சட்டசபையில் ஜெயலலிதா படம் திறப்பதை எதிர்ப்பதா?

சென்னை, பிப்.13–
தமிழக சட்டசபையில் ஜெயலலிதா படம் திறக்கப்பட்டுள்ளதை எதிர்ப்பதா என்று அண்ணா தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளரும், பார்லிமெண்ட் துணை சபாநாயகருமான தம்பிதுரை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அண்ணா தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளரும், மக்களவை துணை சபாநாயகருமான டாக்டர் மு. தம்பிதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழ் நாடு சட்டசபையில் அம்மாவின் திருஉருவப் படம் இன்று திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. கடந்த அரை நூற்றாண்டு காலமாக தனது உழைப்பாலும், திறமையாலும், உயர்ந்த சிந்தனையாலும், ஒப்பற்ற பல செயல்களாலும் நாடு முழுவதும் அறிமுகமாகி இருக்கும் தன்னிகரில்லாத தலைவர் அம்மா என்றால் அது மிகையல்ல. அப்படிப்பட்ட ஒரு மகத்தான மக்கள் தலைவரின் திருஉருவப் படம் திறந்து வைக்கப்பட்டிருப்பது தமிழக சட்டசபை வரலாற்றில் ஒரு மைல்கல் என்றால் அது மிகையாகாது.
தன்னந் தனியாய் அரசியல் களத்தில் போராடி சரித்திரத்தில் இடம்பெறும் வெற்றிகள் பலவற்றைப் பெற்ற அம்மாவின் சாதனைகளையும், போராட்ட வாழ்வினையும் ஏற்க இதயம் இல்லாதவர்கள், தாம் தம்முன் புதைந்து கிடக்கும் ஆண் ஆதிக்க உணர்வுகள் வழியாக இந்த வரலாற்று நிகழ்வினைப் பார்க்கிறார்கள். ஒரு பெண்ணின் வெற்றியை அங்கீகரிக்கும் பண்பாடும், மனப் பக்குவமும் இல்லாதவர்களே அம்மாவின் படத் திறப்பை எதிர்க்கிறார்கள் என்பது என் குற்றச்சாட்டு.
பெரியாரின் அயரா உழைப்பு தமிழக பெண்களின் விடுதலைக்கென அர்ப்பணிக்கப்பட்ட உழைப்பு. பெண் விடுதலை தான் ஒரு சமூகத்தின் உண்மையான மேம்பாட்டுக்கு அடித்தளமாக அமையும் என்பதில் பெரியார் உறுதியான சமூக நீதி கொள்கை உடையவராகத் திகழ்ந்தார். தமிழ் நாட்டுப் பெண்கள் மட்டும் அல்லாது இந்த நாடு முழுவதும் உள்ள பெண்கள் அம்மாவை தங்களுக்கான முன்னோடியாகக் கொண்டாடி, பெண் எழுச்சியின் சின்னமாக அவரைப் பார்க்கிறார்கள். பெரியாரின் கொள்கைகளைப் பின்பற்றுவதாக சொல்லிக் கொள்வோருக்குக் கூட பெரியாரின் பாதையும், பயணமும் புரியாமல் போனதே! என்று வருந்தும் வண்ணம் பெரியாரின் தொண்டர்கள் எனக் கூறிக் கொள்வோரும் அம்மாவின் திருஉருவப் படத் திறப்பை விமர்சிப்பது விந்தையிலும் விந்தை.
எதிர்ப்பது நியாயமா?
ஈழத் தமிழர்கள் தங்கள் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு பெற்று சரிநிகர் சமானமான குடிமக்களாகவும், தங்களுக்கென உள்ள சுதந்திர வாழ்வை நிலைநாட்டிக்கொள்ளும் தேசிய இனமாகவும், வாழ அவர்களுக்கு இயன்ற அனைத்தையும் செய்ய முன் வந்தவர் அம்மா. ஈழத் தமிழர்களின் தன்னாட்சி உரிமையை நிலை நாட்ட பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், அவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல்களை போர்க் குற்றமாகக் கருதி சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் குரல் எழுப்பியதும் அம்மா தான்.
