சைவப்புலி

“க்கூ…… க்கூ….. க்கீ……க்கீ…..
சரக்…… சரக்….. சரக்….சரக்…..
இந்தச் சங்கீதக்குரலின் சத்தங்கள் மரங்களடர்ந்த “உள்காடு” மலைக் கிராமத்தை ஒரு மர்மமாகவே வைத்திருந்தது. ஈரம் சுமந்து வரும் மேகாற்று – வெப்பத்தை வெளியேற்றும் கீ காற்று என வீசும் காற்றில் உள்காடு கிராமம் ஒரு விதமான உயிர்ப்போடு இருந்தது.
பேசும் குரலின் சத்தம் எங்கோ எதிரொலித்து பேசியவனிடமே திரும்பி வரும் மாயவித்தையும் அங்கு நடக்காமலில்லை புலி உறுமினாலும் சிங்கம் கர்ச்சித்தாலும் வெளியில் வரும் ஒலி மீண்டும் மிருகங்களின் முகத்திற்கே திரும்பி வருவதால் அவைகள் எல்லாம் ஒருவிதமான அச்சத்தோடே காடுகளில் உலவிக்
கொண்டிருக்கும் .
எண்ணி இருபது வீடுகள் கூட இடம்பெறாத உள்காடு கிராமத்திற்கு முரளி வந்தார். அவரின் கன்னங்களை உரசி உயிருக்குள் குளிரூட்டியது ஈரமேகங்கள். இரண்டு கைகளையும் பரபரவெனத் தேய்த்து சூடேற்றி கழுத்துக்கும் கன்னத்திற்கும் உள்ளங்கைச்சூடு ஏற்றினார்.
கிளைகளை ஆட்டிய மரங்கள், தலை குனிந்து தரைதொட்டு அவரை வரவேற்றது.
” யப்பா என்னவொரு கிராமம்,
அடடா, சொர்க்கம் எங்க இருக்குன்னு தேடிட்டு இருக்கோம்; இந்த மண்ணுல இப்படியொரு அதிசயத்த பாக்க மறந்திட்டமே. பூமிப் பரப்பில் பூத்திருந்த உள்காடு மலைக்கிராமப் பூக்களைப் பார்த்து ஆனந்தம் அளந்தார் முரளி மனித வாடையை விட அங்கு மிருக வாடையே மிஞ்சி நின்றது.
ஏய் பளியா! ……. என்று கூவிய ஒருவனின் கூக்குரல் வெட்டவெளியில் தூரப்போய்த் தொலைந்து பளியா……
பளியா ….. பளியா…. என்ற நிறைய பதிப்பாக கூப்பிட்டவன் செவிகளுக்கே திரும்பி வந்தன எதிரொலித்த குரலை முரளியும் கேட்டார், பளியனா? இவனத்தான நாமளும் தேடி வந்தோம் . புருவங்கள் நெற்றிக்கு மேலே நிமிர்ந்து, மேல்தலையை முத்தமிட்டு மீண்டும் இமைகளுக்கு மேலே வந்து இடம் பெற்றன.
” ஏலேய் பளியா!
என்ற மறுகுரலெடுக்கும் போது முரளி கூப்பிட்டவன் முன்னால் வந்து நின்றார்.
என்ன சாமி ஏதாவது வேணுமா? மலைக்கிராம முரட்டு மொழியில் முப்பத்தி ரெண்டு பற்களும் முன்னுக்கு வரக் கேட்டான் முள்ளிடுக்கி.
“இப்ப நீங்க கூப்பிட்டீங்களே பளியன் . அவனத்தான் பாக்க வந்தேன்.
“ஓ! அப்பிடியா சாமி, அவன் ராத்திரி வேட்டைக்கு போனான். இன்னும் திரும்பலயே என்ன வெவரம்னு தெரிஞ்சுக்கலாமா? கரைப்பற்களில் விழுந்த வார்த்தைகளை கரையாமல் சொன்னான் முள்ளிடுக்கி:
ஒரு மிருகம் கேட்டிருந்தேன் அதான்.
“ஓ ….. அது நீங்க தானா? அதுக்குத்தான் சாமி காடுமேடெல்லாம் அலஞ்சிட்டு இருக்கான்.
“கெடைக்குமா?
