எண்ணங்களும் எண்ணப்படும்

காலை எழுந்தவுடன் படிப்பு… மறு நிமிடமே 5 மதிப்பெண். எதிர்பார்த்தது குறைந்தது 7 தான் கிடைத்தது.
ஆனால் தூக்க கலக்கத்தில் படித்ததாலோ என்னவோ Just Pass ஆகிவிட்டேன் என்று அலுத்துக் கொண்டே காலை வகுப்பு முடிந்து சாப்பாட்டறை பக்கம் எட்டிப் பார்த்தான்.
சமையல் முடிந்து சாப்பாட்டு ரகங்கள் மேஜை மீது அலங்காரமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அந்த அணிவகுப்புக்கு 8 மதிப்பெண் வழங்கப்பட்டிருந்தது. குறுகிய நேரத்தில் பல பதார்த்தங்களை செய்த அனுபவ சமையல் உதவியாளருக்கும் 8 மதிப்பெண் கிடைத்திருந்தது.
அது சரி, சுவைக்கு? என்று சிந்தத்தபடி கண்களை கூர்ந்து உற்று நோக்கியபடி மதிப்பெண் அட்டவணைகளை நோட்டம் விட்டான் ராஜசேகரன். 18 வயது ஆகி விட்டது; பள்ளிப்படிப்புகள் முடித்து கல்லூரிப் படிப்பை துவங்கி விட்டான். எங்கும் எதிலும் இயந்திர கருவிகள் என்ற வாழ்க்கையை மாற்றி அமைத்து ‘அந்தக் கால வாழ்வு’ வேண்டுமென்று தனது வட்டத்தில் உள்ளவர்களுக்கு அறிவுரை கூறியபடி சித்தாந்தம் பேசி வரும் வாலிப வயதின் கோபத்தில் மூழ்கி விடுவது வாடிக்கையாகி விட்டது!
அனைவருக்கும் எச்சரிக்கை அறிவிப்பும்  4 மதிப்பெண் மட்டும் என்றது. பள்ளி கல்வி, வீட்டு வேலை, விளையாட்டு, குடும்பமாக சேர்ந்து மகிழ்வது என ராஜசேகரன் வாழ்ந்து கொண்டிருக்கையில் தான், ஏதோ தேடுகையில் 2040–ல் ஆம், சுமார் 60 ஆண்டுகளுக்கு முந்தைய தகவல் களஞ்சியத்தை படிக்கும் வாய்ப்பை பெற்றான்.
அப்போதெல்லாம் இயந்திர மயம் அதிகம் கிடையாது! சொன்னால் செய்யும் இயந்திர அறிவு சமாச்சாரம் உருவாகிக் கொண்டிருந்த காலக்கட்டம்.
இப்போது அதை நண்பர்களிடம் ஆலோசித்தால்  ராஜசேகரின் தேடுதலுக்கு 2 மதிப்பெண்கள் தந்துவிட்டது.
தினமும் குறைந்தது 40 மதிப்பெண் பெற்றால்தானே மாணவர்களுக்கு இரவில் தூங்க அனுமதி! இந்த நிலையில் யாரோ ஒருவன் தேவையின்றி செய்த தேடுதல் சேவைக்கும்  அதை உரியவர்களிடம் பேசும் முன்பு தனது வட்டத்தில் பகிர்ந்தமைக்கு மதிப்பெண் குறைக்கப்படாமல், ஏதோ பள்ளி மாணவன் என்ற காரணத்தால் குறைந்த மதிப்பெண் தரப்பட்டது!
ராஜசேகரின் அன்றைய தூங்கும் நேரம் நடு இரவு வரை ஏதேதோ செய்த பிறகே 40 மதிப்பெண் பெற முடிந்ததால்  ஒரு வழியாக தூங்கிவிட்டான்.
