நடுநிலை தவறாமை

முருகன் சங்கக் கூட்டத்துக்கு வரலையா? நேரம் ஆச்சு சீக்கிரம் கிளம்பு என்று முருகனை அழைத்தார் ராமநாதன்.
அண்ணே நான் வரலை நீங்க போயிட்டு வாங்க என்று முருகன் கூறினான்
அட கடையை விட்டுட்டு வாப்பா… போயிட்டு வரலாம். கூட்டம் 1 மணி நேரத்தில் முடிச்சுடும் என்று ராமநாதன் கூறினார்.
அண்ணே இந்த கூட்டம் அடுத்த மாதம் நடக்கும் நம்ம வணிகர் சங்க கூட்டத்தை எப்படி நடத்தலாம்னு பேசி முடிவு எடுக்கிறதுக்காக நடக்குது.
இதுல போய் நாம என்ன சொல்ல போறோம். தலைவர் ஏற்கனவே எடுத்த முடிவை தான் இப்ப சொல்லப்போறாரு.
நம்ம ஏதாவது கருத்து சொன்னா அதை கேட்கவா போறாங்க.
இதுக்கு எதுக்கு நம்ம போகானும். நம்ம பொளப்ப பார்க்கலாம்…
நீங்க வேணும்னா போயிட்டு வாங்க. நான் வரலை என்று முருகன் கூறினார்.
முருகன் அப்படியெல்லாம் ஒதுங்க கூடாது. எந்த ஒரு விஷயம் ஆனாலும் நம்ம கருத்தை நம்ம சொல்லிக்கிட்ட இருக்கனும். அப்பதான் நமக்கு மரியாதை.
அதைவிட்டுட்டு இப்படி நமக்கு என்னன்னு இருந்தா. சங்கத்தில் நமக்கு மரியாதை இல்லாம போயிடும். அதனால் தான் சொல்றேன், கிளம்பி வா என்று ராமநாதன் மீண்டும் கூறினார்.
சரி அண்ணே உங்களுக்காக வறேன் என்று முருகனும் அந்த கூட்டத்திற்கு கிளம்பினார்.
முருகன் பாத்திரக்கடை உரிமையாளர்.
ராமநாதன் ஹார்ட்வேர் கடை உரிமையாளர்.
இவர்கள் அந்த பகுதி வணிகர் சங்க நிர்வாகிகளாக உள்ளனர்.
அடுத்த மாதம் வணிகர் சங்கத்தின் ஆண்டு விழா நடைபெறுவதையொட்டி, அதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டத்தை சங்க தலைவர் கூட்டியிருந்தார்.
அந்த கூட்டத்திற்கு தான் ராமநாதன் முருகனையும் அழைத்து சென்றார்.
கூட்டம் நடந்த இடத்தில் வணிகர் சங்க நிர்வாகிகள் கூடினார்கள்.
இந்த ஆண்டு ஆண்டு விழாவிற்கு யாரை சிறப்பு அழைப்பாளராக அழைப்பது என்று ஆலோசிக்கப்பட்டது.
நிர்வாகிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துக்களை கூறினார்கள்.
சிலர் அமைச்சரை அழைக்கலாம் என்றனர். சிலர் எம்.எல்.ஏ.வை அழைக்கலாம் என்றனர். சிலர் வணிக சங்க மாநில நிர்வாகிகளை அழைக்கலாம் என்றனர். சிலர் உள்ளூர் அரசியல் வாதிகள், அதிகாரிகளை அழைக்கலாம் அன்று ஆளு ஆளுக்கு ஒரு கருத்தை சொன்னார்கள்.
அதை போலவே அமைச்சர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரை அழைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தின் செயலாளர் நம்ம சங்கத்தின் முன்னாள் தலைவர் ரத்தினத்தையும் சிறப்பு விருந்தினராக கண்டிப்பாக அழைக்க வேண்டும் என்று கூறினார்.
உடனே கூட்டத்தின் ஒரு பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.
ரத்தினத்திற்கு வேண்டாத ஒருவர் எழுந்து நின்று…
என்னங்க பெரிய பெரிய ஆளுங்கள் எல்லாம் வருவாங்க அந்த இடத்தில் இவரையும் சிறப்பு விருந்தினரா அழைக்கலாம்னு சொல்றேங்க … அதெல்லாம் கூடாது என்றார்.
அண்ணே நீங்க உக்காருங்க அவர் எவ்வளவு பெரிய ஆளுன்னு தெரியும்ல…. அப்புறம் எதுக்கு இப்படி பேசுறேங்க என்று ராமநாதன் கூறினார்.
முருகனும் அதையே கூறினார்.
கூட்டத்தின் பெரும்பாலானவர்கள் ராமநாதனும், முருகனும் கூறியது சரிதான், ரத்தினத்தை கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்க வேண்டும் என்று கூறினர்.