“கெடைக்குமாவா ? பளியன் கால் வச்சா காரியத்த முடிக்காம விடமாட்டான். வந்தா பொருளோட தான்
வருவான் . இல்ல எத்தன நாள் ஆனாலும் இந்தச் செங்காட்டுக்குள்ளயே தான் திரிவான் சாமி. ஒக்காருங்க என்று ஒரு மர நாற்காலியை காட்ட ஈர மண் கிழிய சர்ரென இழுத்தான் முள்ளிடுக்கி.
‘ஏதாவது காப்பித்தண்ணி குடிக்கிறீங்களா?’
“வேணாம்.”
“சாப்பிடுங்க சாமி” என்ற முள்ளிடுக்கி. வெளியில் புகையும் விறகு அடுப்பை நோக்கி விரைந்தான். மழை மேகங்களுக்கு ஊடே புகை மேகங்களும் போய் நூலாய் நுழைந்து கொண்டிருந்தது. கொதிப்பேறிக் கிடந்த கடுங்காப்பி ஒரு விதமான இனிப்பு வாசத்தோடு காற்றில் கரைந்து கொண்டிருந்தது. மரநாற்காலியில் உட்கார்ந்த முரளி கழுத்தைத் தூக்கி வானம் பார்த்தார். மரங்களடர்ந்த வெட்டவெளிக்கு மேலே பஞ்சு மேகங்கள் மிதந்து கொண்டிருந்தன.
ப்பூ….. ப்பூ… என விறகு அடுப்பை ஊதிய முள்ளிடுக்கி அங்கிருந்த கருப்பட்டியைத் தட்டிப் போட்டு காபி தயாரித்தான்.
“தம்பி”
“சாமி”
“கிராமத்து மக்கள் எல்லாம் எங்க போயிட்டாங்க. ஒரு ஆளையும் கண்ல பாக்க முடியலையே
காட்டுக்குள்ள போயிருப்பாங்க ” “சாமி”
“மொத்தம் எத்தன பேரு இங்க இருக்கீங்க’’?
“எண்ணிச் சொன்னா இருபது பேரு இருப்போம்ங்க”
“அம்புட்டுத்தான் ஆளுகளா?”
“சாமி, பேசுற மனுசங்க அம்புட்டுத்தான். பேசாத சீவராசிகள் இங்க நெறயா இருக்கு சாமி என்ற படியே ஈயத்தம்ளரில் ஆவி பறக்கப் பறக்க காபி கொடுத்தான். முள்ளிடுக்கி கையில் கடுங்காப்பி தம்ளரை வாங்கிய முரளிக்கு அது இதமாயிருந்தது. வீசும் பனிக்காற்றில் இறுகிப் போயிருந்த கன்னத்தில் ஈயத் தம்ளரை இதமாக வைத்தார். இதமான சூடு பட்டதும் கன்னம் கொஞ்சம் உயிர்ப்பானது.
சலசலவென ஏதோ சத்தம் கேட்க” பளியன் வந்திட்டான், பளியன் வந்திட்டான் என்று முள்ளிடுக்கி கத்தியபோது பட்டுத்தெறித்த அவனின் குரலோடு சில பறவைகளின் குரலும் சேர்ந்து எதிரொலித்தன.
முகத்தை மறைக்கும் தலை முடியை கொஞ்சம் ஒதுக்கிய போது, அப்பவும் முகம் முழுவதும் முடியாகவே இருந்தான் பளியன். பரட்டைச் செடிக்குக் கைகால் முளைத்தது போலவே நடந்து வந்தான். அவன் கையில் ஒரு மிருகக்குழந்தை பொசுக் ….. பொசுக் என கண்களை மூடி மூடித் திறந்து கொண்டிருந்தது.
“முரளிக்கு மூச்சு முட்டியது. பளியன் கையிலிருந்த வரிப்புலியைப் பார்த்த பிறகு தான் அவருக்கு உயிரே வந்தது.
“யப்பா, இது எவ்வளவு நாள் கனவு இன்னைக்குத் தான் நமக்கு கெடச்சிருக்கு. பளியா சீக்கிரம் கொண்டு
வா ;என்கிட்ட குடுடா என்று கூப்பிட்ட முரளியின் உள் நெஞ்சு பளியனை நோக்கி முன்னேறியது.
“க்க்க்…. கக்க்கக்க்… ” என்ற கனத்த சிரிப்போடு முரளியிடம் வந்தான் பளியன்:
சாமி நீ கேட்டது இது தான?
