2-ம் உலகப்போரில் பயன்படுத்திய வெடிகுண்டு கண்டெடுப்பு

லண்டன் விமான நிலையத்தில் 2-ம் உலகப்போரில் பயன்படுத்திய வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது.

கடற்படை வீரர்கள் அந்த வெடிகுண்டை பத்திரமாக அப்புறப்படுத்தினர்.

இங்கிலாந்து தலைநகர் லண்டனின் கிழக்கு பகுதியில் இருக்கும் லண்டன் சிட்டி சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே உள்ள தேம்ஸ் நதிக் கரையில் ஜார்ஜ் வி டாக் என்கிற இடத்தில் கப்பல் கட்டும் தளம் இயங்கி வருகிறது. இந்த நிலையில், விமான நிலையத்தின் ஓடுபாதைகளை விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. இதற்காக ஜார்ஜ் வி டாக் பகுதியை ஒட்டி உள்ள விமான நிலைய ஓடுபாதையில் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது அங்கு 2-ம் உலகப்போரின்போது பயன்படுத்திய சக்தி வாய்ந்த ஒரு வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. இந்த குண்டு வெடித்தால் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு பேரழிவை ஏற்படுத்தும் என்பதால் அங்கு உடனடியாக பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து 214 மீட்டர் தூரத்துக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு நடவடிக்கையாக லண்டன் நகர சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து புறப்பட இருந்த அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் விமான நிலையத்துக்கு வரக்கூடிய சாலைகளும் மூடப்பட்டன. மேலும் லண்டன் விமான நிலையத்துக்கும் உல்விச் ஆர்சனல் நகருக்கும் இடையேயான ரெயில் போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. அப்பகுதியில் குடியிருந்த மக்கள் அனைவரும் தற்காலிகமாக வேறு இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். எந்த வாகனங்களும் அப்பகுதி யில் உள்ள சாலைகளில் இயக்க அனுமதிக்கப்படவில்லை. பின்னர் கடற்படை வீரர்கள் அந்த வெடிகுண்டை பத்திரமாக அப்புறப்படுத்தினர்.