மதுரையில் ரூ.50 கோடியில் பழந்தமிழர் பண்பாட்டு மையம்

அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி

தஞ்சாவூர், பிப்.13-

மதுரையில் 50 கோடி ரூபாய் செலவில் பழந்தமிழர் பண்பாட்டு மையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.

தஞ்சையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த அமைச்சர் பாண்டியராஜனிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- மதுரையில் தமிழ்த்தாய்க்கு சிலை அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதே?

பதில்:- ரூ.50 கோடி செலவில் மதுரையில் பழந்தமிழர் பண்பாட்டு மையம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதில் அங்கு ரூ.15 கோடியில் தமிழ்த்தாய்க்கு சிறப்பான வகையில் சிலை அமைக்கப்படுகிறது. இந்த சிலை உலகத்தரத்தில் அமைந்திருக்கும். மேலும் அலை, அலையாக வெளிநாடு சென்ற தமிழர்களின் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் விதமாகவும் அங்கு சிலைகள் வடிவமைக்கப்படுகின்றன. அதனால் எந்த பணியும் நிறுத்தி வைக்கப்படவில்லை

கேள்வி:- மதுரை கீழடியில் அகழாராய்ச்சிப்பணி எந்த கட்டத்தில் உள்ளது?

பதில்:- தற்போது 4-வது கட்டமாக அங்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடியும், 2 ஏக்கர் நிலமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை மேம்படுத்த மத்திய அரசிடம் ரூ.2 கோடி நிதியும் கேட்கப்பட்டுள்ளது.

மேலும் அழகன்குளம், ஆதிச்சநல்லூர், கொர்க்கை உள்ளிட்ட இடங்களையும் சேர்த்து 4 மாவட்டங்களில் அகழாராய்ச்சிகளை மேம்படுத்தவும் அங்கு அருங்காட்சியகங்கள் அமைக்கவும் மத்திய அரசிடம் மொத்தம் ரூ.8 கோடி நிதி கேட்கப்பட்டுள்ளது.

கேள்வி:- ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு நிதி பெறப்படும் பணி நிறைவடைந்து விட்டதா?

பதில்:- ஒரு வாரத்தில் இந்த பணி நிறைவடையும். இதற்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்கான ரூ.40 கோடி விரைவில் எட்டப்படும்.

கேள்வி:- முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படத்தை சட்டசபையில் வைக்க எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனரே?

பதில்:- சட்டமன்றத்திற்கும், இந்த மண்ணிற்கும் பெருமை சேர்க்கும் விதமாக ஜெயலலிதா உருவப்படம் சட்டசபையில் வைக்கப்பட்டு இருக்கிறது. சட்டசபையில் ஜெயலலிதா படம் இருப்பது எங்களுக்கு மிகப்பெரிய சக்தி ஊற்றெடுத்தது போல் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.