மண்டல கலைப் பண்பாட்டு மைய சேவைகள்!

தமிழகத்தின் மரபு மிக்க கலைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே கொண்டுச் செல்லும் பொருட்டும், கலைப் பணிகளை ஒருங்கிணைத்து மாவட்டங்களில் செயல்படுத்தவும், காஞ்சிபுரம், தஞ்சாவூர், சேலம், மதுரை, நெல்லை, திருச்சி, கோவை ஆகிய 7 இடங்களில் மண்டல கலைப் பண்பாட்டு மையங்களை, தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது. இவை வாயிலாக மாவட்டங்களில் கலை விழாக்கள் நடத்துதல், மாவட்ட அளவில் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்குதல், செவ்வியல் கலைகள் மற்றும் நாட்டுபுறக் கலைகளின் கலைஞர்களை ஊக்குவித்தல், கலைப் போட்டிகள் நடத்துதல், கலைப் பயிற்சி அளித்தல், சிற்ப, ஓவிய கண்காட்சிகள் நடத்துதல் ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும், மாவட்ட கலை மன்றங்கள், மாவட்ட அரசு இசைப் பள்ளிகள், ஜவஹர் சிறுவர் மன்றங்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து பல்வேறு கலை மற்றும் கலாச்சார திட்டங்களை செயல்படுத்துகின்றனர். மேலும் தனித்தும், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், தென்னகப் பண்பாட்டு மையம் (தஞ்சை), சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்தும், அந்தந்த மாவட்ட சிறப்புக்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் வைகுண்ட ஏகாதசி விழா, கார்த்திகை தீப விழா, பாவை விழா, சாரல் விழா போன்ற விழாக்கள் மாங்கனித் திருவிழா, மத நல்லிணக்க விழா போன்ற கலை விழாக்களில் கலை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.
கோவையை தலைமையகமாக கொண்டு கோவை, திருப்பூர், ஈரோட, நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய ‘புதிய மண்டல கலைப் பண்பாட்டு மையம்’’ 23.3.17ல் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டங்களில் உள்ள கலைஞர்களை அடையாளம் கண்டு உதவவும், தொன்மையான தமிழ்க்கலைகளைப் பேணி பாதுகாத்து மேம்படுத்தவும் திறமையான கலைஞர்களை கண்டறிந்து கலை விருதுகள் (மாவட்ட) வழங்கவும் மாவட்ட கலெக்டர் தலைமையில் ‘மாவட்ட கலை மன்றங்கள்’ செயல்படுகின்றன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் திறன் படைத்த 5 கலைஞர்களுக்கு வயதுக்கும்/கலைத் திறமைக்கும் ஏற்றபடி கலை விருதுகள் வழங்கப்படுகின்றன. கலை இளமணி, கலை வளர்மணி, கலைச்சுடர் மணி, கலை நன்மணி, கலை முது மணி என 5 விருதுகளுக்கு ரூ.4,000, 6,000, 10,000, 15,000, 20,000 என ஆண்டுக்கு ரூ.55,000 வழங்கப்படுகிறது. கலைஞர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு, அரசு நிதி பெறுதல், அரசின் கலை நிகழ்ச்சிகளில் முன்னுரிமை பெறுதல், பயணச் சலுகை பெறுதல், ஆகியவற்றுக்கு பயன்படுகின்றன.
நாட்டுப்புறக் கலைஞர்களின் சமூகப் பாதுகாப்புக்காகவும், நலத்திட்ட உதவிகள் வழங்கவும், அரசால் அடையாளம் காணப்பட்ட 100 பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளின் கலை வடிவங்கள் அழியாமல் பாதுகாக்கவும், இளைய தலைமுறையினருக்கு நாட்டுப்புற கலைகளில் பயிற்சிகள் அளிக்கவும், ‘தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியம்’ தோற்றுவிக்கப்பட்டுள்ளது. 31.03.17 வரை 33030 உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். 7487 கலைஞர்களுக்கு ரூ.1.30 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
இசைக் கல்வி பயிலகங்கள், தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகம், இசை மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப், மாலை நேர இசைக் கல்லூரி மையங்கள், திருச்சியில் கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரி, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், நலிந்த கலைஞர்களுக்கு நிதியுதவி, மாநிங்களுக்கு இடையே கலைக் குழுக்கள் பரிமாற்றம், கலை குறித்த அரிய நூல்களை வெளியிடுதல், கிராமிய கலை, இசை, நாடக கலை இளைஞர்களுக்கு பயிற்சி என ஏராளமான பணிகளை கலை மற்றும் பண்பாட்டுத் துறை செய்து வருகிறது.
முழு விவரம் பெற:–
www.tn.gov.in/ta/documents/dept.32;
www.artandculture.tn.gov.in
www.iccr.nic.in
www.tnmfau.ac.in
www.tn.gov.in/tneinm,
www.tamilvalarchithurai.com
www.artandculture.tn.gov.in/art/culture7html.