நடிகன்

தமிழ் நல்ல நடிகன் . அவனுக்குள் நடிப்பின் தாகம் தத்தளித்துக் கொண்டிருந்தது. அவன் உயிர் முழுவதும் நவரசம் நிரம்பி வழிந்தது. அவன் செய்கையில் செயற்கைத்தனமில்லாமல் இயற்கையாகவே நடிப்பு ஒட்டிக் கொண்டிருந்தது.
“தமிழு…… தமிழு ….. அம்மா ஆவுடையம்மாள் கத்திப் பார்த்தாள்.
தமிழ் விட்டத்தைப்பார்த்துக் கொண்டு எதையோ பேசிக்கொண்டிருந்தான்.
“ஏலேய் ….. தமிழு…. முழிச்சுக்கிட்டே என்னடா அப்படியொரு கனவு, இம்புட்டு படிப்பு படிச்சிட்டு இப்பிடியாகிட்டயே ராசா, ஒன்கூட படிச்ச பயலுகளலொம் என்னமோ மாதிரி இருக்கானுக. நீ என்னடான்னா படிச்ச படிப்புக்கு வேலைக்கு போகாம நடிப்பு, கருப்பட்டின்னு காலத்த தள்ளிட்டு இருக்க. இந்த கூத்தாடி பொழப்பு நமக்கு எதுக்குய்யா. என்னத்தையோ நாலுகாசு சம்பாரிச்சு நாலு மக்க மனுசருகள போல வாழாம எதுக்குய்யா இந்த ஈனப்பொழப்பு, அம்மா ஆவுடையம்மாாள் திட்டித் தீர்த்தாள்.
இது எதுவும் தெரியாமல் தமிழ் தன் வீரவசனங்களை அள்ளி வீசிக்கொண்டிருந்தான்.
“இந்த பய இனி தேரமாட்டான் போல’’. ஊரில் உள்ளவர்கள் உத்திரவாதம் கொடுத்தார்கள்.
“ஏலேய் தமிழு….ஓங்கிக்கத்திய போது தான் ஓரளவுக்கு நினைவுக்கு வந்தான்.
“அம்மா கூப்பிட்டயா?
“ம்க்கும் கூப்பிட்டயவா?
ஒரு பிரசங்கமே வச்சுருக்கேன். பேசாம ஒக்காந்திருக்க. நடிப்பு, சினிமா நமக்கெதுக்குய்யா. நீ தான் நல்லா படிச்சிருக்க. நல்ல வேல வெட்டிக்கு போயி சம்பாரிச்சு நாலு மக்க மனுசரப் போல வாழ நடிப்பு, கிடிப் புன்னு இது வேணாம்யா. நமக்கு எதுக்குய்யா. இந்த கூத்தாடிப் பொழப்பு, விட்டுத் தள்ளுய்யா, அம்மா கொஞ்சம் அழுகையோடு சொன்னாள்.
“இல்லம்மா இது தான் எனக்கு வேணும்னு தோணுது. இத விட்டுட்டு என்னால வரமுடியாது நான் நடிக்கவே போறேன்.
தமிழுக்குள் தகிக்கும் ஆர்வம் வார்த்தையாய் வெளி வந்தது.
“சரிமா, அது எப்ப நடக்கப் போகுது?
“நடக்கும்”,
“காலம் ரொம்ப கொடியதுடா. போனா திரும்பி வராது சீக்கிரமே தேடு. ஒன்னு நீ நெனச்சது கெடச்சா சந்தோசம். கெடைக்கலன்னா ரொம்ப சந்தோசம்னு நெனச்சுக்க.
“சரிம்மா” அன்று முதல் அவனின் தேடல் தீவிரமானது.
ஒரு நாள் தினகர் என்ற தயாரிப்பாளரைப் பார்த்தான்.
“தம்பி நீங்க தான் நடிகனா?
அவரின் வார்த்தையில் இளக்காரம் தொக்கி நின்றது.
“ஆமா சார்”
“ம், நடிச்சுக் காட்டுங்க”
தமிழ் நவரசங்களை அள்ளித் தெளித்தான். ஒன்பது சிருங்காரங்களும் அவன் முகத்தில் முகாமிட்டு திறமையை முன்னிறுத்தியது.
“குட்….. குட்….. நல்லா நடிக்கிறீங்க,
“அப்பெறம் …. வேற என்ன பேசலாம்….
“வேறென்ன சார்…. நான் நடிகன் ’’ என்றான் வெள்ளந்தியாய்.
