பேச்சில் கவனம் தேவை

காலை நேரம் அண்ணே… அண்ணே… என்ற கதவை தட்டும் சத்தம் கேட்டது.
வனிதா வேகமாக சென்று கதவை திறந்தாள்.
வாசலில் வயதான பெண் நின்று கொண்டிருந்தார்.
அந்த பெண் வனிதாவை பார்த்து அண்ணே இருக்காரா… என்று கேட்டார்.
யாரை கேட்கிறீங்க என்று திருப்பி கேட்டார் வனிதா…
சண்முகம் அண்ணே இருக்காரா என்று அந்த பெண் கூறினார்.
இந்தா கூப்பிடுகிறேன் என்று கூறிய வனிதா, வேகமாக வீட்டுக்குள் சென்று தனது மாமனார் சண்முகத்தை மாமா… மாமா. உங்களை தேடி யாரோ வந்திருக்காங்க என்று கூறினார்.
மாடியிலிருந்த சண்முகம் யாரும்மா என்றபடி கீழே இறங்கி வந்தார்.
நேராக வாசலுக்கு சென்ற சண்முகம், வாசலில் நின்று கொண்டிருந்த பெண்ணை பார்த்ததும்
நீ எதுக்கு இங்க வந்தா… மரியாதையா போயிடு…. இல்ல மரியாதை கெட்டுடும்…
என் கண்ணு முன்னாடி நிக்காத, போயிடு என்று கோபத்துடன் பயங்கரமாக திட்டினார் சண்முகம்.
உடனே அந்த பெண் அண்ணே நான் சொல்றத கேளுங்க… நான் செய்தது தவறு தான் என்று பேசினார்.
ஆனால் அவற்றை காதில் வாங்காத சண்முகம்
வனிதா… வனிதா என்று கோபமாக தனது மருமகளை கூப்பிட்டார்.
தனது மாமானாரின் கோபக் குரலை கேட்டதும் ஓடி வந்தார் வனிதா.
என்ன மாமா, என்ன என்று கேட்டார்.
இவளை முதலில் வீட்டை விட்டு போக சொல்லு… உடனே வெளிய அனுப்பு என்று சத்தம் போட்டார்.
மாமானாரின் சத்தத்தால் நிலை குலைந்த வணிதா வாசலில் நின்று கொண்டிருந்த அந்த பெண்ணிடம் என்னங்க அவர் தான் சொல்றாரே தயவு செய்து போங்க என்று கூறினார்.
தான் சொல்லவந்ததை கூறுவதற்கு அந்த பெண் எவ்வளவோ முயற்சி செய்தார்
ஆனால் முடியவில்லை. வேறு வழியின்றி அந்த பெண்ணும் அங்கிருந்த கிளம்பி விட்டார்.
உடனே வனிதா… மாமா அவங்க யாரு, எதுக்கு அவங்களை வீட்டை விட்டு விரட்டுறேங்க என்று கேட்டார்.
அது வேண்டாதவங்க, அதை விடு அத்தை எங்க போயிருக்கா என்று சண்முகம் கேட்டார்.
பக்கத்தில் கடைக்கு போயிருக்காங்க என்று கூறினார் வனிதா.
அப்போது சண்முகத்தின் மனைவி தனம் வீட்டுக்குள் வந்தார்.
அத்தை யாரோ ஒரு வயசான பெண் வந்தாங்க… மாமா ரொம்ப கோபப்பட்டார். என்னன்னு தெரியலை என்று கூறினார்.
உடனே தனம், யாருங்க வந்தது. எதுக்கு கோபப்பட்டேங்க என்று சண்முகத்திடம் கேட்டார்.
யார் முகத்தில் முழிக்கக் கூடாதுன்னு நினைச்சேனோ அவள் தான் வந்தாள்.
யாருங்க நம்ம லட்சுமியா என்று தனம் கேட்டாள்.
ஆமாம் அவளே தான் என்று சண்முகம் பதில் கூறினார்.
ஏங்க…. என்ன தான் கோபம் இருந்தாலும், வீட்டுக்கு வந்தவளை விரட்டலாமா என்று தனம் கேட்டாள்.
