பள்ளிகளில் தெலுங்கு பாடத்தை கட்டாயமாக்கும் அவசர சட்டம்

ஐதராபாத்,பிப்.13–

பள்ளிகளில் தெலுங்கு பாடத்தை கட்டாயமாக்கும் அவசர சட்டத்தை தெலுங்கானா அரசு விரைவில் கொண்டு வர உள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் பள்ளி மாணவர்கள் கட்டாயம் தெலுங்கு கற்க வேண்டும் என்றும், இதற்காக 1 முதல் 12ம் வகுப்பு வரை தெலுங்கு பாடம் கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்றும் முதல்வர் சந்திரசேகர ராவ் சமீபத்தில் அறிவித்திருந்தார். உலக தெலுங்கு மாநாட்டிலும் இதே கருத்து வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து, தெலுங்கு பாடத்தை பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து ஆய்வு செய்வதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழு, தனது பரிந்துரையை அளித்துள்ளது. அதில் மாணவர்களுக்கு மூன்று நிலைகளில் தெலுங்கு பாடத்தை கற்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. அதன்படி பாடத்திட்டத்தில் தெலுங்கு சேர்க்கப்பட உள்ளது.

இந்நிலையில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளில் தெலுங்கு பாடத்தை கட்டாயமாக்குவது தொடர்பான அவசர சட்டம் இயற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த கல்வியாண்டு முதலே (2018-–19) சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.இ. மற்றும் ஐ.பி. உள்ளிட்ட அனைத்து கல்வி வாரியங்களுக்கும் உட்பட்ட பள்ளிகளில் தெலுங்கு பாடத்தை கட்டாயமாக்க இந்த அவசர சட்டம் வகை செய்யும் என கூறப்படுகிறது.

இதற்கிடையே தெலுங்கு கட்டாயம் தொடர்பாக அரசு உத்தரவு மட்டுமே போதுமானது என்றும், அவசர சட்டம் இயற்ற தேவையில்லை என்றும் முதல்வரிடம் சட்டத்துறை கூறியிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.