அது சரி தம்பி, மத்த சமாச்சார மெல்லாம் எப்படி? மேலும் தினகர் குடைந்தார்.
“சார்….. நடிப்புக்காக என்னோட உயிரையே குடுப்பேன்.
“ஒன்னோட உசுருக்கு ஒரு கோடி கெடைக்குமா? போய்யா பணமிருந்தா, இங்க வா. இல்ல போய்ட்டே
இரு .என்னோட பணத்தப்போட்டு ஒன்னைய ஹீரோவாக்கி, நீ பொம்பளைங்கள கட்டிப் பிடிச்சு டூயட் பாடணும். நான் பப்பரப்பேன்னு முட்டாய சப்பி சாப்பிட்டுட்டு ஒக்காந்திருக்கணுமா?
போயி பத்துலட்ச ரூவா கொண்டு வா என மிரட்டினார் தினகர்
“என்னது, பத்து லட்சமா? ’’ஆச்சர்யத்தில் ஆடிப்போனான் தமிழ்
சார் அவ்வளவு பணத்துக்கு எங்க போவேன்?
எங்கயாவது போ. ஹீரோ ஆகனும்னா சும்மாவா? நானெல்லாம் இந்த எடத்துக்கு வர ரொம்பவே செரமப்பட்டேன் தம்பி. அவர் வார்த்ததையில் முன்னால் பட்ட கஷ்டத்தின் வடு தெரிந்தது.
தமிழ் பிரமை பிடித்தவன் போல ஆனான். அவனின் நடிப்பு அவனை உயிரோடு விழுங்கியது. வீதியில் இறங்கினான், ஓங்காரம் கொண்டு கத்தினான் சிரித்தான்.
அழுதான், புரண்டான், விழுந்தான், எழுந்தான், இப்போது முழு நடிகனானான்.
அவன் இப்போது எதையும் கண்டு அவன் பயப்படவில்லை.
அவனுள் நடிப்பு மிளிர்ந்தது. வீதியில் நவரசங்களை அரங்கேற்றிக்கொண்டிருந்தான். அவனின் இந்தச் செய்கையைப் பார்த்து சிலர் உச்சுக்கொட்டினார்கள். சிலர் உச்சி மோந்தார்கள். பாவம் பிரமை பிடிச்சிரும் போல” என பரிதாபப்பட்டு சில்லறைகளை அவன் முன்னால் தூக்கிப் போட்டார்கள்
“பாவம்ங்க நல்ல பையனா இருக்கான். இப்படி லூசு மாதிரி ஆகிப் போயிட்டானே”
வீதியில் போவோர் வருவோரெல்லாம் தமிழுக்கு ஆதரவாகவும் கரிசனையாகவும் பேசினார்கள். வீதியில் தன்னுடைய நடிப்புத்திறமைகளை அள்ளித் தெளித்து அதை அரங்கேற்றிக் கொண்டிருந்தான்.
***
“தம்பி நீங்க தான் ஹீரோ”
“சார் எனக்கு நடிக்கவே தெரியாது. அதபத்தி எதுவும் தெரியாதே’’ என்றான் ஒருவன்,
தம்பி நடிப்பா முக்கியம்? இவ்வளவு பணம் குடுத்திருக்கீங்க
“நடிப்ப வெளிய கொண்டு வந்திருவோம், நீங்க பயப்படாதீங்க. நானிருக்கேன் என்று சொல்லிய தினகர் அவனிடமிருந்த பணத்தை அப்படியே அள்ளி கல்லாவை நிரப்பினார்.
***
“தமிழ் சகல திறமைகள் இருந்தும் வீதியில் புலம்பித் திரிந்தான்.
தினகர் நடிப்பே தெரியாத ஒரு நடிகனோடு படப்படிப்புக் கிளம்பனார்
“சார் எனக்கு நடிப்பு வராதே, தம்பி நான் இருக்கேன்”
“வாங்க, அவன் கொடுத்த பணம் தினகரைப் பாடாய் படுத்தியது.
தமிழின் நடிப்பு அவனோடயே உறைந்து கிடந்தது.
எவன் தடுத்தாலும் அவனில் திறமை ஒரு நாள் வெளிவந்தே தீரும் என்ற நம்பிக்கை அவனில் நிறைந்து கண்ணீராய் வெளித் தள்ளியது.
அவனின் முயற்சி மட்டும் முறியவே இல்லை.
அவனின் வாசலில் ஒருநாள் சூரியன் கட்டாயம் உதிக்கும் என்ற நம்பிக்கை குறையவே இல்லை.