப்பு படிக்கின்றனர்.
அந்த குழந்தைகளுக்கு 12 மணிக்கு மதிய உணவு இடை வேளை.
அந்த நேரத்தில் தங்களது குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுக்கவே அவர்கள் இரண்டு பேரும் வந்தனர்.
அப்போது பள்ளியில் மதிய உணவுக்கு மணி அடித்ததும் ஷோபனாவின் மகளும், மஞ்சுளாவின் மகளும் தாங்கள் வழக்கமாக சாப்பிடும் இடத்திற்கு வந்து தங்களது தாய்மார்களுக்காக காத்து கொண்டிருந்தனர்.
தங்களது அம்மாக்கள் பள்ளிக்குள் வந்ததைப் பார்த்த அந்த குழந்தைகள் வேகமாக வந்து அவர்களை கட்டி பிடித்தனர்.
அவர்களை தூக்கிக் கொண்டு மஞ்சுளாவும் ஷோபனாவும் வழக்கமாக உட்காரும் இடத்திற்கு வந்தனர்.
அங்கு ஏற்கனவே மேரியும் கவிதாவும் தங்களது குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தனர். அவர்களுடன் அமர்ந்து மஞ்சுளாவும், ஷோபனாவும் தங்களது குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுத்தனர்.
மேரி, கவிதா, மஞ்சுளா, ஷோபனா ஆகியோரின் மகள்கள் 1ம் வகுப்பு ஒரே வகுப்பில் படிக்கின்றனர். அதனால் அவர்களுக்கு மதியம் சாப்பாடு கொடுக்க வரும் போது இவர்களுக்குள் நட்பு ஏற்பட்டது.
தினமும் மதியம் சாப்பாடு கொடுக்க வரும் போதும், மாலை பள்ளியிலிருந்து வீட்டுக்கு குழந்தைகளை அழைக்க வரும் போதும் அவர்கள் சந்தித்துக் கொள்வதால் நாளுக்கு நாள் அவர்களின் நட்பு அதிகமானது.
அவர்கள் ஒவ்வொருவரும் மாறி மாறி மற்றொருவர் வீட்டுக்கு சென்று வந்தனர்.
ஷோபனாவின் கணவர் சுரேஷ் வங்கியில் வேலை பார்க்கிறார். சொந்த வீட்டில் வசதியாக வாழ்ந்து வருகின்றனர்.
மஞ்சுளாவின் கணவர் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் வேலை பார்பதால் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
மஞ்சுளா, ஷோபனாவின் வீட்டுக்கு செல்லும் போதெல்லாம் அவர்கள் வீட்டையும், அங்குள்ள அலங்கார பொருட்களையும் பார்த்து, ஐயோ வீடு அழகா இருக்கு… சூப்பரா கட்டி இருக்கீங்க என்று புகழந்து கொண்டே இருப்பார்.
மேலும் ஷோபனா உடுத்தும் அடை மற்றும் அவருடைய மேக்கப் போன்றவற்றையும் பாராட்டுவார்.
ஷோபனா இதை கண்டு கொள்வதில்லை.
ஷோபனாவின் வாழ்க்கை தரம் குறித்து தனது கணவரிடம் கூறும் மஞ்சுளா, ஷோபனா உடுத்தும் ஆடைகள் போல் வாங்க வேண்டும் என்று கூறுவார்.
அவர்களது வசதிக்கு அவர்கள் வாங்குவார்கள். அதை எல்லாம் நாம் வாங்க முடியாது என்று மஞ்சுளாவின் கணவர் பாபு கூறுவார். இருந்தாலும் மஞ்சுளா விடுவதில்லை. கடன் வாங்கியாவது ஒரு சிலவற்றை வாங்கி தரும்படி கூறுவார்.
பாபுவும் வேறு வழியில்லாமல் அவள் கேட்கும் ஒரு சில புடவையை வாங்கிக் கொடுப்பார்.
இப்படியாக நாட்கள் நகர்ந்தன.