அவர் தான் இந்த ஊரை விட்டே போயிட்டாரே அவரை எங்க போய் கூப்பிடுவது என்றார் ஒருவர்.
அவர் எங்க இருந்தா என்ன… நமது சங்கத்தின் சிறந்த வழிகாட்டி அவர்.
அவரை கூப்பிடுவது தான் நியாயம் என்று முருகன் மீண்டும் கூறினார்.
இப்படியாக ஒருவருக்கு ஒருவர் பேசினார்கள்.
ராமநாதனும், முருகன் உள்பட பெரும்பாலனவர்கள் கண்டிப்பாக ரத்தினத்தையும் அழைக்க வேண்டும் என்று கூறிவிட்டனர்.
இறுதியில் ரத்தினத்தையும் சிறப்பு விருந்தினராக அழைப்பது என்று அனைவரும் ஒருமித்த கருத்துடன் முடிவு எடுக்கப்பட்டது.
ரத்தினம் அந்த ஊரிலே மிகப்பெரிய வணிக நிறுவனம் நடத்தி வந்தவர். பெரும் பணக்காரர். அனைவரிடமும் எளிமையாக பழகக் கூடியவர்.
வணிகர் சங்கத்தின் தலைவராக இருந்தார். அதனால் சங்கத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்தார்.
அதைவிட சிறப்பு மிகவும் நியாயமானவர்.
அந்த ஊரில் யாருக்காவது ஏதாவது பிரச்சனை என்றால் அவரிடம் தான் அனைவரும் நியாயம் கேட்க செல்வார்கள்.
எந்த ஒரு பிரச்சனை என்றாலும் நியாயமாக பேசி பிரச்சனையை சுமூகமாக தீர்த்து வைப்பார்.
சொந்தகாரர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் என்று யாருக்காகவும் நியாயத்திலிருந்து விலக மாட்டார். அந்த அளவுக்கு நேர்மையானவர்.
எல்லோரிடமும் எளிமையாக பழகக் கூடியவர்.
அதனால் அந்த ஊரில் அவருக்கும், அவரது குடும்பத்திற்கும் தனி மரியாதை உண்டு.
அந்த ஊரில் உள்ள ஒரு அரசு பள்ளிக்கு சொந்தமான நிலம் ஒன்றை அரசியல் வாதி ஒருவர் ஆக்கிரமித்து அபகரிக்க முயற்சி செய்தான்.
அந்த விஷயம் ரத்தினத்தின் காதுகளுக்கு சென்றது.
உடனே ரத்தினம் அந்த விஷயத்தில் தலையிட்டு அந்த அரசியல்வாதியிடமிருந்து நிலத்தை மீட்டார்.
இப்படி சில சில பிரச்சனைகளில் அந்த ஊர் அரசியல் வாதிகள் மற்றும் ஒரு சிலரின் பகையை சம்பாதிக்க வேண்டிருந்தது.
அந்த சமயத்தில் அந்த ஊரில் உள்ள மிகபெரிய டிபார்ட்மெண்ட் நிறுவனத்தின் உரிமையாளரும், இவருடைய நண்பருமான கோவிந்தன் என்பவர் தனது நிறுவனத்திற்கு அருகில் சொந்தமாக சிறிய காய்கறி கடை நடத்தி வந்த முரளியை கடையை காலி செய்து, அந்த இடத்தையும் தனக்கே விற்கும் படி முரளியிடம் கேட்டார்.
முரளி அதற்கு மறுக்கவே, அவரை அடியாட்கள் மூலம் மிரட்டும் வேலையில் ஈடுபட்டார்.
இதனால் பயது போன முரளி உடனே இந்த விஷயத்தை ரத்தினத்திடம் கூறினார்.
முரளியின் தரப்பில் நியாயம் இருப்பதை உணர்ந்த ரத்தினம், தனது நண்பர் என்று கூட பார்க்காமல் கோவிந்தனிடம் நியாயம் கேட்டார்.
கோபம் அடைந்த கோவிந்தன் இந்த விஷயத்தில் ஒதுங்கிக் கொள்ளும்படி ரத்தினத்திடம் கூறினார்.
ஆனால் ரத்தினம் மறுத்துவிட்டார். மேலும் கோவிந்தனை எச்சரித்து, முரளி அந்த இடத்தில் தொடர்ந்து காய்கறி கடை நடத்த உறுதுணையாக இருந்தார்.
அதனால் கோவிந்தனுக்கு, ரத்தினத்தின் மீது கோபம் உண்டானது.
ரத்தினத்தின் மக்கள் செல்வாக்கை தடுக்கும் வேலையில் கோவிந்தன் ஈடுபட்டான்.
இதற்கெல்லாம் அஞ்சாமல் தொடர்ந்து நடுநிலை தவறாமல் செயல்பட்டு வந்தார் ரத்தினம்.