ஈழத் தமிழர்களுக்கு சட்டமன்றத்தில் துணிச்சலுடன் தீர்மானங்களை நிறைவேற்றிய புகழுக்கு உரியவர் அம்மா. அத்தனை சிறப்புக்குரிய அவரின் திருஉருவப் படத் திறப்பை எதிர்ப்பது நியாயமாகுமா?
சட்ட போராட்டம்
அண்ணாவின் உயிர் மூச்சு, கொள்கை மாநில சுயாட்சி கொள்கையே! மாநில சுயாட்சி கொள்கையை உறுதியாகப் பின்பற்றிய அம்மா தமிழக நலன் காக்க மேற்கொண்ட போராட்டங்கள் எண்ணிலடங்காதவை. இந்திய நாடு என் தாய்த் திருநாடு என்பதில் உறுதியான நிலைப்பாடும், பெற்ற தாய்க்கு நிகர் தம் தாய்நாடு என்பதிலும் அம்மா எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர்.
தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சனையான காவிரி நதிநீர்ப் பங்கீடு விவகாரத்தில் காங்கிரஸ், பாரதீய ஜனதா ஆகிய கட்சிகள் மத்தியில் ஆட்சி செய்தாலும், கர்நாடகத்தில் ஆட்சி செய்யும் போதும், தமிழகத்தை வஞ்சிக்கும் செயல்களில் ஈடுபடுவதை வன்மையாகக் கண்டித்ததோடு, தமிழகத்திற்கு நீதி கிடைக்க, உச்சநீதிமன்றம் வரை சென்று மதிநுட்பத்தோடு போராடி வெற்றிக் கண்டவர் அம்மா.
கர்நாடகத்திலிருந்து ஆண்டுக்கு 192 டி.எம்.சி தண்ணீர் தமிழகத்திற்கு காவிரியில் திறந்து விடப்பட வேண்டும் என்ற காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை, மத்திய அரசிதழில் வெளியிடச் செய்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனைக்கு உரிய அம்மாவின் படத்தை தமிழக சட்டசபையில் திறந்து வைப்பது நம் கடமை அல்லவா?
தாலிக்குத் தங்கம் முதல் அம்மா உணவகம் வரை அவர் வகுத்தளித்த திட்டங்கள் எல்லாம் எளியோர் ஏற்றம் பெறவும், ஒடுக்கப்பட்டோர் உரிமை வாழ்வு பெறவுமே!
அரசியலில் யார் மீது பழி இல்லை? யார் மீது விமர்சனமும், குற்றச் சாட்டும் இல்லை? நாடு விடுதலை பெற்ற காலம் தொடங்கி இன்று வரை முந்திரா என்றும், போபர்ஸ் என்றும் சி.பி.ஐ. மேல்முறையீட்டில் உள்ள 2ஜி ஸ்பெக்ட்ரம் என்றும் எத்தனையோ தலைப்புகளில் யார் யார் மீதெல்லாம் குற்றப்பத்திரிகை வாசிக்கப்படுகிறது. எனவே குற்றச்சாட்டுக்களை முன் நிறுத்திவிட்டு ஒருவர் செய்த சாதனைகளையும் அவர் பெற்ற மகத்தான வெற்றிகளையும் மறைக்க முயற்சிப்பதென்பது ஒருவர் மனதில் காழ்ப்புணர்ச்சியையும் ஆற்றாமையையும் காட்டுமே தவிர அவர்களுக்கு சிறப்பு சேர்க்கும் செயலாக அமையாது.