ஒரு கட்டத்தில் மஞ்சுளாவின் நடவடிக்கை மாறத் தொடங்கியது. ஷோபனாவை பார்த்து பொறாமைப்பட தொடங்கினார்.
ஷோபனாவுடன் பேசிக் கொண்டிருக்கும் மஞ்சுளா ஒரு சில நேரத்தில், உங்களுக்கு என்ன உங்க வீட்டுக்காரரு பேங்க்கில் இருக்காரு… எங்க வீட்டுக்காரரும் தான் இருக்காரே…. என்று ஒருவித வேறுப்புடன் பேசுவார்.
மற்ற தோழிகள் அவரை சமாதானப்படுத்துவார்கள்.
அதே போல் பள்ளியில் நடந்து முடிந்த தேர்வில் ஷோபனாவின் மகள் கீர்த்தி, மஞ்சுளாவின் மகள் அனிதாவை விட கொஞ்சம் அதிகமான மதிப்பெண் பெற்று விட்டார்.
உடனே மஞ்சுளா, உங்க பிள்ளைக்கு என்ன படிச்ச அம்மா, அப்பா. அதனால அவ அதிகமா மார்க் எடுக்கிற… நான் படிக்காதவ அதனால என் பிள்ளையும் சரியா படிக்க மாட்டீங்கிது என்று பேசினார்.
இவ்வாறு மஞ்சுளாவின் பேச்சில் மாற்றம் இருப்பதை ஷோபனா மற்றும் மேரி, கவிதா ஆகியோர் உணர்ந்தனர்.
ஷோபனாவின் மகள் கீர்த்திக்கு பிறந்த நாள். அன்று அவள் பள்ளிக்கு புத்தாடை அணிந்து வந்தார்.
குழந்தை கீர்த்தி அணிந்து வந்த ஆடையை பார்த்ததும், மஞ்சுளாவின் முகம் மாறியது. அதன் விலை எவ்வளவு என்று கேட்டார்.
ஒருவித சளிப்புடன் கீர்த்தியை தூக்கிய மஞ்சுளா, உங்களுக்கு உள்ள வசதிக்கு நீங்க இந்த மாதிரியெல்லாம் டிரஸ் வாங்கலாம். எங்களுக்கு எல்லாம் இந்த மாதிரி டிரஸ் வாங்க முடியாதுன்னு பொறாமையுடன் பேசினார்.
அவரது பேச்சை கேட்டதும், ஷோபனா, மேரி, கவிதா ஆகியோருக்கு கோபம் வந்தது. ஆனால் ஒன்றும் சொல்லாமல் விட்டுவிட்டனர்.
அன்று வீட்டுக்கு சென்றதும், மஞ்சுளா தனது கணவரிடம், கீர்த்தி அணிந்து வந்த ஆடை போன்றே தனது மகள் அனிதாவுக்கும் வாங்க வேண்டும் என்று சண்டை போட ஆரம்பித்தார்.
அவ்வளவு தொகைக்கு நாம் வாங்க முடியாது என்று பாபு கூறினார்.
ஆனால் மஞ்சுளா கேட்கவில்லை. எப்படியாவது நமது மகள் பிறந்த நாளுக்கு அதே போன்று தான் வாங்க வேண்டும் என்று கூறிவிட்டார்.
இதனால் மஞ்சுளா வீட்டில் சண்டை ஏற்பட தொடங்கி வீட்டில் நிம்மதி பறிபோனது.
ஷோபனாவின் மகள் கீர்த்திக்கு அடிக்கடி உடல்நல குறைவு ஏற்பட தொடங்கியது.
இது குறித்து தனது சக தோழிகளான மேரி, கவிதா ஆகியோரிடம் கூறி வருந்தப்பட்ட ஷோபனா, மஞ்சுளா கண் வைப்பதால் தான் கீர்த்திக்கு அடிக்கடி உடல் நல குறைவு ஏற்படுகிறது என்று தனக்கு உள் மனதில் தோன்றுவதாகவும் அதனால் மஞ்சுடாவுடனான நட்பை விலக்கிக் கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் கூறினார்.
