காலத்தை வென்ற நட்பு

அத்தியாயம்–1
இங்கிலாந்தில் ஏதோ ஒரு ஓட்டலில் அப்பா யாரோ ஒரு வடநாட்டுப் பெண்ணைக் கட்டிப் பிடித்து பேசிக் கொண்டு இருந்ததை, தான் பார்த்ததாக என் மகன் கூறியவுடன் தூக்கி வாரிப் போட்டது. கூடவே ஒரு சிறுமியும் இருந்ததாக சொன்னவுடன் வாயடைத்துப் போனேன்.
இதுவரை எனக்கு இப்படி ஒரு அதிர்ச்சி வந்ததே இல்லை.
கடவுள் புண்ணியத்தில் நல்ல வீடு. அன்பான கணவன்; விதவிதமான ஆடைகள்;
மினுமினுக்கும் நகை என்று எல்லாமே இருந்தது.
ஆனால் ஏதோ ஒரு வெறுமை மற்றும் தனிமை எனக்கு அச்சத்தை தந்து கொண்டே இருக்கும்.
சில ஆண்டுகளில் எனக்கு ஒரு மகன் பிறந்தான். அவனும் மேற்படிப்புக்கு இங்கிலாந்து சென்று விட்டான். கணவன் ராஜாவுக்கு ஒரு பெரிய நிறுவனத்தில் உயர் பதவி வேலை கிடைத்தது. அது வெளிநாடுகளுக்கு செல்லும் பணியாக மாறியது.
இப்படி இனிமையாக வாழ்க்கை போய்க் கொண்டிருந்தபோது இந்த அதிர்ச்சி என்னை ரொம்பவே பாதித்தது.
அன்றிரவு எப்பொழுதும் போல் வெளிநாட்டு போன் கால் வந்தபோது சற்றே எரிச்சலுடன் பேசத் துவங்கினேன்.
‘ஏய் மாலினி…’ என ஆரம்பித்தார்.
எனது பதிலில் ஏதோ மாற்றம் தெரிந்ததால்,
‘என்ன ஆச்சு?’ என்று கேட்க,
‘நீங்க எந்த ஊரில் இருக்கீங்க?’ எனக் கேட்டேன்.
‘‘ஜெர்மனி, அதான் உனக்கு புறப்படும் போதே சொன்னேனே…’’ என்றார்.
‘‘மனதில் அடப்பாவி இப்படி மனைவிக்கு தெரியாம யாருடனோ சுத்துறியே. போயும் போயும் சொந்தப் பையனிடமா சிக்குவது’’ என நொந்தாள்.
பிறகு பேசவே பிடிக்காமல் சரி, சரி என்றும் ம், ம் என்று மட்டும் சிறு பதில்கள் மட்டும் தான்.
அந்தக் கணமே ராஜாவை வெறுக்க ஆரம்பித்தேன்.
***
அத்தியாயம்–2
கமலா காலாவதியாகிக் கொண்டிருக்கும் தனது வாழ்நாள் பற்றி அறிந்தவள். பிறந்த தேதியும் இறப்பு நாளும் மனிதனுக்கு தெரியாத ஒன்று என்று கூறுவார்கள்.
ஆனால் தனக்கு புற்று நோய், அதுவும் முற்றிய நிலையில் மரணத்தின் விளிம்பில் இருப்பது தெரிய வர டாக்டர்கள் அதிர்ந்தனர். திருமணம் நிகழ்ந்து எட்டே ஆண்டுகளில் கணவன் பாஸ்கர் மும்பையில் பஸ்– கார் மோதலில் ஒரு கால் செயலிழந்தது, ஒரு கையும் நைந்து செயலற்றான். அந்தச் செய்தி தந்த அதிர்ச்சியில் கர்ப்பவதி கமலாவின் கருச்சிதைவும் மீண்டும் கர்ப்பம் தரிக்க முடியாத நிலையும் ஏற்பட்டது.
பாஸ்கர் சென்னையில் படிக்கும் காலத்தில் ராஜாவின் நெருங்கிய நண்பன்.
அண்ணா நகர் பகுதியில் பள்ளிக் காலத்தில் சைக்கிளிலும் கல்லூரி நாட்களில் பஸ், பைக் என சுற்றி திரிந்தவர்கள்.
