நாட்டிலேயே பணக்கார முதல்வர் சந்திரபாபு நாயுடு

திரிபுரா முதல்வருக்கு கடைசி இடம்

புதுடெல்லி, பிப்.13–

நாட்டிலேயே பணக்கார முதல்வர்கள் யார் என்று ஜனநாயக மறுசீரமைப்பு அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வு முடிவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முதல் இடத்திலும் திரிபுரா முதல்வர் மாணிக் சர்கார் கடைசி இடத்தில் உள்ளனர். ஜனநாயக மறுசீரமைப்பு அமைப்பு நாடு முழுவதும் உள்ள 31 மாநில முதல்வர்களின் குற்றப்பின்னணி மற்றும் சொத்து விவரங்கள் குறித்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

இதன்படி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ரூ. 134.8 கோடி அசையும் சொத்துகளையும், ரூ.42.68 கோடி அசையா சொத்துகளையும் வைத்துள்ளதாக கூறியுள்ளது. மொத்தமாக சந்திரபாபு நாயுடுவுக்கு ரூ. 177 கோடி சொத்து உள்ளதாம். சந்திரபாபு நாயுடுவுக்கு அடுத்தபடியாக அருணாச்சல பிரதேச முதல்வர் பீமா கண்டுக்கு ரூ. 129.57 கோடி சொத்துகளும், பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங்கிற்கு ரூ. 48.31 கோடி சொத்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ரூ. 15.15 கோடி சொத்துடன் நான்காவது இடத்தில் உள்ளார். மேகாலயா முதல்வர் முகுல் சங்மாவிற்கு ரூ. 14.50 கோடி சொத்துகள் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 18 மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கும் நிலையில் டாப் 10 பணக்கார முதல்வர்கள் பட்டியலில் ஒருவரும் இடம்பெறவில்லை. டாப் 10ல் உள்ள கோடீஸ்வர முதல்வர்களில் 6 பேர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் எஞ்சியவர்கள் தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, பிஜேடி, எஸ்டிஎப் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.

மொத்தமுள்ள 31 முதல்வர்களில் 25 பேர் கோடீஸ்வரர்கள். இவர்களிடம் சுமார் ரூ. 1 கோடிக்கும் மேலான சொத்துகள் இருக்கின்றன. இந்தப் பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பர் திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார். இவருக்கு ரூ. 26 லட்சம் மதிப்பிலான சொத்துகளே உள்ளன என ஆய்வு முடிவு சொல்கிறது. இதே போன்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியிடம் ரூ. 30.45 லட்சம் மதிப்பிலான சொத்துகளும் உள்ளன.

கோடீஸ்வரர்கள் அல்லாத முதல்வர்களில் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ரூ. 95.98 லட்சம் மதிப்பிலான சொத்துகளுடம் 6வது கோடீஸ்வரர் அல்லாத முதல்வராக திகழ்கிறார்.