மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்காக பாட்டரியினால் இயங்கும் வண்டி

முதியோர்களை உட்கார வைத்து கலெக்டரே ஓட்டினார்

திருவண்ணாமலை, பிப்.13–

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் நலனை கருத்தில் கொண்டு ரூ.7 லட்சம் மதிப்பிலான பாட்டரியினால் இயங்கும் வண்டியை கலெக்டர் கந்தசாமி வழங்கினார். அந்த வண்டியை அவரே இயக்கி கலெக்டர் அலுவலக பேருந்து நிறுத்தத்திலிருந்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் வரை மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களை அழைத்து சென்றார்.

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுதிறனாளிகளிடமிருந்தும், கூட்ட அரங்கில் பொதுமக்களிடமிருந்தும் கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக் கொண்டார்.

இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கல்வி உதவித்தொகை, வங்கிக்கடன் உதவி, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 515 மனுக்கள் பெறப்பட்டது. பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மாவட்டகலெக்டர் வழங்கி, மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்திரவிட்டார். மேலும், நிலுவையிலுள்ள மனுக்களின் தொடர் நடவடிக்கைகள் குறித்தும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

மாவட்ட கலெக்டர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியரக பேருந்து நிறுத்தத்தில் இருந்து மாவட்ட ஆட்சியரகத்திற்குள் செயல்படும் பல்வேறு அலுவலகங்களுக்கு சென்றுவர ஏதுவாக ரூ.7 லட்சம் மதிப்பிலான பாட்ரியினால் இயங்கும் வண்டியை வழங்கி கலெக்டர் அவரே இயக்கி மாவட்ட கலெக்டர் அலுவலக பேருந்து நிறுத்தத்திலிருந்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் வரை மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களை அழைத்து சென்றார்.

அலவலக வேலை நாட்களில் இந்த வண்டி காலை 10 மணி முதல் மாலை 6 வரை இயங்கும். ஒவ்வொரு 20 நிமிடத்திற்கு ஒரு முறை சுழற்சி முறையில் இயக்கப்படும் எனவும், திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 58,000 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அதில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகள் உதவிதொகை வாங்குபவர் 7,000 பேர் உள்ளனர் எனவும் கலெக்டர் தெரிவித்தார்.

மேலும், மனுக்கள் அளிக்க வந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மதிய உணவு வழங்கினார். மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 5 நபர்களுக்கு இலவச நவீன ஒளிரும் மடக்கு ஊன்றுகோல், ஒரு மாற்றுத்திறனாளிக்கு முதுகு தண்டுவடம் பாதித்தவர்களுக்கான சிறப்பு சக்கர நாற்காலி, 5 நபர்களுக்கு மூன்று சக்கர மிதிவண்டி என மொத்தம் ரூ.74,500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் க.லோகநாயகி, திட்ட அலுவலர் மகளிர் திட்டம் ப.ஜெயசுதா, மாவட்ட வழங்கல் அலுவலர் ஹரிதாஸ், உதவி இயக்குனர் (கலால்) எம்.எஸ்.தண்டாயுதபாணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜான்சி மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.