பின்னர் வேலைவாய்ப்பு காரணமாக பாஸ்கர் மும்பைக்கு குடும்பத்துடன் இடம் பெயர்ந்தான்.
முன்பே திருமணமான ராஜா, அவ்வப்போது மும்பை சென்றால் பாஸ்கர் குடும்பத்தைச் சந்தித்து விட்டே திரும்புவான்.
விபத்து நடந்த விபரம் கேட்டு மனம் உடைந்த ராஜா, ஒரு மாதம் மும்பையிலேயே மருத்துவமனையில் தங்கி இருந்து பணிவிடைகள் செய்து உதவினான்.
கண்ணீர் மல்க பாஸ்கரும் அவரது மனைவி கமலாவும் நன்றி கூறி விடை தந்த நாளில் திரும்ப மனமின்றியே கனத்த இதயத்துடன் சென்னை திரும்பினான்.
பல நாட்களுக்கு எதிலும் பற்றின்றி, அலைபாய்ந்து கொண்டிருந்த மனசை ஓர் நிலைப்படுத்த முடியாது தவியாய் தவித்தான்.
காலம் உண்மையிலேயே எல்லா ரணங்களையும் குணமாக்கும் அருமருந்து! அதன் இதத்தில் ராஜாவும் ஒரு வழியாக சொந்த வாழ்விலும் அலுவலக நடப்புகளிலும் ஈடுபட ஆரம்பித்தான்.
தனது சுக துக்கங்களை மனம் விட்டு பேச, பாஸ்கர் எப்போது தயாராகவே இருப்பதால், தினமும் பலமுறை போனில் பேசுவது வாடிக்கை.
தனது மகன் லண்டனில் மேற்படிப்புக்கு சென்ற போது தன்னை விட அதிகம் பூரித்தது பாஸ்கரும் கமலாவும் தான் என்பதையும் கண்டு மகிழ்ந்தான்.
காலச்சக்கர சுழற்சியில் மாற்றங்கள் தானே நிரந்தரம்! ஆனால் பாஸ்கர் வாழ்வில் தான் நிரந்தரமாக கவலைகள் மட்டுமே குடி கொண்டு இருக்க, என்ன தான் காரணமோ, என அங்கலாய்ப்பான்.
அதை வீட்டில் அனு தினமும் கேட்டுக் கேட்டு, நொந்து கொண்டு இருந்தது ராஜாவின் மனைவி மாலினி தான்.
***
அத்தியாயம்–3
ஒரு முறை ராஜாவுடன் ஏற்பட்ட சர்ச்சையில் ‘இப்படி பாஸ்கர் குடும்பத்துடன் அதிகப்படியாக ஈடுபாடு காட்டுகிறீர்களே, அவங்க வாழ்வை அவங்க குடும்பத்தார் பார்த்து கொள்வார்கள். நீங்க உங்க குடும்பம், உங்க வேலை என்று இருங்க…’ என கூறியவுடன் கடும் கோபத்தில் திரும்பத் திட்ட, அன்று முற்றிய சண்டை பெரும் சர்ச்சையாகி குடும்ப வாழ்வில் பெரும் புயலாக மாறியது.
மாலினியின் குடும்பத்தார் என்னிடம் பேசி, பிறகு நாங்கள் இருவரும் மன நல மருத்துவரிடம் மன நல ஆலோசனைகள் பெற்ற பிறகே எங்களால் சகஜ நிலைக்கு வர முடிந்தது.
அன்று டாக்டர் கூறியது உங்கள் வாழ்வை அனுபவித்து, ஒருவரை ஒருவர் அரவணைத்து வாழுங்கள், உங்கள் சுற்றம் நட்பு வட்டாரத்தை பற்றிய கவலையை மறந்து விட்டு வாழுங்கள். உதவி கேட்கும் போது உங்களால் முடிந்ததை செய்யுங்கள். ஆனால் உங்கள் குடும்பச் சாத்தியக் கூறுகளுக்கு மிஞ்சி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அறிவுரை தந்தார்.