யாராவது அவளுக்கு சப்போட்டா பேசினா அப்படியே அவங்களும் வீட்டை விட்டு போக வேண்யடிது தான் என்று கோபமாக பேசிய சண்முகம் வேகமாக மாடிக்கு சென்றார்.
மாமனாரும் மாமியரும் பேசிக் கொண்டது எதுவும் புரியாமல் வணிதா நின்று கொண்டிருந்தாள்.
மாமனார் மாடிக்கு சென்றதும் வணிதா தனது மாமியாரிடம், வந்தவங்க யாரு அத்தை என்று கேட்டார்.
அவங்க தான் மாமாவோட தங்கை. என் நாத்தனார் லட்சுமி என்று கூறினார்.
நீங்க சொல்வேங்களே நம்ம மாமா செல்லம்மா வளர்த்த ஒரே தங்கச்சி, இப்ப பேச்சுவார்த்தை கிடையாதுன்னு சொல்லுவேங்களே அவங்க தானா.
அவங்க பார்க்க மாமா மாதிரியே இருந்தாங்க, நானும் நினைச்சேன் அவங்களாத்தான் இருக்கனும்னு.
நமக்கும் அவங்களுக்கும் என்ன தான் பிரச்சனை அத்தை என்று வனிதா கேட்டாள்…
அப்போது சண்முகம் மாடியிலிருந்து அங்க என்ன சத்தம்… போய் வேலையைப் பாருங்க.
வெட்டிக் கதை பேசாதீங்க என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து வனிதாவும் தனமும் வீட்டு வேலையை பார்க்கத் தொடங்கினர்.
சண்முகத்தின் தந்தை மாரியப்பன், தாய் மீனம்மாள்.
அவர்களுக்கு 3 மகன்கள்; ஒரு மகள். இதில் மூத்தவர் சண்முகம், 2வது மகன் பெரியசாமி, மூன்றாவது மகன் ஐயப்பன். கடைசியாக ஒரே மகள் லட்சுமி.
லட்சுமி 3 வயது இருக்கும் போது சண்முகத்தின் தந்தை மாரியப்பன் திடீரென உடல்நலக் குறைவால் இறந்து விட்டார்.
இதனால் தாய் மீனம்மாள் பிள்ளைகளை எப்படி வளர்ப்பது என்பது தெரியாமல் மிகவும் கஷ்டப்பட்டார்.
அவர்கள் குடியிருக்கும் வீடு மற்றும் கொஞ்சம் நிலம் மட்டுமே அவர்களுக்கு சொந்தமாக இருந்தது. கையில் பணம் ஏதும் கிடையாது.
அந்த நேரத்தில் 12 வயதான சண்முகத்தின் மீது குடும்ப பொறுப்பு வந்தது.
சண்முகம் படிப்பை நிறுத்தி விட்டு வேலைக்கு சென்றார்.
ஆரம்பத்தில் ஓட்டல் ஒன்றில் வேலைக்கு சென்ற அவர் அதன் பின் காய்கறிக் கடைக்கு வேலைக்கு சென்றார்.
சண்முகத்தின் வருமானம் தான் குடும்பத்தை காப்பாற்றியது.
அதன் பின் சண்முகம் படிப்படியாக காய்கறிகடை தொழிலை கற்றுக் கொண்டு பின் தன் சுய உழைப்பால் சொந்தமாக காய்கறிக் கடை தொடங்கினார்.
அவர்கள் குடும்பத்தின் வறுமை நீங்கியது. சண்முகத்தின் சுய உழைப்பால் அவரது குடும்பம் உயர்ந்த நிலைக்கு வந்தது.
தன்னுடைய வருமானத்தை கொண்டு தனது இரண்டு தம்பிகளையும் தங்கை லட்சுமியையும் படிக்க வைத்தார்.
சண்முகத்திற்கு தங்கை என்றால் உயிர். சிறு வயதிலேயே லட்சுமி தந்தையை இழந்ததால், சண்முகமே அவருக்கு அண்ணனுக்கு அண்ணனாகவும் தந்தைக்கு தந்தையாகவும் இருந்து பார்த்துக் கொண்டார்.
முதலில் தங்கைக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நினைத்தார். இதனால் நீண்ட காலம் சண்முகம் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருந்தார்.
