கோபம்

சிறுகதை ராஜா செல்லமுத்து

 

விக்னேஷ் கொஞ்சம் கோபமாகவே இருந்தான் .அவன் முகத்தில் வெறி முகாமிட்டிருந்தது.
பிரேம் இப்போது கிடைத்தாலும் அவனைக் கொன்று விடுவால் கூட அவனுக்குச் சுலபமாகவே தெரிந்தது. மொத்த துரோகத்தையும் அவன் முன்றுக்குக் கொண்டு வந்து அவளை எதிர் பார்த்துக் கொண்டிருந்தான்.
எட்டாவது மாடிக்குப்போன விப்ட் ஆறஅமர முதல் தளத்திற்கு வந்து நின்றது. சுற்றும் முற்றும் பார்த்தான், அங்கு யாருமில்லை.
அலுவலக நேரமானாலும் எல்லோரும் உள்ளே இருந்ததால் லிப்ட் தனியாகவே நின்றது. எட்டாவது  மாடிக்குப் போக லிப்டை அழுத்தினான்.
அனுமன் தன் நெஞ்சைத் திறந்து காட்டியதைப் போல – கிரிக் என்ற சத்தத்தோடு  இந்த லிப்ட் இரண்டு பக்கமும் தன் இருபக்கக் கதவையும் திறந்தது.
அப்போது ஓடி வந்து கொண்டிருந்தான் பிரேம்,
‘‘விக்னேஷ் ஸ்டாப், ஐ ஜாய்ன் வித்யூ. ஸ்டாப் ஸ்டாப் ’’ என்று கத்திய வாறே லிப்ட் முன்னால் வந்து நின்றான். இரண்டு பேரையும் உள்வாங்கிய இந்த லிப்ட் தன் இரண்டு நெஞ்சக் கதவுகளை சர் என மூடியது .விக்கேஷ் எட்டு என அழுத்தினான்.
“க்க்க்…… என்ற  ஓசையோடு மெல்ல நகர்ந்து மேலே போனது லிப்ட்…
பர்ஸ்ட் ப்ளோர் என்ற ஆங்கில உச்சரிப்பு வர இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். யாரும் ஏறவோ இறங்கவோ இல்லை.
இது நல்ல சந்தர்ப்பமில்ல பிரேம இங்கயே போட்டுருவமா? விக்னேஷின் மனசுக்குள் விபரீதம் குடிபுக ஆரம்பித்தது.
தனிமை, அடைக்கப்பட்ட லிப்ட் இதற்கு மேல் எதுவும் வேணாமே.
முடிச்சிர வேண்டியது தான்.இவன் எப்படியெல்லாம் நம்மள திட்டுனான். இவன இப்படியே விட்டா சரிப்பட்டு வராது. அது போல இப்படியொரு சந்தர்ப்பமும் கிடைக்காது. முடிச்சிர வேண்டியது தான்.மொத்த நோக்கமும் ஒன்று சேர பிரேமை நோக்கி முன்னேறினான். லிப்ட் மூன்றாது தளத்தைத் தாண்டி முன்னேறிக் கொண்டிருந்தது.
க்க்க்…. என்ற சத்தம் உள்ளே கேட்டபோது விக்னேஷ் பிரேமின் கழுத்தை லபக் எனப்பிடித்தான். இருகை களையும் கொண்டு அவன் குரல் வளையைப் பிடித்தான் :
‘‘ஏய் ம்ம்ம்….. என்ற மூச்சுத்தினறலோடு விக்கேஷின் கையைப் பிடித்துத் தள்ள முற்பட்டான். ஆனால் விக்கேஷின் முரட்டுப்பிடி மட்டும் பிரேமின் கழுத்தை விட்டுப் பிரியவில்லை எவ்வளவோ முயற்சி செய்தான் தன் விஷப்பிடியை விக்னேஷ் விடவே இல்லை
அவன் கழுத்து ஒடியும் அளவிற்கு நெரித்தான். பிரேமின் இரண்டு கண் விழியும் இமையை விட்டு வெளியே தள்ள ரத்தச் சிவப்பில் மாற திணறினான். திமிறினான் முடியவில்லை .ஆனால் முடியவே இல்லை. லிப்ட் எட்டாவது மாடியைத்தொட்டபோது  சட்டென கீழே விழுந்தான் பிரேம்.