இந்தப் படம் அங்கே நிரந்தரமல்ல என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியிருக்கிறார். எது தான் நிரந்தரம்? யார் தான் நிரந்தரம்? தி.மு.க.வின் நிலையே நிரந்தரமற்றதாக இருக்கிறது. எந்த பெண்மணியை 30 ஆண்டுகளுக்கு முன் துகிலுரிய முற்பட்டார்களோ அந்த பெண்மணி சரித்திர நாயகியாக அங்கே படமாக நிற்பதை பார்க்க முடியாமல் மனம் புழுங்கி போய் தி.மு.க.வினர் பேசுகின்றனர்.
தி.மு.க. தலைவர் மீதும், அவர் அமைச்சரவை தோழர்கள் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளையும், பதியப்பட்ட வழக்குகளையும் மீண்டும் பட்டியிலிட நான் விரும்பவில்லை. எம்.ஜி.ஆர். பெருந்தன்மையால் தப்பிப் பிழைத்தது தான் தி.மு.க. முன்னணியினரின் அரசியல் வாழ்க்கை.
தேர்தல் கூட்டணி தேவைப்பட்ட போதெல்லாம் தேடி வந்து, சமூக நீதி காத்த வீராங்கனை என்று புகழ் மாலை சூட்டி அரசியல் அங்கீகாரம் பெற்ற பா.ம.க. தலைவர் போன்றோரும், ஜி.கே.மணி போன்றோரும் எதிர்ப்பு என்பதெல்லாம் ஏமாற்றத்தின் வெளிப்பாடே தவிர எழுச்சிமிகு சிந்தனையால் அல்ல. அம்மா மீது போடப்பட்ட பொய் வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நிரபராதி என்று விடுதலை பெற்றதை தன் தலைவர் ஒப்புதலுடன் கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யாவை ஜி.கே.மணி சந்தித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முறையிட்டார்.
நன்றி மறப்பதா?
பா.ம.க. தலைவர், அம்மாவை அன்புச் சகோதரி”, அன்புச் சகோதரி”, என்று அழைத்துத் தானே தன் அரசியல் அங்கீகாரம், மத்திய அமைச்சரவையில் பங்கு எல்லாம் பெற்றுக் கொண்டார். நன்றி மறக்கலாமா?
அம்மாவினால் பலனை அடைந்த தினகரன் போன்ற மற்றவர்கள் அம்மாவின் திருஉருவப் படதிறப்பு நிகழ்ச்சியை புறக்கணித்தது என் போன்றோருக்கு மனம் வருத்தம் அளிக்கிறது.
பிரதமர் வேட்பாளராக கோவாவில் நடைபெற்ற பா.ஜ.க. மாநாட்டில் நரேந்திர மோடியின் பெயர் அறிவிக்கப்பட்டவுடன் அதனை மனதார வரவேற்று, மோடி என் நண்பர், அவர் வெற்றி பெறுவது மகிழ்ச்சியே என்று வாழ்த்திய பேருள்ளம் அம்மாவின் பேருள்ளம். அவரது திருஉருவப் படத் திறப்புக்கு தமிழக பா.ஜ.க. தலைவர்கள் வந்திருந்து நன்றிக் கடன் ஆற்றி இருக்கலாம் என்பது என் எண்ணம்.
அன்னை இந்திராகாந்தி என் அரசியல் முன்மாதிரி என்று ஆயிரம் முறை கூறியவர் அம்மா. நேரு குடும்பத்தின் மீது நீங்காத மரியாதையும், அன்பும் கொண்டிருந்த அம்மாவின் படத் திறப்புக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பது ஏற்புடைய செயல் அல்ல.
தமிழக அரசியல் தலைவர்கள் மனங்களில் பெண் விடுதலைக்கு எதிரானதும் ஆண் ஆதிக்கத்தை விடமுடியாத மனநிலைமையும் தான் அவர்களது விமர்சனங்கள் காட்டுகின்றன. ஆனால் காலம் மாறிக் கொண்டிருக்கிறது, மக்கள் அனைத்தையும் அறிவார்கள்.
இவ்வாறு மு.தம்பிதுரை கூறியுள்ளார்.