லட்சுமி பி.ஏ. பட்டப்படிப்பு முடித்த பின்னர் அவருக்கு நல்ல இடத்தில் மாப்பிள்ளை பார்த்து நகை, வரதட்சணை கொடுத்து ஆடம்பரமாக திருமணம் நடத்தி வைத்தார் சண்முகம்.
அதன் பின் சண்முகம், தனம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
லட்சுமிக்கு ஒரு மகள் பிறந்தாள்.
அதன் பின் சண்முகத்தின் இரண்டு தம்பிகளும் பட்டப்படிப்பை முடித்து நல்ல இடத்தில் வேலைக்கு சேர்ந்தனர்.
சண்முகம் அவர்களுக்கும் நல்ல இடத்தில் தானே முன்னின்று திருமணத்தை நடத்தி வைத்தார்.
சண்முகத்திற்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு மதன் என்று பெயர் வைத்தனர்.
இப்படி நல்லபடியாக போய் கொண்டிருந்த சண்முகத்தின் குடும்பத்தில் மீண்டும் புயல் வீசியது.
சண்முகத்தின் தாயார் மீனம்மாள் உடல்நல குறைவால் திடீரென இறந்து விட்டார்.
அதன் பின் குடும்பத்திலும் சூழ்நிலை மாறியது.
அதுவரை கூட்டு குடும்பமாக இருந்த அவர்கள் தனிக்குடித்தனம் சென்றனர்.
அதன்பின் சண்முகம் தங்களுடைய குடும்ப சொத்தை தனது தம்பி தங்கைகளுக்கு பிரித்து கொடுக்க முன் வந்தார்.
தான் இருக்கும் பூர்வீக வீட்டை தான் எடுத்துக் கொண்டு மற்ற நிலத்தை தனது தம்பிகளுக்கு கொடுத்து, அவர்கள் கொஞ்சம் பணமும் கொடுத்தார்.
அவர்கள் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டனர். ஏனென்றால் தந்தை இறந்தவுடன் தங்களை வளர்த்து ஆளாக்கியது அண்ணன் சண்முகம் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர்.
அதே போல் தான் உயிருக்கு உயிராக வளர்த்த தங்கை லட்சுமிக்கு ஒரு குறிப்பிட்ட தொகை கொடுக்க சண்முகம் முன் வந்தார்.
அதற்காக தனது தங்கையை வீட்டிற்கு அழைத்தார்.
அண்ணனை அழைப்புக்கிணங்க அங்கு வந்த லட்சுமி, சண்முகம் கொடுத்த பணத்தை வாங்கி பார்த்தார்.
அவர் கொடுத்த பணம் குறைவாக இருப்பதாக உணர்ந்தார்.
உடனே அந்த பணத்தை அண்ணனிடம் திருப்பிக் கொடுத்த லட்சுமி.
தன்னை உயிருக்கு உயிராக வளர்த்த அண்ணன் என்று பார்க்காமல் அவரிடம் இந்த பணம் எனக்கு போதாது.
இந்தப் பணத்தை கொடுத்து இந்த வீட்டை நீங்க மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளலாம் என்று திட்டம் தீட்டுகிறீர்களா?
மற்ற அண்ணன்கள் தான் ஏமாளிகள் போல் சரி என்று சொல்லிவிட்டனர். ஆனால் நான் ஒன்றும் ஏமாளி இல்லை.
எங்களை ஏமாற்றி நீங்கள் மட்டும் நம்ம குடும்ப சொத்தை எடுத்துக்கிட நினைக்கிறீர்களே? நீங்கள் இவ்வளவு ஏமாற்றுகாரராக இருப்பீர்கள் என்று நினைக்கவில்லை என்று வாயில் வந்த வார்த்தைகளை கூறிவிட்டார்.
தனது அன்புக்குரிய தங்கை தன்னை ஏமாற்றுக்காரர் என்று கூறிவீட்டாரே? இந்த மாதிரி வார்த்தைகள் அவர் வாயில் இருந்து வரும் என்று எதிர்பாராத சண்முகத்தால் அந்த வார்த்தைகளை கேட்டு மனம் தாங்கவில்லை.
லட்சுமி கூறிய வார்த்தைகள் சண்முகத்தின் மனதில் ஆழமாக பதிந்தது.
