வேலை

சிறுகதை கோவிந்தராம்
“ஐயா…. நான் அனாதைங்க. ஏதாவது ஒரு வேலை குடுங்க. நல்லபடியா செய்வேன். சம்பளம் கூட குடுக்க வேணாடம்,” என்று கெஞ்சினான் அந்த சிறுவன் கிருஷ்ணன் என்ற கிச்சா.
கடைக்காரர் யோசனை செய்ய ஆரம்பித்தார். பெயர் வேற கிருஷ்ணன் என்ற கிச்சா என்கிறான்.
ஒரு பேரைச் சொன்னாலே இந்தக் காலத்திலே நம்ப முடியாது. கிச்சான்னு இன்னொரு பேரை வேறச் சொல்கிறான். இவனை வேலைக்குச் சேர்த்தால் ஒழுங்காக வேலை பார்ப்பானா. சம்பளம் வேறு வேண்டாம்னு சொல்றான் சம்பளம் குடுக்கலைனா கல்லா பெட்டியிலே கையை வைச்சிட்டு எஸ்கேப் ஆயிருவானா. இல்லாட்டி கடையிலே உள்ள பொருட்களை களவாண்டு போயிடுவானா என்று பலமாக யோசனை செய்தார் கடைக்காரர்.
இறுதியில்,” தம்பி கிச்சா என்ற கிருஷ்ணா இங்கு எனக்கே சரியான வேலை இல்லை உனக்கு நான் என்ன வேலை குடுக்க முடியும். அதனாலே இங்க வேலை இல்லை வேற எங்கேயாவது போய்க் கேளு” என்றார்.
உடம்பில் நல்ல சட்டை போடாமல் போனதால் தான் வேலை கொடுக்க யோசிக்கிறார்களோ என்று எண்ணிய கிச்சா ஆற்றங்கரையில் கிடந்த ஒரு சட்டையை ஆற்று நீரில் நன்கு அலசி துவைத்து அதைப் போட்டுக் கொண்டான். சட்டையின் நீளம் நன்கு அதிகமாக இருந்ததால் அதை கால் சட்டைக்குள் விட்டு அனைத்து கொண்டான். அருகில் இருந்த ஒரு ஓட்டலுக்குள் சென்று வேலை கேட்டான். கல்லாவில் இருந்த முதலாளி உன் பெயர் என்ன ?என்ன படித்திருக்கிறாய்? உன் வயது என்ன என்று கேட்டார்.
சுதாரித்து கொண்டு “என் பெயர் கிருஷ்ணன், வயது பத்து. ஐந்தாவது பாஸ் செய்திருக்கிறேன்” என்றான். உடனே அவர்”, உனக்கு பொய் சொல்லத் தெரியுமா” என்றார்‘‘. பொய் சொல்லக் கூடாதுன்னு எங்க வாத்தியார் சொல்லிக் குடுத்திருக்கிறார். பொய் சொல்ல மாட்டேன் என்றார். சிறுவன் “அப்படின்னா உனக்கு வேலை குடுக்க முடியாது” என்றார் முதலாளி.
சிறிது நேரம் நின்று யோசனை செய்தான் .மீண்டும் அந்த முதலாளியிடம்” என்னை ஏன் பொய் சொல்ல வேண்டும் என்று சொல்கிறீர்கள் ? என்றான்.
தம்பி இப்ப எல்லாம் பதினைந்து வயத்திற்கு மேல் உள்ளவர்களுக்குத் தான் வேலை குடுக்க முடியும் .உனக்கோ வயது பத்து என்கிறாய் .ஆபீசர் வந்து கேட்டால் நீ பத்து வயது என்று சொன்னால் எனக்குத் தான் தண்டனை கொடுப்பார்கள்”, என்று சொன்னார்.
கிருஷ்ணன் ஒன்றும் பேசாமல் அடுத்து எங்கு போய் வேலை கேட்பது என்று யோசனை செய்து கொண்டே பக்கத்தில் ஒரு கடையில் வேலைக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரப் பலகையைப் பார்த்து அங்கு சென்றான்.
“சார் எனக்கு ஒரு வேலை கொடுக்க முடியுமா? நன்றாக வேலை பார்ப்பேன். பொய் சொல்ல மாட்டேன். திருட்டுத் தனம் செய்ய மாட்டேன் .உண்மையாக உழைப்பேன் என்று சொல்லி வேலை கேட்டான். அந்த கடைக்காரர் தம்பி இந்தக் குணம் உள்ள பையனுக்கு இங்க வேலை கொடுக்க முயடிாது. இது ஒரு மாதிரியான கடை ஓவ்வொருவருக்கும் ஒரு விலை சொல்லணும் பொய் சொல்லனும் . ஏமாற்றத் தெரிந்திருக்க வேண்டும் என்று சொன்னதும் ஒன்றும் கூறாமல் தெருவில் நடக்க ஆரம்பித்தான்.
இது வரை அவன் பேசியதையும் கடைக்காரன் பேசியதையும் கவனித்த சிவசாமி என்ற ஒருவர், இந்தப் பையன் நல்லவனான்னுத் தெரியாது அவனை நாம் தத்தெடுத்து வேலைக்குச் சேர்த்துக் கொண்டால் என்ன என்று யோசனை செய்தார்.