யப்பா முடிஞ்சது. என்னைய எப்பிடியெல்லாம் பேசுனான்.
இனிமே பேசுவ, எப்பப்பாத்தாலும் என்னைய திட்டுறது; புறம் பேசுறது இன்னைக்கோட ஒன்னோட கத முடிஞ்சது என்னைய இனிமே பேசுவ ;கோபத்தோடு அவனை மிதித்தான் ;அவன் முகத்தில் எச்சில் உமிழ்ந்தான் ;லிப்டின் ஓரம் பிணத்தைத் தள்ளினான்.
எட்டாவது மாடியில் போய் நின்ற லிப்ட் தன் நெஞ்சக்கதவுகளை மெல்லத் திறந்தது. பிரேமே ஓரமாய் தள்ளி விட்டு எட்டாவதுமாடியில்  இறங்கி மொட்டை மாடிக்குப்போக எத்தனித்தான் விக்னேஷ். லிப்டை விட்டு இறங்கியதும் லிப்ட் தன் நெஞ்சக் கதவை மூடிக் கொண்டது. முடிஞ்சே. இனிமே என்னைய இப்படிப் பேசுவ .இனி யாரப்
பேசுவ ;இன்றோடு மொத்தமும் முடிஞ்சது என்ற சந்தோசத்தில் திளைத்தான் விக்னேஷ்.
மொட்டை மாடியில் உலவினான்.
அவன் எண்ணங்கள் அவனைச் சுழற்றி சுழற்றி அடித்தது.
தப்புப் பண்ணிட்டமோ? இனி நமக்கு தூக்கு தானா? போலீஸ் என்னையப் புடிச்சிட்டுப் போயிருவாங்களோ?
இனி நான் தப்பிக்க முடியாதோ? நம்மோட வாழ்க்கை இனி அவ்வளவு தான் போல .விரக்தியின் உச்சிக்குப்போய் வியர்ந்தான். அழுதான் துடித்தான் தப்புப் பண்ணிட்டமோ? இந்த கோபம் தான நம்மள இந்த நெலைமைக்குகொண்டு வந்துருக்கு. கோபத்த கொஞ்ச நேரம் அடக்கி வச்சிருக்கலாமோ? இந்த முன் கோபம் தான் நம்மள கொன்னுருச்சு.
புலம்பினான் ; புரண்டான் . அவனால் இருப்புக் கொள்ளவே முடியவில்லை ;
ஓடி வந்து லிப்டைப் பார்த்தான்.
அங்கே….
பிரேமின் பிணம் இல்லாமல் இருந்தது.
திடுக்கிட்டான்.
எங்க அவனோட பிணம். யாரோவது தூக்கிட்டுப் போயிட்டாங்களா? நடுங்கினான் படிகளில் படப்படவென இறங்கினான்.
ஐயய்யோ இனி அவ்வளவு தான் போல என்னோட வாழ்க்கை . அழுது கொண்டே இறங்கினான் .அங்கே அங்கே பிரேம் உயிருடன் படிகளில் மேலே ஏறிக்கொண்டிருந்தான் . அப்போது தான் விக்னேஷின் நினைவுகள் முன்னுக்கு வந்து நின்றது.
பிரேம் மேலே ஏறிவந்து கொண்டிருந்தான்.
‘‘விக்னேஷ் எக்ஸ்ட்றீம்லி ஸாரி. நான் திட்டுனத மனசுல வச்சுக்கராத. ஸாரி…. வெரி ஸாரி’’ என விக்னேஷின் தோளைத் தட்டிக் கொடுத்தான் பிரேம்.
” யப்பா  இவன் இன்னும் சாகலையா? ஓ…. இது நம்மோட நினைவுகள் முன்னோக்கிப் போயிருச்சோ? நல்ல வேள இவன நாம கொல்லல .இல்ல இந்நேரம் நாம கைதியாகிருப்போம் ;  தண்டனை கெடச்சிருக்கும் ; வாழ்க்கையே நாசமா போயிருக்கும் .
யப்பா இந்த முன் கோபத்த இனிமே நாம முளையிலயே கிள்ளி எறியனும் என்ற சந்தோசத்தோடு படிகளில் கீழே இறங்கினான்.
அவனின் உயிரில் உறைந்திருந்த கோபம் கொஞ்சம் கொஞ்சமாக ஆவியாகிக் கொண்டிருந்தது.