‘ரிவேரா- – 18’: விஐடியில் 4 நாள் சர்வதேச கலை – விளையாட்டு விழா

வேலூர், பிப். 13–
விஐடி பல்கலைக்கழகத்தில் 4 நாட்கள் நடைபெறும் ரிவேரா –-18 என்கிற சர்வதேச கலை மற்றும் விளையாட்டு விழா 15ந் தேதி தொடங்கி 18ந் தேதி முடிவுறுகிறது. அன்று காலை 9 மணிக்கு இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பிர் தொடங்கி வைக்கிறார். 18ந் தேதி மாலை நடைபெறும் நிறைவு விழாவில் பாகுபலி பட நடிகர் ராணா டக்குபத்தி பங்கேற்று பரிசுகள் வழங்க உள்ளதாக விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தெரிவித்துள்ளார்.
இது சம்மந்தமாக வேந்தர் ஜி.விசுவநாதன் விஐடியில் செய்தியாளர் கூட்டத்தில் கூறியதாவது:
உள் நாட்டிலிருந்தும் ஆசியா, ஆப்ரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட கண்டங்களில் 25 மேற்பட்ட நாடுகளிலிருந்து 400க்கும் மேற்பட்ட பல்கலைக்கழங்கள் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த சுமார் 38 ஆயிரம் மாணவ, மாணவிகள் இவ்விழாவில் பங்கேற்க உள்ளனர். பங்கேற்கும் மாணவ மாணவிகளுக்கு கிரிக்கெட், ஸ்நூக்கர், நீச்சல், வாலிபால், டென்னிஸ், தடகளம், பேஸ்கட் பால், மிஸ்டர் ரிவேரா உள்ளிட்ட 16 விதமான விளையாட்டு போட்டிகளும் நடனம், நாட்டியம், டிராமா, ஒரங்க நாடகம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி, கவிதை, கட்டுரை போட்டிகள், பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம், விவாத அரங்கம், வடிவமைப்பு, குறும்படம் தயாரித்தல் என மொத்தம் 128 நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்க பரிசுத் தொகையாக ரூ. 20 லட்சம் வழங்கப்படுகிறது.
9.9.கி.மீ. மாராத்தான்
இவ்விழாவின் தொடக்கமாக 15ந் தேதி காலை விஐடி 3வது நுழைவு பகுதியிலிருந்து காலை 6 மணியளவில் சுமார் 4 ஆயிரம் பேர் பங்கேற்கும் 9.9 கி.மீ தூர மாரத்தான் ஒட்டம் நடத்தப்படுகிறது. அதனை தொடர்ந்து 9 மணியளவில் விஐடி திறந்தவெளி விளையாட்டு அரங்கில் ரிவேரா தொடக்க விழா வேந்தர் தலைமையில் நடைபெறுகிறது. இதில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் கவுதம் கம்பிர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தொடங்கி வைக்கிறார்.
16ந் தேதி நடைபெறும் 2ம் நாள் நிகழ்ச்சியில் திரை இசை பின்னணி பாடகர்கள் விஜய் பிரகாஷ் சைந்தவி ஷெர்லி சேட்டியா ஆகியோர் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 3ம் நாள் நிகழ்ச்சியாக 17ந்தேதி விக்ரம் வேதா தமிழ் படம் இயக்குநர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி, தெலுங்கு பட இயக்குநர் பூரி ஜெகநாத், சாகா மற்றும் மெகபூபா பட நடிகைகள் பூஜா திவாரியா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சார்மி, இசையமைப்பாளர் எஸ்.எஸ்.தமன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். மேலும் இந்திய ஆண் அழகன் பட்டம் பெற்ற தாரா சிங்கும் பங்கேற்கிறார்.
இந்தாண்டு இந்நிகழ்வின் முக்கிய நிகழ்வாக தமிழ் மொழியிலான நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. ‘‘இன்றைய இயக்குநர்’’ என்ற தலைப்பில் தமிழ் குறும்படம் தயாரிப்பு, ‘‘இங்க் அண்டு டாக்’’ என்ற தலைப்பில் தமிழ் கட்டுரை, கவிதை மற்றும் பேச்சு போட்டியும், ‘‘சொல்லி அடிச்சா கில்லி’’ என்ற தலைப்பில் நடனம், தெருக்கூத்து, நாடக போட்டியும் ‘‘தமிழ் ஜூக்பாக்ஸ்’’ என்ற தலைப்பில் தமிழ் பாடல் போட்டியும், ‘‘டென்ட்கொட்டா’’ என்ற பெயரில் வினாடி வினா போட்டியும், ‘‘வாய்க்கா தகராறு’’ என்ற தலைப்பில் விவாத போட்டியும் என 7 விதமான போட்டி நிகழ்வுகள் மாணவ மாணவிகளுக்கு நடத்தப்படுகிறது.
18ந் தேதி மாலை நடைபெறும் நிறைவு விழாவில் பாகுபலி பட புகழ் தெலுங்கு நடிகர் ராணா டக்குப்பத்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்று இவ்விழாவையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்குகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் ரிவேரா மாணவர் அமைப்பு குழுவினர் உருவாக்கிய ரிவேரா விளம்பர போஸ்டர்களையும் பனியன்களையும் வேந்தர் ஜி.விசுவநாதன் வெளியிட அமைப்பு குழுவினர் பெற்றுக் கொண்டனர். செய்தியாளர் கூட்டத்தில் விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம், இணை துணைவேந்தர் எஸ்.நாராயணன் ஆகியோர் பங்கேற்றனர்.