இதனால் மன வேதனை அடைந்த சண்முகம் தன் தங்கையின் முகத்தை பார்க்க விரும்பாமல், ஒரு அறைக்குள் சென்று ஓ வென்று அழத் தொடங்கிவிட்டார்.
ஏனென்றால் லட்சுமியின் மீது சண்முகம் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்.
மனம் வேதனை தாங்காமல் தனது மனைவியை அந்த அறைக்குள் அழைத்த சண்முகம், லட்சுமியிடம் எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டு அந்த தொகையை அடுத்தவாரம் நான் கொடுத்து அனுப்புகிறேன். இனி இந்த வீட்டுக்கும் வரக்கூடாது; என் முகத்திலும் முழிக்கக்கூடாது என்று சொல்லி அனுப்பிவிடு என்று கூறினார்.
அதன்படி வெளியே வந்த தனம், லட்சுமியிடம் எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டார்.
லட்சுமியும் குறிப்பிட்ட தொகையை கூறிய பின், அடுத்த வாரம் நாங்களே கொடுத்து அனுப்புகிறோம், இனிமேல் உங்கள் அண்ணன் உங்களிடம் பேச விரும்பவில்லை, நீங்களும் இங்கு வரவேக் கூடாது என்று கூறிவிட்டார் என்று கூறினார்.
அதன் பின் லட்சுமி அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
லட்சுமி நடந்து கொண்ட விதம் அவளது மற்ற அண்ணன்களுக்கும் தெரியவந்தது.
அவர்களும் உடனே லட்சுமி வீட்டுக்கு சென்று அவளை திட்டி, அண்ணனிடம் மன்னிப்பு கேள் என்று கூறினர்.
லட்சுமி தானும் அவசரத்தில் வாய்க்கு வந்ததை பேசிவிட்டேன் என்று கூறினார்.
அதைத் தொடர்ந்து அண்ணன் சண்முகத்திடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன் என்று கூறினார்.
அதன்பின் சண்முகத்திடம் மன்னிப்பு கேட்க லட்சுமி முன் வந்தார்.
ஆனால் சண்முகம் அதை ஏற்கவில்லை. தன் முகத்தில் முழிக்க கூடாது என்று கூறிவிட்டார்.
தனது தம்பிகளிடம் இந்த விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று கூறினார்.
அதனால் அவர்கள் ஒதுங்கிக் கொண்டனர்.
சண்முகமும் தான் கூறிய படியே ஒரு வாரத்தில் லட்சுமி கேட்ட தொகையை தன் தம்பிகள் மூலம் கொடுத்து அனுப்பினார்.
அதன் பின் சண்முகம் குடும்பம் லட்சுமி குடும்பத்துடன் உறவைத் துண்டித்து விட்டனர்.
அவனது தம்பிகள் இரண்டு பேர் குடும்பம் மட்டுமே லட்சுமி குடும்பத்துடன் பேசி வந்தனர்.
காலம் கடந்தது.
சண்முகத்தின் மகன் மதனுக்கு வனிதாவுடன் திருமணம் நடந்தது. அந்த திருமணத்திற்கு கூட சண்முகம் தனது தங்கை குடும்பத்தை அழைக்கவில்லை.
இதனால் வனிதாவுக்கு தனது மாமனார் சண்முகத்தின் தங்கை லட்சுமியை தெரியாது.
இந்த நேரத்தில் தான் லட்சுமி தனது மகளுக்கு திருமணம் செய்ய நிச்சயம் செய்தார்.
திருமணத்திற்கு தனது அண்ணன் சண்முகத்தை அழைக்க விரும்பினார். அவரிடம் நடந்த விஷயத்திற்கு மன்னிப்புக்கேட்பதற்காக சண்முகம் வீட்டிற்கு வந்தார்.
அப்போது தான் இந்த பிரச்சனை உருவானது.
இந்த தகவலை தனம் தனது மருமகளிடம் விளக்கிக் கூறினார்.
மாலை நேரம் சண்முகம் வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது அவரது தம்பிகள் இரண்டு பேரும் வீட்டுக்கு வந்தனர்.
உள்ளே வாங்கப்பா என்று அவர்களை அழைத்த சண்முகம், தனது மனைவியை அழைத்தார்.