தூக்கத்திலும் தனது வட்டத்தில் எதைச் சொன்னால் இயந்திர அறிவுக்கு கோபம் வருமென்ற சிந்தனையே ஓங்கி இருந்ததால் உடனே தூங்காமல் புரண்டு, புரண்டு கொண்டிருந்தான்.
உடனே தூங்காததற்கும் மிக குறைந்த மதிப்பெண்ணான 3 மட்டுமே பெற முடிந்தது.
அத்தியாயம் – 2
காய்கறிகள் பிரமாதம்!
நன்கு தூங்கி எழுந்தது மேகலாவிற்கு படு மகிழ்ச்சி. தூங்கி எழுந்ததற்கு 8 மார்க் என்றால் சுகமான காலை என்பதற்கு என்னதான் குறை இருக்கும்!
விறு விறுவென காலை பணிகளில் மூழ்கினாள்… கணவன் ரவி நேரத்திற்கு புறப்பட வேண்டும்… அலுவலக வேலைகளுக்கு உரிய நேரத்தில் சென்று விட வேண்டுமே…
இப்படி பல எண்ணங்கள் அலை மோத சமையல் பாத்திரங்களை வேண்டிய இடத்தில் இருந்து கொண்டு வந்து, சூடாக்கிட துவங்கினாள். அன்றைய உணவு பட்டியலில் எல்லாச்  சத்துக்களும் வேண்டிய அளவில் இருக்கும்படி உறுதி செய்துவிட்டு அதற்கான காய்களையும்  அரிசி பருப்பு சமாச்சாரங்களையும் பட்டியலிட, உடனுக்குடன் தானியங்கி கட்டண முறையில் பணம் கைமாற, ஆர்டர் பூர்த்தியாகி, சில நிமிடங்களில் சமையலறையில் வந்து விட்டது.
இப்படி அவசர அவசரமாக தயாரிக்கும் போது, இந்த காய்கள் உரிய பாத்திரத்தில் அழகுற வெட்டப்பட்டு, சமைக்க தயாராக இருந்தால் நன்றாக இருக்குமே! என யோசித்தபடி பணிகளில் இறங்கினாள்.
அந்த யோசனைக்கு மேகலாவிற்கு 8 மதிப்பெண்கள் கிடைத்து விட்டது!
அழகாக அணிவகுக்கப்பட்டு சாப்பாட்டு மேஜையில் அடுக்கி வைத்து, அதை முப்பரிமாண போட்டோவையும் எடுத்து தனது வட்டத்தில் பதிவு செய்தும் விட்டாள்.
இதை பார்த்து பொறாமைப்பட்ட ஒரு கல்லூரிக்  காலத்  தோழி கடுப்பான முகத்தை வெளிப்படுத்த, அவளுக்கு 3 மதிப்பெண் மட்டுமே கிடைத்தது.
பகிர்ந்து கொண்டதை, பலர் தங்களது வட்டத்தில் பதிவு செய்து மேகலாவிற்கு பாராட்டு ஸ்டார்களை வழங்கியவர்கள் 8 மதிப்பெண் வரை பெற்றனர்.
அத்தியாயம் – 3
மாத்தி யோசி
ரவிக்கு மகனின் போக்கு விசித்திரமாகவே தெரியவில்லை. பள்ளி படிப்பின்போது சொன்னதை கேட்பதும்  உயர் தொழில்நுட்பங்கள் மீது ஆசைப்படுவதும்  எட்டாத கனியை புளிக்கும் கனியாய் பார்ப்பதும்  கையில் உள்ளதை சாப்பிட்டு மகிழ்ந்தாலும் தெகட்டல் காரணமாக தனது எதிர்ப்பு எண்ணங்களை வளர்ப்பது…. இதெல்லாம் சகஜம் தானே!
2020ல் இந்தியா வல்லரசானது. அந்த ஆண்டில் தான் ரவியின் அப்பா கிருஷ்ணன் பிறந்தார். மனிதன் முதன்முதலாக செவ்வாய் கிரகத்திற்கு சென்ற 2023ல் தாய் மீனா பிறந்த ஆண்டாகும்.