அதை நானும் புரிந்துகொண்டு, அளவுக்கு மீறி நண்பனுக்கு கவலைப்பட்டதற்கும் பிடியின்றி வாழ்ந்ததற்கும் மனம் வருந்தி மாலினியிடம் மனம் விட்டு பேசி எங்கள் பிரச்சனைகளில் இருந்து வெளிவந்தோம்.
எங்கள் வாழ்வின் நல்ல மாற்றங்களை தந்து வந்த காலச் சக்கரம் ஏனோ பாஸ்கர் கமலா வாழ்வில் நிரந்தர சோகத்தை தங்க வைத்து வருகிறது.
***
அத்தியாயம்–4
அன்று காலை கமலா என்னிடம் அந்த அதிர்ச்சி தகவலைத் தந்தாள். மார்பகப் புற்று நோய் என்பதால் இதை பற்றி கவலையில்லை. குணப்படுத்தி விடலாம் என்றேன்.
ஆனால் அவளது நிலை பரிதாபமானது. சொந்த உடல் மீது அக்கறையின்றி விட்டு விட்டதால், குறிப்பாக நடமாட முடியாமல் தன் உதவியை மட்டும் நம்பி வாழ்ந்து கொண்டிருந்த பாஸ்கரை அனுசரணையோடு அரவணைத்து, வாழ்ந்து கொண்டிருந்ததில் தனது உடல் வலியையும் உபாதைகளையும் உதாசீனப்படுத்தியதால் முற்றிய நிலையில் தான் புற்று நோய் பரிசோதனை செய்து கொண்டாள். பிறகே தன் பரிதாப நிலை பற்றி அறிய வந்தால் வாழ்க்கை சூனியமானதை ராஜாவிடம் பகிர்ந்து கொண்டாள்.
ராஜா–மாலினி இடையே நிலவிய குடும்ப பிரச்சினை மற்றும் மனநல ஆலோசனைகள் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டதால் கமலாவும் எந்த பிரச்சினையையும் பகிர்ந்து கொள்ளாமல்த் தான் இருந்தாள்.
பயத்தை உடனே ராஜாவிடம் பகிர்ந்து கொண்டாள்.
இதுபற்றி தான் என்ன செய்வது என யோசிக்க ஆரம்பித்தவுடன் சில நாட்களில் ஜெர்மனி செல்ல இருந்ததை நிறுத்தி விடலாமா? என்று மன சஞ்சலத்தின்போது முன்பு சென்ற அதே மருத்துவரை அணுகினேன்.
‘மிஸ்டர் ராஜா, முதலில் நீங்க விரும்புவது கமலாவுக்கு உதவுவது தானே…’ ஆனால், சமீபமாய் தான் உங்கள் மனைவி மனநிலை சீராகியிருப்பதால் இந்தத் தகவல்கள் மேலும் மன பாரத்தை தரலாம். அதுபற்றி பேச வேண்டாம் என தடுத்து விட்டார்.
ஆனால் அவர் மேலும் ஓர் உன்னதமான ஆலோசனை தந்தார்.
மரணம் என்பது இயற்கை. அது இன்றோ, அல்லது நாளையோ நிச்சயம். ஆனால் விட்டு பிரியும் கமலா, பாஸ்கர் வாழ்விலும் பெரும் சூனியத்தையல்லவா விட்டுச் செல்வார்.
அதை நிவர்த்தி செய்ய முதலில் ஒரு சிறுமியை தத்து எடுத்து வளர்க்கச் சொன்னார்.
அதன்படி பள்ளிப் படிப்பு முடிந்த ஒரு 11 வயது சிறுமியைச் சென்னையில் தத்தெடுக்க வழிகண்டேன். அதற்கும் அவரே உதவினார்.
அந்த சிறுமியை மும்பையில் அவர்களிடம் ஒப்படைக்கும் வரை அவரது உதவி தேவைப்பட்டது.
ஜெர்மனி சென்ற நான், ஆஸ்திரியா (Austria) நாட்டில் ஒரு நவீன மருத்துவ முறை இருப்பதையறிந்து அதை பாஸ்கரிடமும் கமலாவிடமும் தெரிவித்தேன்.