“ஆமா” என்று ஆசையோடு தலையாட்டினார் முரளி.
“இந்தா சாமி ஒன்னோட புள்ள என்று இரண்டு கைகளிலும் ஏந்தி அந்த வரிப்புலிக்குட்டியை முரளியின் கையில் வாரி வழங்கினான் பளியன். ஆசையோடு அதைவாங்கிய போது முரளியின் சந்தோசம் அவர் முகத்தில் முகாமிட்டிருந்தது.
பளியா …. எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு.
“சாமி மனுசங்களோட சந்தோசம் தான் வாழ்க்கை . ஒரு உசுரு இன்னொரு உசுர உசுரா நெனைக்கிறது தப்பில்ல சாமி.
“இந்தப்புலிக்குட்டிய வாங்கிட்டு போயி என்ன பண்ணப் போற சாமி.’’
பளியனின் பளிச்சென்ற சொல் முரளியை என்னவோ செய்தது.
“பளியா இதுதான் என்னோட கொழந்த, ரொம்ப நாளா ஒரு புலிக்குட்டிய எடுத்து வளக்கணும்னு
ஆசப்பட்டேன் ; முடியலப்பா நானும் எங்கெங்கயோ தேடியலைச்சேன். கெடைக்கல சுத்தி விசாரிச்சதுல ஒம் பேரத்தான் எல்லாம் சொன்னாங்க. ஒன்கிட்ட சொன்னேன் ; இந்தா காரியம் கைமேல கூடி வந்திருச்சு . இப்பத்தான் என்னோட உசுரு என்கிட்ட இருக்கு. முரளியின் குரல் பட்டபோது புலிக்குட்டி பொசுக் பொசுக்கென கண் திறந்து மூடியது.
“சாமி இந்தக்காட்டுக்கு எப்படி வந்தீங்க?”
பஸ், காரு, வண்டின்னு கண்டுபிடிச்சு கண்டுபிடிச்சு இந்தக் காட்டுக்கு வந்தேன் என்ற முரளி பையிலிருந்த பணத்தை பளியனிடம் அள்ளிக்கொடுத்து விட்டு அந்தக் கருங்காட்டை விட்டு மெல்ல நகர்ந்தார்.
காடு அதிரக் கத்தியது; குட்டியைத் தொலைத்த தாய்ப்புலி. உடன் சேர்ந்து கத்தினஅதே காட்டு மிருகங்கள் .
சுரந்த பால்க்காம்பை முள்ளில் குத்திக் கீறியது கோரைப் பற்களைக்கொண்டு வீசும் காற்று. குத்திக்கிழித்ததும் ரணம் கொண்ட போராட்டம் அதன் முகத்தில் முகாமிட்டிருந்தது. புலிக் குட்டியை வாங்கிய முரளி காடு விட்டுக் கடந்தார். அவர் காலடித் தடத்தை மோப்பம் பிடித்தன சில மிருகங்கள்.
முரளி காட்டு வழியே நடந்து இன்னொரு இடம் தொடும் போது காட்டின் கடைசிக் காற்றை புலிக்குட்டி தன் மீசையின் வழியே நுகர்ந்து மூக்கு வழியே வெளித்தள்ளியது.
முரளி உள் காட்டிலிருந்து அவரின் ஊருக்கு வந்தார் வரிப்புலியை வாரியணைத்து கொண்டே வீட்டிற்குள் நுழைந்தார். ஆள் அரவமற்ற ஒற்றை வீடு உறவினர்களை உதறித்தள்ளி விட்டு ஒண்டிக்கட்டையாய் வாழும் தனி மனிதன்.
முரளி என்ன கொண்டு வந்திருக்க சுற்றியிருப்பவர்கள் சுற்றறிக்கை வாசித்து கேட்டனர்.
“ம் சொல்லணுமா?”
“சொன்னா நல்லது தான?”
“புலிக்குட்டி’’ என்று முரளி சொன்ன போது
ஐயய்யோ புலிக்குட்டியா?’
“ஆமா, ஏன் பயப்படுறீங்க?
“புலின்னா பயமா ?”
‘‘பயமாவா காட்டுல வாழ்ற மிருகத்தப் போயி வீட்டுல கொண்டு வந்து எப்படி வளக்க முடியும்? வினாக்கள் பறந்தன. “விடைகளை கேட்ட திசைகளிலெல்லாம் விட்டெறிந்தார்.