ஒரு கட்டத்தில் ரத்தினத்தின் எதிரிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து பெரிய சதி திட்டம் தீட்டி ரத்தினத்தின் தொழிலை முடக்கினர்.
மேலும் ரத்தினத்திற்கு பல்வேறு வழிகளில் தொல்லைகள் கொடுக்க தொடங்கினர்.
இதனால் தொழிலில் ரத்தினத்திற்கு நஷ்டம் ஏற்படத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் தனது சொத்துக்களை எல்லாம் இழந்த ரத்தினம் மிகவும் ஏழ்மை நிலைக்கு சென்றார்.
அவர் வகித்து வந்த பல்வேறு பொறுப்புகளில் இருந்து வெளியேறினார்.
தொழில் இல்லாத காரணத்தினால் சிறிது காலம் அந்த ஊரிலே கஷ்டப்பட்டு வந்த அவர், அதன் பின்னர் தனது குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார்.
அந்த நேரத்தில் ஆண்டு தோறும் நடக்கும் வணிகர் சங்க ஆண்டு விழா நடக்க இருந்தது.
இந்த கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக அவரை அழைக்கலாம் என்று நிர்வாகிகள் கூற பெரும்பாலானவர்கள் அதற்கு சம்மதம் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து ராமநாதன், முருகன் மற்றும் நிர்வாகிகள் ரத்தினத்தை நேரில் சந்தித்து அழைப்பதற்காக அவர் இருக்கும் இடத்திற்கு சென்றனர்.
இவர்களை பார்த்ததும் ரத்தினத்திற்கு மகிழ்ச்சியாக இருந்தது.
அவர்களை அன்புடன் வரவேற்றார்.
ராமநாதனும், முருகனும் தாங்கள் வந்த நோக்கத்தை கூறினர்.
உடனே ரத்தினம் நான் இப்போது இருக்கும் நிலையில் எந்த விழாவிலும் கலந்து கொள்ள விரும்பவில்லை என்று மறுத்தார்.
விழாவில் கலந்து கொள்ள ரத்தினம் மறுத்துதற்கு காரணம், பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் கலந்து கொள்ளும் அந்த விழாவில் தற்போது வசதியில்லாமல் ஏழ்மையில் இருக்கும் தான் கலந்து கொண்டால் தன்னை யாரும் மதிக்க மாட்டார்கள் என்று நினைத்திருந்தார்.
ராமநாதனும், முருகனும் விடுவதாக இல்லை. விழாவுக்கு வர சம்மதம் தெரிவித்தால் தான் இங்கிருந்து கிளம்புவோம் என்று கூறினர்.
மேலும் ரத்தினத்திற்கு இருக்கும் மரியாதையை விளக்கிக் கூறினர்.
தனுக்கு இந்த அளவுக்கு மரியாதை இருப்பதை உணர்ந்த பின்னர் ரத்தினம் விழாவிற்கு வர ரத்தினம் சம்மதித்தார்.
அதன்பின் நிர்வாகிகள் அங்கிருந்து கிளம்பி சென்று விழா ஏற்பாடுகளை தொடர்ந்தனர்.
விழா தொடங்கியது. சிறப்பு விருந்தினர்கள் வந்து மேடையில் அமர்ந்திருந்தனர்.
ரத்தினமும் குறிப்பிட்ட நேரத்திற்கு விழாவுக்கு வந்தார்.
நிகழ்ச்சி நடந்த மண்டபத்தின் வாசலில் ரத்தினத்திற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ராமநாதனும், முருகனும் சேர்ந்து ரத்தினத்தை விழா மேடைக்கு அழைத்து சென்றனர்.
அப்போது அந்த விழாவில் கலந்து கொண்டவர்கள் எழுந்து நின்று ரத்தினத்தை அன்புடன் வரவேற்றனர்.
ஏராளமானோர் ரத்தினத்தின் கையை பிடித்து நலம் விசாரித்து மரியாதை செய்தனர்.
அந்த வரவேற்பை பார்த்ததும் ராமநாதன் கண்களிலிருந்து கண்ணீர் வந்தது.
இதை பார்த்த கோவிந்தன் மற்றும் அவனது கூட்டாளிகள் கலக்கம் அடைந்தனர்.
செல்வத்தை இழந்த ரத்தினத்தின் மக்கள் செல்வாக்கு இன்னும் குறையவில்லை என்பதை உணர்ந்து கொண்டனர்.
அதற்கு காரணம் அவர் நடுவுநிலைமை தவறாமல் அறவழியில் நடந்ததே காரணம் என்பதை உணர்ந்து வெட்கப்பட்டனர்.
நாம் வறுமைக்கு தள்ளப்பட்டாலும், நாம் வாழ்ந்த அறவாழ்க்க்கையே நமக்கு இந்த அளவுக்கு மரியாதை கொடுத்துள்ளது என்று நினைத்து ரத்தினம் மகிழ்ச்சி அடைந்தார்.
துரை. சக்திவேல்