அமர்நாத் பனி லிங்கம் உள்ளிட்ட 12 ஜோதிர் லிங்கம் கண்காட்சி:

சென்னை, பிப். 13–
பிரம்மகுமாரிகள் இயக்கம் தனது 82-வது ஆண்டை கொண்டாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிவராத்திரியை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமர்நாத் பனி லிங்கம் மற்றும் 12 ஜோதிர்லிங்கங்களை பொதுமக்கள் தரிசிக்க ஏற்பாடு செய்துள்ளது.
தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அரங்குக்கு வந்து லிங்கங்களை தரிசிக்கின்றனர். பொதுமக்கள் தியானம் செய்ய இங்கு தியான அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ராஜயோக ஞானம் குறித்த புகைப்படக் காட்சிகள், வீடியோ காட்சிகளும் திரையிடப்பட்டு வருகின்றன. அவற்றை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.
மேலும் பிரம்மகுமாரிகள் இயக்கம் மேற்கொண்டு வந்த பணிகள் குறித்த விளக்கங்களும் அங்கு அளிக்கப்பட்டு வருகின்றன. மாலையில் மகளிருக்கான விளக்கு தியானம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நாளை (14ந் தேதி) வரை இக்கண்காட்சி நடக்கிறது.
சிவன் பிறந்த தினத்தை சிவராத்திரி விழாவாக கொண்டாடி வருகிறார்கள். அவ்விழாவை முன்னிட்டு அமர்நாத் பனி லிங்கம் மற்றும் 12 ஜோதிர்லிங்கங்களை காட்சிக்கு வைத்துள்ளனர்.
மனிதன் தன்னை மறந்ததால், பல்வேறு துன்பங்களில் சிக்கி, அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறான். அவன், அழிவற்ற ஆன்மாவாகக் கருதப்படும் ஞானத்தைப் பெறவைப்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.
இந்த விழாவில் ஒவ்வொரு நாளும் காலை 10 மணி மற்றும் மாலை 4 மணிக்கு திருநங்கைகள், மாணவர்கள், கலைத்துறையினர், வியாபாரிகள், முதியோர் உள்ளிட்டோருக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை லிங்கங்களைத் தரிசிக்கலாம். 12 ஜோதிர்லிங்கங்களும் ராமேஸ்வரம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அமைந்துள்ளன. அவற்றைப் பார்வையிட வேண்டுமென்றால் பெரும் செலவு ஏற்படும். அனைத்து லிங்கங்களையும் ஒரே இடத்தில் பார்க்க முடிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று பார்த்து மகிழ்ந்த பொதுமக்கள் கூறினார்கள்.