என் செலவில் மும்பையில் ஒரு முதியோர் இல்லத்தில் பாஸ்கரை அனுமதித்து விட்டு, கமலாவையும், சிறுமி காவியாவையும் ஜெர்மனி வரவழைத்து, என் செலவில் ஆஸ்திரியா நாட்டு மருத்துவ சிகிச்சைக்கு உதவினேன்.
ஆஸ்திரியா நாட்டு சிகிச்சைக்கு முன்பு ரத்த பரிசோதனை செய்வார்கள். அதாவது புற்றுநோய் கிருமியை வளரச் செய்து, அது என்ன மருந்து கொடுத்தால் அழிகிறது என சோதித்து தெரிந்து கொள்வார்கள்.
அந்தச் சோதனை முடிய 30 நாட்கள் ஆகும். அதுவரை ஆஸ்திரியாவில் தங்க வசதியில்லை. சிறிய நாடு அது.
ஆகவே வரும் நோயாளிகள் ஜெர்மனியிலோ, இங்கிலாந்திலோ தங்குவார்கள். அடுத்த மாதம் மாலினியுடன் இங்கிலாந்து வந்து மகனுடன் ஊர் சுற்றி பார்த்து விட்டு ஊர் திரும்ப நினைத்திருந்தேன்.
அதற்காக ஒரு வீட்டை இரண்டு வாரங்கள் புக் செய்ய இருந்தேன். அங்கு இரண்டு மாதங்களுக்கு கொடுக்க முடியுமா? என கேட்டவுடன், மறுநாளே வந்து வீட்டை எடுத்துக் கொள்ளுங்கள் என கூறி விட்டதால், உடனே எனது பயணத்தை மாற்றி இங்கிலாந்து சென்று அந்த வீட்டில் வேண்டிய சவுரியங்களை செய்து கொடுத்து விட்டு, மாலை அருகாமையில் இருந்த ஓட்டலில் சாப்பிட்டு விட்டு கமலாவிடம் சகோதரப் பாசம் பொங்கிட, கட்டிப் பிடித்து, இனியாவது உன் கவலைகள் தீர்ந்து நல்வாழ்வு வாழ ஆண்டவனிடம் பிரார்த்தித்துக் கொண்டே இரு’ எனச்சொல்லி விட்டு அடுத்த சில மணி நேரத்தில் ஏற வேண்டிய விமானத்திற்கு சென்று விட்டேன்.
ஆஸ்திரியாவில் உள்ள புற்றுநோய் சிகிச்சை பற்றிய தகவல்கள் இணையதளத்தில் உள்ளது. நீங்களும் உங்கள் சுற்றத்தார் வட்டாரத்திற்கு தெரியப்படுத்தலாம். ஆனால் என்னைப் போல் அந்த வேலை, இந்த வேலை என குழம்பிப் போய் வீட்டில் உள்ளவர்களை மறந்து விடாதீர்…. சந்தேகம் புற்றுநோயை விட ஆபத்தானது!
புற்றுநோய் குணம் பற்றிய தகவல்கள் அறிய www.cancerdefeated.com மற்றும் www.kroisscancercenter.com.
யாரோ சொல்லித்தான் கமலாவை அங்கு சேர்த்தேன். பரிபூரண குணம் அடைந்தாரா?
நாங்கள் இங்கிலாந்து சென்று திரும்பும்போது எங்களை ஆஸ்திரியா வரவேண்டாம். சென்னை சென்று விடுங்கள். எனக்கு பரிபூரண குணமாகி விட்டது என்று கூறி விட்டு, உடனே பாஸ்கரை பார்க்க மும்பை திரும்பி விட்டாள் கமலா.
பின்னர் ஒருநாள் அறிவிப்பு ஏதுமின்றி கமலாவும் காவியாவுடன் என் வீட்டிற்கு வந்தபோது கமலாவின் முகத்தில் தான் எத்தனை சந்தோஷம்!
வந்த அவர்களை வசதியாக தங்க வைப்பதும் சாப்பிட அறுசுவை உணவும் தயாரித்தபடி மாலினி வெங்காயம் நறுக்கியதாலோ என்னவோ வடிந்த கண்ணீரை துடைத்தபடி படுபிசியாக சமையல் கட்டில் வேலையாக இருந்தாள்.
மாலினிக்கு இப்போது வேறு எந்த கவலையும் கிடையாது.