சாலையோர வியாபாரம்

  • ராஜாசெல்லமுத்து

ரமேஷ் தன் கழுத்தில் கிடந்த ஹியர் போனுடன் தி.நகர் சாலையில் ஓடிக் கொண்டிருந்தான்.

தம்பி நில்லுங்க. ஏன் இப்பிடி ஓடுறீங்க. நில்லுங்க என்று ஒரு பெரியவர் விரட்ட விரட்ட நிற்காமல் ஓடிக்கொண்டேயிருந்தான் ரமேஷ்.

‘எவண்டா இவன் இப்பிடி ஓடிட்டு இருக்கான்’ என்று பார்க்காதவர்கள் பாவம் செய்தவர்கள். அவனின் வலி அவனுக்குத்தானே தெரியும். வேடிக்கை பார்ப்பவர்களுக்கு எங்கே அது விளங்கப் போகிறது. அவன் பின்னால் ஒரு போலீஸ் விரட்டிக் கொண்டே வந்தார்.

‘டேய் நில்லுடா, டேய் நீ எங்க போனாலும் இங்க தான வரணும்’ ஓட்டம் காட்டுறயா? நீ எம்புட்டுத் தூரத்துக்குத்தான் ஓடுவேன்னு பாப்பமே’ ரமேஷை விடாமல் துரத்திக் கொண்டே சென்றார் போலீஸ்.

சார் வேணாம் சார், விட்டுருங்க சார். நான் புள்ள குட்டிக்காரன். விட்ருங்க. ரமேஷ் இதைப் பார்த்ததும் அந்த போலீஸ் விடாமல் துரத்திக் கொண்டே இருந்தார்.

ஒரு கட்டத்தில் ரமேஷால் ஓட முடியாமல் நின்றான். அவனின் நெஞ்சுச் சட்டையைப் பிடித்து இழுத்தார் போலீஸ்காரர்.

‘சார் வேணாம் சார், அவன் பேசும்போதே அவன் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது.

‘டேய் ஏண்டா இப்பிடி நடிக்கிற?’

‘இல்ல சார்’

‘டேய் நடிக்காதடா’ அவனின் சட்டைப் பையிலிருந்த பணத்தைப் பதம் பார்த்தார் போலீஸ்காரர்.

‘சார் ஏவாரமே இல்ல சார், மொத்தமே நூறு ரூபாய்க்கு தான் வித்திருக்க’ கெஞ்சினான்.

‘வித்தயில்ல குடு’

‘சார், மொத்தமே அவ்வளவு தான் இருக்கு வீட்டுக்கு போகணும் சாப்பாட்டுக்கு காசு ஏதும் இல்ல சார்’

‘வித்தயில்ல, இதக் குடுத்திட்டுப்போ அப்பெறம் போயி வித்துக்கோ’

ரமேஷ் எது சொல்லியும் போலீஸ்காரர் கேட்கவே இல்லை.

கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த ஹியர் போனை தொட்டுப் பார்த்தான். மீண்டும் வீதிக்கே வந்தான்.

‘ஹியர் போன், ஹியர் போன்’ கூவ ஆரம்பித்தான்.

‘டேய் இங்கெல்லாம் என்ன விக்கிறோம்னு நெனச்ச. நீ பாட்டுக்கு இங்க வந்து கூவிக் கூவி வித்திட்டு இருக்க. போடா அந்தப்பக்கம்’ விரட்டினான் ஒரு கடைக்காரன்.

ஏன் இங்க விக்கக் கூடாதா?

‘ஆமா’

ஏன்? எதிர்கேள்வி கேட்டான் ரமேஷ்.

ஏன்னா, நாங்க வரி கட்டுறமே.

‘நானுந்தாங்க கட்டுறேன்’ என்று ரமேஷ் சொன்னபோது சுற்றியிருந்தவர்கள் அனைவரும் கொள் எனச் சிரித்தார்கள்.

ஏன் சிரிக்கிறீங்க?

‘ஏண்டா விக்கிறது வீதியில நீ எங்க போயி வரி கட்டுற?

தெனமும் போலீஸ்காரங்க என்கிட்ட காசு வாங்குறாங்களே

‘அது வரியா?

ப்பூ. என மீண்டும் சிரிக்க ஆரம்பித்தனர்.

‘ஏன் இப்பிடி சிரிக்கிறீங்க’ இப்பக் கூட என்கிட்ட இருந்த நூறு ரூபாய வாங்கிட்டுப் போனாங்களே என்றான் வெள்ளந்தியாய்.

ஹியர் போன், ஹியர் போன் மீண்டும் சத்தம் போட ஆரம்பித்தான்.

தம்பி அடி வாங்காம போக மாட்ட போல.

‘ஏன் சார் கொஞ்சம் முறைப்பாகவே கேட்டான்.

இங்கயும் அதத்தான வித்திட்டு இருக்கோம். நீ வந்து வித்தா எங்க ஏவாரம் கெட்டுப் போகாதா?

சார், ரோட்டுல தான வித்திட்டு இருக்கேன். இதுல எங்க ஒங்க ஏவாரம் கெடப் போகுது’

‘தம்பி, நீங்க வாக்குவாதம் பண்ணிட்டு இருக்காதீங்க. நடைய கட்டுங்க இல்லன்னா நடக்கிறதே வேற’

‘சார் ரமேஷ் கெஞ்சினான்’

‘ம்… போ’ வழியைக் காட்டினார்கள்.

அப்பா ப்ராஜக்ட் பண்ணனும் சாட் பேப்பரு, கெட்ச், வாங்கிட்டு வாப்பா’

‘ஏங்க, இன்னைக்கு வாடகை குடுக்கணும் சிலிண்டர் காலியாயிருச்சு. அரிசி பருப்பு எதுவுமில்லை’ வரும்போது வாங்கிட்டு வாங்க. என்று வீட்டில் பேசிய பேச்சுக்கள் ரமேஷின் காதில் மெல்லப் பட்டுத் தெறித்தது.

இயர் போனில் கேட்டுக்கொண்டே போனான்.

‘டேய், இங்கவா என்று இரண்டு போலீஸ்காரர்கள் கூப்பிட ரமேஷுக்கு வெலவெலத்தது.

‘என்ன சார்?’

‘பணமிருக்கா?’

இல்ல சார், இப்ப தான் ஒரு போலீஸ்காரரு வாங்கிட்டுப் போனாரு. அப்பிடியா? இப்ப ஒங்கிட்ட காசு இல்லைல’

‘ஆமா சார்’

‘அப்பிடின்னா……’’ என்று ரமேஷின் அருகில் வந்த போலீஸ்காரர்களைப் பார்த்ததும் அவன் கழுத்தில் கிடந்த ஹியர் போனை உருவி வீசிவிட்டு…

ரமேஷ் ஓடினான் தன் வாடிக்கையாளர் கேட்டத்தை வாங்கிக் கொண்டு போய் கொடுக்க…*************************************௮