கடன் வழங்கி கத்தார் நாட்டுக்கு ஏற்றுமதிக்கும் உதவிட சென்னை அண்ணா சாலையில் தோஹா வங்கி புதிய கிளை

சென்னை, பி.12–
கத்தார் நாட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தோஹா வங்கி இந்தியாவில் மும்பை மற்றும் கொச்சியில் 3 கிளைகளை கொண்டுள்ளது. சென்னையில் அண்ணா சாலையில் எல்.ஐ.சி. அருகே இதன் கிளையை இந்த வங்கி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி டாக்டர். ஆர்.சீத்தாராமன் திறந்து வைத்தார்.
ஆர்.சீத்தாராமன் தோஹா வங்கி பற்றி பேசுகையில், கடந்த ஆண்டில் அதன் கடன் வளர்ச்சி 8 சதவீதமாக உயர்ந்துள்ளதென்றும் வைப்பு தொகை (டெபாசிட்) 13 சதவீதம் வளர்ச்சி அடைந்து உள்ளது என்றும் கூறினார்.
மேலும் கத்தார் வங்கியானது அரசு, ரியல் எஸ்டேட் மற்றும் சமூக சேவை துறைகளில் வளர்ச்சிக்கு நிதி வழங்குகிறது. கத்தார் நாட்டில் உணவு உற்பத்தி நிறுவனங்களின் வளர்ச்சியில் பல உள்ளூர் நிறுவனங்கள் துணை நிற்பதையும் சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை கத்தார் வரவேற்கிறது என்று கூறினார்.
எளிய முறை விசா
இதுமட்டுமின்றி 80 நாடுகளுக்கு விசா நடைமுறையில் உள்ள சிக்கல்களை நீக்கியதையும் 2018–ம் ஆண்டு கத்தார் அரசு பட்ஜெட்டில் சுகாதாரம் மற்றும் கல்வி மற்றும் போக்குவரத்துக்கு 83.5 பில்லியன் கத்தார் ரியால் ஒதுக்கீடு செய்யப்பட்டதையும் அவர் தெரிவித்தார்
இது மொத்த செலவினத்தில் 41 சதவீதம் ஆகுமென்றும் அதேபோல் போக்குவரத்து மற்றும் கட்டுமானத்திற்கு பட்ஜெட்டில் 42 பில்லியன் கத்தார் ரியால் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்றும், இது நாட்டின் மொத்த செலவினத்தில் 21 சதவீதம் ஆகும் என்றும் கூறிய டாக்டர். ஆர். சீத்தாராமன் கத்தார், இந்தியா இடையேயான இரு தரப்பு உறவுகள் மற்றும் கத்தார், குவைத் ஆகிய நாடுகளுக்கு உறவுகள் குறித்தும் பேசினார். அதில் சமீபத்திய ஆண்டுகளில் இந்தியா- வளைகுடா நாடுகள் இடையே வர்த்தகம் 100 பில்லியன் அமெரிக்க டாலர் வர்த்தகத்தை தொட்டுள்ளது என்றார்.
மேலும் கடந்த 2016–17ம் ஆண்டுகளில் இந்தியா கத்தார் இடையே மட்டும் 8 பில்லியன் டாலர் வர்த்தகம் நடந்துள்ளதையும் இந்தியாவிற்கு கத்தார் நாட்டில் இருந்து பெட்ரோகெமிக்கல்ஸ், கந்தகம் (சல்பர்), உரங்கள் மற்றும் இரும்பு தாது ஆகியன முதன்மையாக ஏற்றுமதி செய்யப்பட்டதையும், இதேபோல் கத்தார் நாடு இந்தியாவில் இருந்து ஆபரணங்கள், கைவினை பொருட்கள், பருத்தி, போக்குவரத்து உபகரணங்கள் மற்றும் விசி யந்திர உதிரி பாகங்களை இறக்குமதி செய்ததையும் கூறினார். மேலும் தமிழ்நாடு தொழில் துறையில் இந்தியாவின் 3வது மாநிலமாகவும் கனரக உற்பத்தியில் உலகின் 10வது இடத்தில் இருப்பதையும் தெரிவித்தார்.
இதே நேரத்தில் குவைத், கத்தார் இடையே 100 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான வர்த்தகம் நடந்ததையும் இந்திய கத்தார் அளவில் 8 பில்லியன் மேல் நடந்துள்ளதையும் குறிப்பிட்ட டாக்டர் ஆர்.சீத்தாராமன் அந்த வகையில் சென்னையில் துவங்கப்பட்டுள்ள இந்த தோஹா வங்கியின் கிளை இந்திய கத்தார் இடையேயான வர்த்தகத்தை மேலும் அதிகரிக்க துணை நிற்கும் என்றார்.
மேலும் தமிழ்நாடு பல வித தொழில் வளர்ச்சிக்கு ஏற்ற மாநிலமாக இருப்பதால் தோஹா வங்கி இங்குள்ள சிறு, குறு மற்றும் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்குவதோடு அவற்றின் ஏற்றுமதி வர்த்தகத்திற்கும் உறுதுணையாக இருப்பதோடு வளைகுடா நாடுகளில் தொழில் துவங்க வழி வகை செய்யுமென்றும் புதிதாக தொழில் முனைவோர் மற்றும் சிறு வணிகர்களின் தொழில் வளர்ச்சிக்கும் பாலமாக செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.