அவர்கள் ரவியிடம் கூறி வளர்த்தது நாங்க வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் இருந்து விடுபட்டு சுதந்திரமாக வாழ்கின்றோம். அதற்கு உதவியது அப்போதைய நவீன அறிவுத்திறன் கொண்ட இயந்திரங்களே என்பார்கள்.
ரவி, மேகலா இருவருமே 2045ல் பிறந்தவர்கள், தொலை தகவல் புரட்சியின் உச்சத்தில் சமூகவலைதளங்கள் வாழ்வியலில் இருந்து வெளியேறாமல் வாழ்வே சமூகவலைதளமாக மாறிய காலக்கட்டமாகும்!
ரவியின் தாத்தா பலமுறை ‘தகவல் புரட்சி’ Cloud Computing, Big Data என அக்கால தொழில்நுட்பங்களின் அருமை பெருமைகளை புகழாத நாளே இருக்காது.
கிருஷ்ணன் தாத்தா, மீனா பாட்டி காலத்தில் தான்  பிடித்த போட்டோவுக்கு ‘Like’ போடுவது, ‘Dislike’ போட்டு அவமதிப்பது போன்றவை மாறி, தானியங்கி சமாச்சாரங்கள் தானே யோசித்து  அதற்கு மதிப்பெண் போடும் யுகப் புரட்சியை துவங்கியது.
அத்தியாயம் – 4
இதுவும் மாறுமே!
தோசை நல்லா வந்து செல்பி போட்டு 200 Like வாங்கிய எனக்கு, அதே தோசைக்கு இன்று, 10க்கு 4 மதிப்பெண் தரும் இன்றைய தொழில்நுட்பம் ‘ரொம்ப மோசம்’…. என்று மருமகள் மேகலாவிடம் மீனா புலம்புவாள்!
அருகே இருந்து பட்டும்படாமலும் எதையோ யோசித்து செயல்பட்டு கொண்டிருந்த ரவி தனது பெற்றோரின் அனுபவங்களையும்  அதற்கு முந்தைய தலைமுறையின் கோட்பாடுகளையும் ஓரளவு புரிந்துகொண்டு அடுத்த தலைமுறை உபகரணங்களை உருவாக்கும் வல்லுநர்களுடன் ஏதோ ஒரு அதிமுக்கிய தயாரிப்பு திட்டத்தில் ஈடுபட்டு வந்தாள்.
அத்தியாயம் – 5
2050களில்
சிறையிலிருக்கும் கைதிகளை எல்லாம் எப்படி உபயோகமானவர்களாக மாற்றுவது? இந்த கேள்விக்கு விடை தேடிக்கொண்டிருந்த ஒரு வட்டம் அதிநவீன ‘தானே யோசிக்கும்’ கருவிகளின் பரிசோதனைக்கு உபயோகித்துக் கொண்டனர்.
அவர்களது அன்றாட வேலைகளைத்  தானே மதிப்பு வழங்கும் ‘செயற்கை நுண்ணறிவை’ 2050களில் துவங்கினாலும்  2070ல் தான் ஓரளவு வெற்றி பெற்று, நட்பு வட்டாரங்களில் பிறகு குடும்பத்தார் வட்டாரங்களில் கூடவே அலுவலக வேலைகளிலும்  கூடவே சேவைச் சமாச்சாரங்களுக்கும் பிறகு மெல்ல கல்வி கூடங்களிலும் நுழைந்துவிட்டது.
‘யாருக்கு எவ்வளவு மார்க்’ என்பதால் என்ன பயன் என பழமைவாதிகள் வசை பாடினாலும் அன்றைய தலைமுறை மதிப்பீட்டு வாழ்வின் புதிய பரிமாணத்தையும்  அதன் வசதி வாய்ப்புகளையும் உணர ஆரம்பித்தனர்.
அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகள் தினமும் 70 மார்க் வாழும் வாழ்க்கையை வடிவமைத்தனர்.
சீனா, இந்தியா, பிரேசில் போன்ற நாடுகள் 50 என்று நிர்ணயப்படுத்தினர்.
50 மதிப்பெண் எடுத்தால் அரசே உணவு, உடை, ஆடம்பர வீடு என்று அறிவித்தது.
மற்றவர்கள் மார்க்கை குறைக்கும் குதர்க்க புத்தி கொண்ட சமுதாயக் கோமாளிகள், வில்லன்கள் இருந்த பகுதிகளில் குறைந்தபட்ச மதிப்பெண் 20 என்றும் நிர்ணயிக்கப்பட்டது!
அத்தியாயம் 6
நினைத்தேன் முடித்தேன்
‘24 மணி நேரமும் கண்காணிப்பா? அப்படித்தான் மதிப்பெண் தர வேண்டுமா? ஏன் மனிதனை இயந்திரங்கள் மதிப்பிட வேண்டும்? என்ற கேள்விகள் ஒரு புறம் எழுந்தாலும், ‘அது மனிதனால் சாத்தியமேயில்லை, என்ன தான் தகவல் புரட்சியும் நவீன தொழில்நுட்பங்களும் வந்துவிட்டாலும் நம்பகத் தன்மையில்லாத வாழ்வு எப்படி சிறக்கும்’ என்று கேட்க, மாற்று யோசனைகள் மலர, புதிய எண்ணங்கள் உருவாகி 2080களில் தான் பள்ளி மாணவர்களுக்கு 40, குடும்பத்தாருக்கு 60, அலுவலக வேலைகளுக்கு 70 குறைந்தபட்ச மதிப்பெண்கள் வழங்கும் முறை ஏற்கப்பட்டது.
இந்த சமாச்சாரங்களுக்கு தேவையான கணினி உபயோகம் எல்லாமே மனித அறிவுக்கு என்பதால் மனிதனின் கைவசத்தில் இருப்பதை விட இயந்திர மனிதர்கள் வாழும் சந்திரனில் இருந்தால் நல்லது என்ற வாழ்வியல் முறை துவங்கியது.
அடுத்தக்கட்ட வளர்ச்சிகளுக்கு செவ்வாய் கிரகமும் உபயோகமானது என்ற பரிணாம  வளர்ச்சி பற்றி உங்களுக்கு சொல்லித்தானா தெரிய வேண்டும்!
அத்தியாயம் 7
முடிவின் துவக்கம்….
இப்போது எல்லாம் உங்கள் வாழ்வில் சந்திரன் ஆதிக்கம் குறைவாகவும்   செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கம் அதிகமாகவும் இருக்குமென்றால் நம்பித்தான் ஆக வேண்டும் என்று கூறியவர்களின் வார்த்தைகள் உண்மையாக துவங்கியது 2090ல் தான்!
ரவியின் வேகத்தில் ராஜசேகரின் புதிய எழுச்சி மனப்போக்கில், தாத்தா, பாட்டி கிருஷ்ணன், மீனா தினம் தினம் தரும் அறிவுரைகளில் தனது உலகம் மாறி வருவதை புரிந்துகொண்டு, சமுதாயத்துடன் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று செயல்பட்டு வரும் மேகலா அடுத்த புரட்சிகள் வரட்டும். அதையும் அனுபவிக்க நான் தயாராகி விட்டேன்! என்று சுதந்திரமாக தனது வளையத்தில் வலம் வருகிறாள்!
–––––––––––
Tail Piece
–––––––––––
Like போட ஆசைப்பட்டால் நீங்கள் தான் decrose1963@gmail.com என்ற இ –அஞ்சலுக்கு தகவல் அனுப்ப வேண்டும், பிற்கால தொழில்நுட்பங்கள் வரும் வரை!