கடலூரில் 5 பேருக்கு நவீன செயற்கைகால்கள்

கடலூர், பிப்.13–
கடலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 5 நபர்களுக்கு நவீன செயற்கைகால்களை கலெக்டர் பிரசாந்த் வடநேரே வழங்கினார்.
பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் நேரில் அளித்தனர்.
இந்தக் கூட்டத்தில் மொத்தம் 433 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த இம்மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்கு உட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டும் மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு தெளிவான பதிலை அளிக்கவேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 25 நபர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சம் மதிப்பிலான பார்வையற்றோருக்கான சென்சார் மடக்கு குச்சிகளையும், 5 நபர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் நவீன செயற்கைகால்களையும் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே வழங்கினார்.
இக்குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, சார் ஆட்சியர் (பயிற்சி) எம்.பி. சிவன்அருள், துணை ஆட்சியர்கள் (பயிற்சி) எஸ்.கணேஷ், வி.பி.ஜெகதீஸ்வரன், மாவட்ட வழங்கல் அலுவலர் தினேஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் இராமு, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ரதி (எ) லட்சுமி ஆகியோர் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.