இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வருவாய் உயர்வு

சென்னை, பிப். 14–
2017–18 ஆம் நிதி ஆண்டின் 3 வது காலாண்டில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வருவாய் திருப்திகரமான வளர்ச்சியை நோக்கி உள்ளதாகவும், கார், வீடு போன்ற சில்லரை கடன், சிறு குறு நடுத்தர நிறுவனங்கள், வேளாண் துறைக்கு இந்த வங்கி அதிக கடன் வழங்க முடிவு செய்துள்ளதாகவும் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அலுவலருமான ஆர்.சுப்பிரமணிய குமார் கூறினார்.
வங்கியின் செயல்பாடுகள், வருவாய் குறித்து ஆர்.சுப்பிரமணிய குமார், செயல் இயக்குநர்கள் கே. சாமிநாதன், அஜய்குமார் ஸ்ரீவத்சவா ஆகியோர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:– வங்கிக்கு, தமிழ்நாடெங்கும் 1150 கிளைகள் உள்பட, மொத்தமாக 3400 க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன. வங்கியின் அனைத்து செயல்பாடுகளும் 100 சதவீதம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. மேலும், மொபைல் செயலி மூலமான செயல்பாடுகள், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான நிதி பரிமாற்றங்கள் அனைத்தும் இணையம் மூலமாக நடைபெறும் வண்ணம், நவீன முறையில் மேம்பாடும் செய்யப்பட்டுள்ளது. 81 ஆம் ஆண்டு நிறுவன நாள் விழாவில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சார்பில், வாடிக்கையாளர்கள், தாங்கள் இருக்கும் பகுதியிலேயே பணம் எடுக்கவும், பணம் செலுத்தவும் வசதியாக, நடமாடும் வாகனம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
தேக்க நிலை மீட்கப்பட்டது
வங்கியின் வளர்ச்சிக்கு தேவையான பல்வேறு திட்டங்களை, நாங்கள் பொறுப்பேற்ற பின்னர் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம். இதனால், 2017–18 ஆம் நிதியாண்டின் 3 வது காலாண்டில், வங்கியின் செயல்பாடுகளால், நிதி நிலைமை, வளர்ச்சியை நோக்கி திருப்திகரமான நிலையில் உள்ளது. கடந்த ஆண்டுகளில் இருந்த தேக்க நிலை மீட்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2018–19 ஆம் நிதியாண்டில், வங்கி நிச்சயமாக லாபத்தை எட்டும் என்று நாங்கள் மதிப்பீடு செய்துள்ளோம். அதற்காக வங்கி செல்ல வேண்டிய பாதையையும் தீர்மானித்துள்ளோம்.
சீர்திருத்த நடவடிக்கைகள்
குறிப்பாக, வங்கியின் சீர்திருந்த நடவடிக்கைகளாக, வாடிக்கையாளர் செயல்பாடுகளில், சில்லறை வணிகம், சிறு குறு நடுத்தர தொழில்கள் மற்றும் வேளாண் துறைகளில் கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம், வங்கியை வளர்ச்சியை நோக்கி செலுத்தலாம் என்று முடிவு செய்துள்ளோம். மொபைல் செயலி உள்ளிட்ட நவீனபடுத்துதல்கள் மூலம், வாடிக்கையாளர்களுக்கும் வங்கி நிர்வாகத்துக்கும் இடையே உள்ள இடைவெளிகளை குறைத்து, பிரச்சினைகளை கண்டறிய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், குறு நிறுவனங்கள் மற்றும் நுண்கடன் பிரிவில் பாதுகாப்பான முதலீடாக இருப்பதால் வங்கி கூடுதல் தொடர்பு ஏற்படுத்துவதன் மூலம், மேம்பட்ட வளர்ச்சி சாத்தியம் என முடிவு செய்துள்ளோம். அதற்கு ஏதுவாக கோயம்பேடு மார்க்கெட் போன்ற 220 இடங்களை கண்டறிந்துள்ளோம். அவர்களை வங்கியின் வாடிக்கையாளராக்குவதன் மூலம் சில்லறை வர்த்தகத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும் என்று உறுதியான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதேபோல் வாகனக் கடன் பிரிவிலும் நல்ல நிலைமை உள்ளது. வாடிக்கையாளர்களின் கருத்துக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம், செயல்பாடுகளில் ஊக்கத்தை ஏற்படுத்தவும் முடிவு செய்துள்ளோம்.
வருவாய் வளர்ச்சி ஒப்பீடுகள்
2017–18 நிதி ஆண்டின் 3 வது காலாண்டு வரையில், வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ. 3 லட்சத்து 68 ஆயிரத்து 128 கோடியாக இருந்தது. இது கடந்த 2016 டிசம்பர் வரையிலான ரூ.3 லட்சத்து 64 ஆயிரத்து 736 கோடியை விட ரூ.3392 கோடி அதிகம் ஆகும். அதேபோல் வங்கியின் டெபாசிட்களைப் பொறுத்தவரை, கடந்த 2017 டிசம்பர் மாதம் 31 ந்தேதி வரையிலான 3 வது காலாண்டு காலத்தில் ரூ.2 லட்சத்து 16 ஆயிரம் கோடியாக இருந்தது. இது கடந்த 2016 டிசம்பர் வரையிலான ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்து 861 கோடியை விட, ரூ.5731 கோடி அதிகம் ஆகும்.
அதேபோல், நடப்பு கணக்கு மற்றும் சேமிப்பு கணக்கு விகிதாச்சார டெபாசிட்களை பொறுத்தவரை, குறித்த கால முதலீடுகள் அதிகரித்ததன் காரணமாக, 2016 காலாண்டை விட 2017 டிசம்பர் வரையிலான காலத்தில் மிக சொற்ப அளவில் நடப்பு கணக்கு மற்றும் சேமிப்பு கணக்கு விகிதாச்சார சறுக்கல் ஏற்பட்டுள்ளது என்றாலும் மொத்த முதலீடுகள் ரூ.222 கோடி அளவுக்கு கூடுதல் ஆகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
காலாண்டிலும் வளர்ச்சி
மேலும், 2017 டிசம்பர் வரையிலான 3 வது காலாண்டு வரையான காலக்கட்டத்தில் முந்தைய ஆண்டைவிட எம்எஸ்எம்இ துறையில் 14.14 சதவீத வளர்ச்சியும், சில்லறை வணிகத்தில் 31.86 சதவீத வளர்ச்சியும், அதேபோல் முன்னுரிமை துறை கடன்களிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும் கடந்த ஆண்டில் பெற்றுள்ளது. அதேபோல், வட்டி இல்லாத வருவாயிலும் ரூ.80 கோடி அளவுக்கு வருவாய் கூடி உள்ளது.
நிதிக் காலாண்டு அளவில் பார்க்கும் போதும், கடந்த 2017 செப்டம்பர் வரையிலான காலாண்டை காட்டிலும், டிசம்பர் வரையிலான காலாண்டின் மொத்த வர்த்தகம் ரூ.3916 கோடியும், மொத்த டெபாசிட்டில் ரூ.5044 கோடியும் கூடி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சீரான வளர்ச்சியை வைத்து பார்க்கும் போது, 2018–19 ஆம் ஆண்டின் வளர்ச்சியானது மிகவும் சிறப்பாக இருக்கும் என்று உறுதியான முடிவுக்கு வந்துள்ளோம் என்று கூறினர்.
நிகழ்ச்சியில், வங்கியின் உயர் அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.