மஞ்சளா நடந்து கொள்ளும் விதம் அந்த மாதிரி தான் உள்ளது என்பதை உணர்ந்த மேரியும், கவிதாவும் தாங்களும் மஞ்சுளாவுடனான நட்பை விலக்கிக் கொள்ள முடிவு செய்தனர்.
கொஞ்சம் கொஞ்சமாக மஞ்சுளாவுடன் பேசுவதை அவர்கள் தவிர்க்க தொடங்கினர்.
தனது தோழிகள் தன்னிடம் சரியாக பேசாமல் விலகிக் செல்வதை மஞ்சுளா உணர்ந்தார்.
அன்று மதியமும் வழக்கம் போல் மஞ்சுளா தனது குழந்தைக்கு சாப்பாடு கொண்டு வந்து, வழக்கம் போல் உட்காரும் இடத்திற்கு வந்தார்.
மகள் அனிதா தனியாக நின்று கொண்டிருந்தார்.
ஆனால் அந்த இடத்தில் ஷேபனா, கவிதா, மேரி யாரும் இல்லை.
அவர்கள் வேறு ஒரு இடத்தில் தங்களது குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுத்துக் கொண்டு இருந்தனர்.
வேகமாக அங்கு சென்ற மஞ்சுளா அவர்களிடம் என்ன இங்க வந்து உட்கார்ந்திக்கிட்டேங்க என்று கேட்டார்.
உடனே அவர்கள் மூன்று பேரும் இனி நாங்கள் யாரும் உங்களிடம் பேச விரும்பவில்லை. அதனால் நாங்கள் தனியாகவே உட்கார்ந்து கொள்கிறோம் என்று முகம் சுளிக்க பேசினர்.
மஞ்சுளாவுக்கு தான் நடந்து கொண்ட விதமே தன்னை அவர்கள் ஒதுக்குவதற்கு காரணம் என்பதை உணர்ந்தார்.
வேறு வழியில்லாமல் தனியாக உட்கார்ந்து தனது குழந்தைக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு வீட்டுக்கு சென்றார்.
அன்று இரவு தனது கணவர் பாபுவிடம் நடந்த விபரத்தை கூறி அழுதார்.
நீ முதலில் பொறாமை படுவதை நிறுத்து. உன்னோட இந்த குணத்தால் நம் வீட்டில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு நிம்மதியை இழந்து விட்டோம்.
நீ நீயாக இருக்க பழகு. அடுத்தவர்களை பார்த்து அவர்களை போல் நாமும் இருக்க வேண்டும் என்று நினைக்காதே. அப்படி நினைத்தால் அதுவே உன்னை வீழ்த்திவிடும் என்று அறிவுரை கூறினார்.
கணவர் கூறிய வார்த்தைகளின் உண்மையை உணர்ந்த மஞ்சுளா தான் செய்த தவறுக்காக தனது தோழிகளிடம் மன்னிப்பு கேட்க விரும்பினார்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை, ஷோபனா வீட்டுக்கு சென்ற மஞ்சுளா, தான் நடந்து கொண்டவிதத்திற்காக மன்னிப்பு கேட்பதாக கூறினார். இனிமேல் இது போல் தான் நடந்து கொள்ள மாட்டேன் என்று மனம் வருந்த பேசினார்.
அவரது மன நிலையை உணர்ந்த ஷோபனா அவரை மன்னித்துவிடுவதாக கூறினார்.
மேலும் மேரி, கவிதா ஆகியோரிடம், மஞ்சுளா மனம் வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டதை கூறி இனி வழக்கம் போல் ஒற்றுமையாக இருக்கலாம் என்று ஷோபனா கூறினார்.
அவர்களும் ஷோபனாவின் முடிவுக்கு சம்மதம் தெரிவித்தனர்.
அடுத்த நாள் முதல் அவர்கள் பழையபடி நட்புடன் பழகினர்.