என்னப்பா… இரண்டு பேரும் சேர்ந்து வந்திருக்கீங்க. என்ன விஷயம் என்று கேட்டார்.
அண்ணே… அது வந்து… தங்கச்சி வந்தா… அவள் பொண்ணுக்கு கல்யாணம் வச்சிருக்காளாம்.
அது தான் உங்கள பாத்து மன்னிப்பு கேட்டுட்டு உங்களை திருமணத்துக்கு அழைக்கலாம்னு வந்தாளாம்.
நீங்க திருப்பி அனுப்பிட்டீங்களாம். அவள் ரொம்ப வருத்தப்பட்டாள். அவளை பெரிய மனசு பண்ணி மன்னிக்கனும் என்றனர்.
தயவு செய்து அவளை பத்தி மட்டும் பேசவேண்டாம் என்று கண்டிப்பாக கூறினார் சண்முகம்.
ஆனால் அவர்கள் கேட்கவில்லை.
தங்கச்சி ரொம்ப வருத்தப்படுறா… தயவு செய்து அவளை மன்னிக் கூடாதா அண்ணே என்று கேட்டனர்.
அவள் பேசிய பேச்சை நீங்க நேரடியா கேட்டிருந்தா உங்களுக்கு இது புரியும்.
அந்த அளவுக்கு அவள் பேசினாள்.
அவளை நான் எப்படி எல்லாம் வளர்த்தேன்னு உங்களுக்கு தெரியும்.
தந்தை இல்லாம வளர்ந்த அவளை என் தோளில் தூக்கி வளர்த்தவன் நான்… என்னை எப்படி எல்லாம் கேள்வி கேட்டா தெரியுமா?
அவள் என்னிடம் அண்ணே எனக்கு இவ்வளவு பணம் கொடுங்கள் என்று கேட்டா, நான் கண்டிப்பாக கொடுத்திருப்பேன்.
அதை விட்டுட்டு வாய்க்கு வந்த வார்த்தையாலே என்னை திட்டிவிட்டாள். என்னை ஏமாற்றுக்காரன்னு சொல்லிட்டா.
அப்பா இறந்த உடன் படிப்பை நிறுத்திட்டு வேலைக்கு போய் எவ்வளவு கஷ்டப்பட்டு உங்களை எல்லாம் வளர்த்தேன். என்னை பார்த்து ஏமாற்றுக்காரன்னு சொல்லிட்டா.
அவள் கூறிய வார்த்தை என் மனதில் வடுவாக பதிந்து விட்டது. அது சாகும் வரை என் மனதிலிருந்து அழியாது என்று சண்முகம் மன வருத்தத்துடன் கூறினார்.
அண்ணே, நீங்க சொல்றது உண்மை தான் எங்களுக்கும் தெரியும்.
இத்தனை வருஷமா அவளிடம் பேசாமல் இருந்தீங்க. அதுவே அவளுக்கு நீங்க கொடுத்த பெரிய தண்டனை. இதுக்கும் மேலே அவளை தண்டிக்க வேண்டாமே.
அவள் ஏதோ தெரியமா பேசிட்டாளாம். உங்களிடம் மன்னிப்பு கேட்க தயாராக இருக்கா. கொஞ்சம் பெரிய மனுசு பண்ணி அவளை மன்னிக்கணும் என்று மீண்டும் மீண்டும் வற்புறுத்தினர்.
நான் மன்னிக்க நினைத்தாலும் அவள் கூறிய வார்த்தைகளின் வடு என் நெஞ்சை விட்டு நீங்காது. அதனால் அதை விட்டு விடுங்கள் என்று கூறி சண்முகம் மறுத்துவிட்டார்.
அண்ணனின் மன நிலையை புரிந்து கொண்ட தம்பிகள் அமைதியாக நின்றனர்.
எல்லோரும் அமைதியாக காத்திருந்தனர்.
நீண்ட அமைதிக்குப் பிறகு சண்முகம் தங்கையை அழைத்தார்.அன்பாக அவர் தலையை தடவி விட்டார்.
தன்னை மன்னித்து விட்ட அண்ணனைக் கட்டிப்பிடித்தபடி தங்கை தேம்பித் தேம்பி அழுதார்.
அவள் அழுகை நிற்க நெடுநேரமானது.
துரை. சக்திவேல்