புலின்னா கறி சாப்பிடுங்கிற பயமா?
ஆமா பெறகு புலியென்ன புல்லா திங்கும். கறிதான திங்கும். அதுவொரு மாமிச திங்கிற மிருகம் தான? கேள்வி கேட்டவர்கள், எல்லாம் முரளியை முகாமிட்டு புகார் மனுக்களை அவர் முன்னால் வீசினார்கள் . புன் முறுவலோடு அத்தனைக்கும் பதில் சொன்னார் முரளி
‘‘நிச்சயமா என்னோட புலி மாமிசம் திங்காது அத நான் ஒரு
சைவப்புலியாவே வளர்க்க போறேன் ’’ என்று சூளுரைத்தார்.
“என்னது சைவப்புலியாவா?’’
ஆமா நான் வளத்துக் காட்டுறேன். சபதமேற்று புலியை வளர்க்க ஆரம்பித்தார்.
அன்று முதல் முரளியின் படுக்கையில் ஒன்றாய்கிடந்தது குட்டிப்புலி
பால் புட்டியில் பாலூற்றிக் கொடுத்தார்.தன் சின்ன வாய் திறந்து பச் ….. பச்…. பச்… குடிக்க ஆரம்பித்தது. அதன் வரிவிழுந்த தலையை லாவகமாகத் தடவிக் கொடுத்தார். தன் வீரக்காதுகளை விறைப்பாக மேலே தூக்கி ஈட்டிக் கண்களைக் கொண்டு முரளியை அப்படிப் பார்த்தது.
“என்னடா செல்லம் அப்படிப்பாக்குற? பால்குடி பால்குடி….. செல்லப் பேச்சு பேசியபடியே அதன் சின்ன வாயில் பாலூட்டினார்.
மடியில் கிடந்த புலிக்குட்டி கொஞ்சம் மல்லாந்து படுத்து தன் அன்பை முரளியிடம் வெளிப்படுத்தியது. நாட்கள் நகர்ந்தன. மாதங்கள் ஓடின. புலி வளர்ந்தது .
வளர்ந்த புலிக்குட்டிக்கு “வீரா” என்று பெயர் சூட்டியிருந்தார்.
‘வீரா’ என முரளி கூப்பிடும் குரல் கேட்டு எங்கிருந்தாலும் விருட்டென ஓடிவந்து அவர் முன்னால் நிற்கும். முரளியின் பின்னால் ஒரு நாய் போலவே வாலாட்டித் திரியும்.
“ஏய்யா முரளி, இவ்வளவு பெரிய புலிய வீட்டுல வளத்திட்டு இருக்கியே, யாரையாவது அடிச்சு தின்னுடப் போகுதுப்பா’’
“யோவ் என்னோட புலி சைவப்புலியாக்கும். இது ரத்தவாடை பாக்காது. மாமிசம் ஆகாது. பயப்படாதீங்க’’ என்று முரளி சொன்னாலும் யாரும் நம்பாமல் அவரை விட்டு நழுவியே இருந்தனர்.
அக்கம் பக்கம் உள்ளவர்கள் புகார் தெரிவித்தும் சைவப்புலியைக் கண்ட ப்ளுகிராஸ் காரர்கள் கூட பெரிதாக எதுவும் சொல்ல வில்லை புகார் கடிதங்கள் குவிந்தாலும் சைவப்புலி சாது ஏதும் செய்யா தென்றே சான்றிதழ் கொடுத்தார்கள் மிருக நல ஆர்வலர்கள்
காய்கறிகள் , பழங்கள் என்றே தின்று தீர்த்தது புலி. ஊர் உலகில் உள்ளவர்களுக்கெல்லாம் இந்த ‘சைவப்புலி’ ஒரு காட்சிப் பொருளானது.
வந்துவேடிக்கை பார்ப்பவர்களின் பட்டியல் தினமும் கூடிக்கொண்டே போனது. அந்தப் பகுதி முழுவதும் “சைவப்புலி முரளி” என்றே சொல்லப்பட்டார் முரளி
எல்லாம் பழக்கம் தாங்க, நாம எப்படி மொதல்ல இருந்து வாழ்க்கைய நகத்துறமோ அது தான் கடைசி வரைக்கும் ஒட்டிட்டு வரும். இப்பப்பாருங்க மாமிசம் சாப்பிடுற புலியக் கூட நம்ம முரளி காய்கறி பழங்கள் சாப்பிடுற சைவப்புலியா மாத்திப்புட்டாரே. எல்லாம் நம்ம பழக்கத்தில இருந்து தான் வருது என்று ஊர் உலகமே உச்சி மெச்சிக் கொண்டாடியது.
