மதுரை மாநகராட்சி காய்கறி சந்தைகளில் கமிஷனர் ஆய்வு

மதுரை, பிப்.13–
மதுரை மாநகராட்சி மாட்டுத்தாவணி, கீழ மாரட் வீதி ஆகிய பகுதிகளில் உள்ள காய்கறி சந்தைகளில் கமிஷனர் அனீஷ்சேகர், இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மாட்டுத்தாவணி தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு நடைபாதையில் ஆக்கிரமித்து வைக்கப் பட்டிருந்த காய்கறிகளை அகற்றவும் மாநகராட்சியால் ஒதுக்கீடு செய்யப்பட்ட கடைகளின் அளவை விட கூடுதலாக ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளையும் உடனடியாக அகற்ற கமிஷனர் அனிஷ் சேகர் உத்தரவிட்டார். அங்கு புதிதாக கட்டப்பட்டு செயல்பட்டுவரும் காய்கறி கழிவுகளிலிருந்து உரம் தயாரிக்கும் கூடத்தில் ஆய்வு செய்து தினசரி சேரும் காய்கறி கழிவுகளை விரைவில் மட்குவதற்கு ஏதுவாக காய்கறிகளை சிறுசிறு துண்டுகளாக வெட்டி உரக் கூடத்தில் போடுமாறு கூறினார். அங்குள்ள கழிப்பறைகள் சுத்தமாக உள்ளதா என ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து பங்கஜம் காலனி பகுதிக்கு சென்று குடியிருப்போர் சங்கத்தினரிடம் மட்கும் குப்பைகளை அப்பகுதியிலேயே உரமாக தயாரித்து மாடித்தோட்டங்களில் பயன்படு த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், அதற்கு வேண்டிய உதவிகளை மாநகராட்சியின் சார்பில் செய்து கொடுக்குமாறும் சம்பந்தப்பட்ட அலுவலரிடம் கூறினார்.
கீழ மாரட் வீதியில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் ஆய்வு செய்து அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள கடைகளில் மட்டுமே காய்கறிகள் விற்குமாறும், சாலைகளில் அனுமதியில்லாமல் கடை வைத்தால் நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டார். அங்கு வைக்கப்பட்டிருந்த காய்கறி கழிவுகளிலிருந்து உரம் தயாரிக்கும் பெட்டியை பார்வையிட்டார். காய்கறி மார்க்கெட்டில் வைக்கப்பட்டுள்ள எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறும் உத்தரவிட்டார்.
மேலும் கீழமாரட் வீதி வெங்காய மார்க்கெட்டில் கடைகளின் உள்பகுதியில் மட்டுமே வெங்காய மூடைகள் வைக்குமாறும், போக்குவரத்திற்கு இடையூறாக நடைபாதைகளில் வெங்காய மூடைகளை வைத்தால் நடவடிக்கை எடுக்குமாறும், தொடர்ச்சியாக அப்பகுதிகளில் ஆக்கிரமிப்புக்களை அகற்றுமாறும் மதுரை மாநகராட்சி கமிஷனர் அனீஷ் சேகர் கூறினார்.
இந்த ஆய்வின்போது உதவி கமிஷனர்கள் பழனிச்சாமி, ரமேஷ், உதவி நகர்நல அலுவலர் பார்த்திபன், செயற்பொறியாளர் ராஜேந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், சுகாதார அலுவலர்கள் சிவசுப்பிரமணியன், நாகராஜ், சுகாதார ஆய்வாளர்கள் செல்வகுமார், முருகன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.