சிவசாமி அந்தப் பையனை அழைத்து”, என்னுடன் என் வீட்டிற்கு வந்து வேலை செய்வாயா” என்று கேட்டார். “என்ன சம்பளப் பணம்? என்ன வேலை? எத்தனை மணி நேரம் வேலை செய்ய வேண்டும்”? என்றான். உடனே அவர்” எங்கள் வீட்டில் இருபத்து நான்கு மணி நேரமும் இருக்க வேண்டும். சொல்கிற எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும். சம்பளம் கொடுக்க மாட்டோம்” என்றார் சிவசாமி. வெகுநேரம் யோசித்த கிருஷ்ணன் வேறு இடத்தில் நல்ல வேலை கிடைக்கும் வரை அவர் சொன்ன வேலையைச் செய்ய முடிவெடுத்தான்.
‘‘சரி சார் நான் உங்கள் வீட்டிற்கு வேலை செய்யத் தயார்’ என்று சொன்னான்.
‘சரி என்னுடன் வேலைக்கு வா’ என்று சொல்லி வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
போகும் வழியிலேயே ஒரு ரெடிமேட் கடைக்குச் சென்று கிருஷ்ணனுக்கு 3 செட் உடைகள் மற்றும் அவனுக்குத் தேவையான பொருட்களை வாங்கினார். வீட்டிற்குச் சென்றதும் அவனை நன்றாக குளிக்கச் செய்து புது உடைகளை கொடுத்து அணியச் செய்து தன்னுடன் சாப்பாட்டு மேஜையில் அமரச் செய்து உணவு உண்ணச் சொன்னார். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஏதாவது பேசினால் சிவசாமி கோபப்படுவாரோ என்று எண்ணி அவர் சொல்வதற்கு ஒரு மறுப்பும் தெரிவிக்காமல் சொன்னதையெல்லாம் செய்தான்.
அடுத்த நாள் கிருஷ்ணனை அழைத்துக் கொண்டு ஒரு பள்ளிக்கு அழைத்துச் சென்று 6ம் வகுப்பில் சேர்த்து அவனுக்கு வேண்டிய புத்தகங்கள் மற்றும் இதர பொருட்களை வாங்கித் தந்தார். நாளை முதல் ஒழுங்காக பள்ளிக்குச் சென்று கவனமாக படிக்க வேண்டும் என்றார். பள்ளிக்கூடம் சென்று படிக்கப் போய் விட்டால் வீட்டில் எப்போது வேலை செய்வது. என்ன வேலை சொல்வார்கள் என்று யோசனை செய்ய ஆரம்பித்தான் கிருஷ்ணன்.
வீட்டிற்கு வந்த சிவசாமியிடம் அவர் மனைவி சகுந்தலா ‘என்னங்க இப்படி ஒரு பையனை அழைத்து வந்து ஒன்றும் என்னிடம் யோசனை கேட்காமல் உங்கள் இஷ்டப்படி அவனை வீட்டில் வைத்தீர்கள். பள்ளிக்கூடத்தில் வேறு சேர்த்து விட்டீர்கள். ஏதாவது தப்பு தண்டா செய்து விட்டால் என்ன செய்வது’ என்று கேள்வி கேட்டார்.
சிரித்துக் கொண்டே சிவசாமி மனைவி சகுந்தலாவிடம் இந்தப் பையனின் குணாதிசயங்களை நேரில் கடையில் நின்று கவனித்துக் கண்டறந்த செயல்களை விளக்கிக் கூறினார்.
‘இது மாதிரி ஒரு பையன் கிடைக்க நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும்’ நல்ல குணமும் எண்ணமும் உள்ளவனை நாம் நல்லபடியாக வளர்த்தால் எதிர்காலத்தில் இவன் நம்மையும் நம்முடைய தொழில் மற்றும் சொத்துக்களை பத்திரமாக பாதுகாப்பான் என்று சொல்ல சகுந்தலாவும் அதை ஏற்றுக் கொண்டாள்.
பள்ளி முடித்து வீட்டிற்கு வந்த கிருஷ்ணன் சிவசாமியிடம் ஐயா நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா என்றான்.
‘என்ன கேட்கப் போகிறாய்? என்றார். எனக்கு ஒரு வேலை தருகிறேன் என்று அழைத்து வந்தீர்கள். வேலையே தராமல் 3 வேளையும் சாப்பாட்டு போட்டு துணி மணி வாங்கித் தந்து பள்ளிக்கூடத்தில் வேறு சேர்த்து விட்டீர்கள். நான் என்ன வேலைகளை எப்போது செய்ய வேண்டும் என்று கூறுங்கள்’ என்றான்.
‘கிருஷ்ணா எனக்கு நீ என்ன வேலை செய்ய வேண்டுமென்று நான் ஒரு முடிவு எடுத்திருக்கிறேன். அந்த வேலை செய்ய உனக்கு படிப்பும் அனுபவமும் வேண்டும். அதற்குத் தான் உன்னைப் படிக்க வைத்திருக்கிறேன். ஆகவே படிப்பை நல்லபடியாக படித்து முடித்துவிட்டு வா. பிறகு என்ன வேலை செய்ய வேண்டுமென்று சொல்கிறேன். அது வரைக்கும் உனக்கு இந்த வேலை தான். எங்கள் வீட்டிலேயே உண்டு, உறங்கி, எழுத்து, வளர்ந்து படிக்க வேண்டியது தான் அந்த வேலை’ என்றார் சிவசாமி.
மறுபேச்சு பேசாமல் அவர் சொன்ன வேலையை ஒழுங்காகச் செய்ய ஆரம்பித்தான் கிருஷ்ணன்.