ஒரு நாள் இரவு
“டேய் வீரா, என்று முரளி அழைத்த போது அகலமாகத் தன் சைவ வாயைத்திறந்து ஏதோ சொல்லி தன் அன்பை அதன் மொழியில் ஆமோதித்தது.
“வா சாப்பிடு”, என்று தன் அருகே கூப்பிட்டு காய்களை நறுக்கிக் கொண்டிருந்தார்.
பக்…..பக்…..பக்கென…. காய்கறிகளைக் கவ்வி தன் சைவப் பற்களைக் கொண்டு “கரக் கரக்” என்று மென்று தின்று கொண்டிருந்தது.
‘வீரா நல்லா சாப்பிடுடா’ அதன் தொங்கும் தாடைச் சதையைப் பிடித்துத் தொட்டுப்பார்த்து “ப்ரியம்” பேசினார் முரளி.
புலி தன் கடை வாயில் நுரை வழிய வழிய தின்னு கொண்டிருந்தது. காயை நறுக்கிக் கொண்டும். பேசிக் கொண்டுமிருந்த முரளியின் கையில் பட்டன கத்தி ஆழமாய் இறங்கியது. வெட்டிய வேகத்தில் கையிலிருந்து குபுகுபுவென ரத்தம் பீறிட்டது.
காய்கறிகளைத்தின்று கொண்டிருந்த வீரா, மெல்ல எழுந்து போய் தன் எஜமானனின் ரத்தத்தை தன் சைவ நாக்கால் நக்கியது. அவ்வளவு தான் இது வரையிலும் வீரா சாப்பிடாத சுவையில் அது இருந்தது. சப்….. சப்…. . என முரளியின் கையில் வழியும் ரத்ததை நக்கிய “வீரா” படாரென்று பாய்ந்து அவரின் குரல் வளையைக் கவ்வியது
“ஐயய்யோ, வேணாம், வேணாம் என்னைய விட்டுரு என்னைய விட்டுரு கதறினார். கெஞ்சினார், அந்த சைவப் புலி முரளியை விடவே இல்லை. அடைக்கப்பட்ட வீட்டிற்குள் முரளியின் சத்தம் அறையை விட்டு வெளியே வரவே இல்லை .கொஞ்ச நேரத்தில் மொத்தமும் முடிந்தது. முரளி எலும்புக் கூடானார்.
சைவப்புலியின் உதடுகளில் முரளியின் ரத்தம் ஒட்டியிருந்தது. தன் அசைவ நாக்கால் அதை மேலும் கீழும் ஒட்டியொட்டி எடுத்தது. காய்கறிகள் கீழே சிதறிக்கிடந்தன. ஒன்றைக் கூட அது திங்கவில்லை. மேலும் மேலும் முரளி போல மனிதர்களின் ரத்தம் சதை வேண்டுமென்று உறுமியது. அதற்குள் எப்போதுமில்லாத ஒரு தினவு முளைத்தது. இப்போது அதன் நடையில் ரௌத்திரம் தெரிந்தது.
பூட்டிய கதவை முட்டி முட்டி வெளியே வர எத்தனித்தது. ஓங்காரமிட்டுக் கத்தியது.
சுற்றியிருப்பவர்கள் சைவப்புலியின் செல்லச்சிணுங்கல் என்று சத்தம் செய்யாதிருந்தார்கள். ஓரிடத்தில் இல்லாமல் அங்குமிங்கும் நடமாடிக் கொண்டிருந்தது.
பெரிய குரலில் உறுமிய வேகத்தில் தலை நிமிர்ந்து பார்த்தது முரளியும் புலியும் சேர்ந்தெடுத்த ஒரு புகைப்படம் சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்தது. அதைப்பார்த்த புலி அந்தப் புகைப்படத்தை நோக்கிக் தாவியது புகைப்படத்திலிருந்த முரளியின் உருவத்தைத் தன் கூரிய நகத்தால் பிராண்டியது. தன் கோரப்பற்களால் கீறியது. வெறி கொண்டு அதைக் கடித்துக்குதற ஆரம்பித்தது.
சைவப்புலி அசைவமானது.
ராஜா செல்லமுத்து