வாய்தா

” சுந்தர் நீங்க எப்பிடிப் பேசணும்னு தெரியும்ல”
“தெரியாது மேடம்,
“சொல்றேன் கேட்டுக்கங்க”
“ம், நீங்க வாதி. பிரதிவாதி எங்க நிப்பான்”
தெரியலையே மேடம்
ஒங்க எதித்தாப்பில  நிப்பான்
“ம்”
நீங்க என்ன பண்ணனும்
“தெரியலையே”
சொல்லித்தாரேன் கேட்டுக்க”
“ம்”
“ஒங்க பேரச் சொல்லி கூப்பிடு வாங்க
“ம்”
நீங்க போயி என்ன பண்ணனும். கூண்டுல நிக்கனும்”
“சரிங்க மேடம்
“அப்பெறம் நீங்க தான் திருடுனீங்களா?
“இல்லை”
“ஆமா”
“அப்படித்தான் சொல்லணும்”
“சரி”
நீங்க உண்மையிலேயே
திருடுனீங்களா?
இல்லையே மேடம்,
பெறகு எப்படி ஒங்க பேரச் செத்தானுங்க.
சும்மா அங்க நின்னு வேடிக்கை பாத்துட்டு நின்னுருந்தேன்
“அடப்பாவிகளா?
வேடிக்கை பாத்திட்டு இருந்தவனையா குற்றவாளி ஆக்கிட்டானுக.
ஆமா மேடம்
சரி போகட்டும். இப்ப நீ நாங்க சொல்றது மாதிரியே சொல்லுங்க.
சரி திருடுறத பாக்கறப்ப எங்க இருந்தீங்க .
அன்னைக்கு நைட்டு வேல முடிச்சிட்டு வந்திட்டு இருந்தேன். அப்பதான் அந்த கடைக்குள்ள இருந்த ரெண்டு பேரு வெளிய ஓடி வந்தானுக. இவனுக என்னடா இப்படி ஓடுறானுகளேன்னு நின்னு பாத்திட்டு இருந்தேன்.
அந்தப் பக்கமா வந்த ரெண்டுபேரு கடையும் ஒடஞ்சு கெடக்கு. நானும் அங்கன நிக்கிறனா அம்புட்டுத் தான். இது எப்பிடி ஒடஞ்சு கெடக்குன்னு கேட்டானுக. தெரியலன்னு சொன்னேன். அம்புட்டுத்தான் மேடம். ஒனக்கு தெரியாமயாடா இது நடந்துச்சுன்னு என்னைய புடிச்சிட்டு வந்து நிப்பாட்டிட்டானுக என்று அழாத குறையாகச் சொன்னான் சுந்தர் .
அப்படியா செஞ்சானுக. விடமாட்டேன். நீங்க ஒண்ணும் கவலப்பாடதிங்க ;நாங்க இருக்கோம்.
சரி போயி ரெண்டு சிக்கன் ரைஸ் வாங்கிட்டு வாங்க.
ஓகே மேடம் என்ற படியே சுந்தர் வெளியே சென்றான்.
தம்பிய தப்பிக்க வச்சுருவமா? என்றான் தியாகு  பெண்ணின் கணவன்
ம்… பாப்பமே என்றபடியே இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
சிறிது நேரத்தில் இரண்டு கைகளிலும் இரண்டு சிக்கன் ரைஸை ஏற்றி வந்தான் சுந்தர்.
தேங்யூ ….. தேங்யூ என்ற படியே இருவரும் ரைஸை வாங்கினார்.
சுந்தர் கொஞ்சம் வெளியே இருக்கீங்களா?
” ஓகே மேடம் என்ற சுந்தர் வெளியே வந்தான்.
இரண்டு பேரும் சிக்கன் ரைஸில் சிவாகித்துக் கிடந்தார்கள் .
சுந்தர் சாப்பிட்டீங்களா? என்ற குரல் கண்ணாடிக் கதவைத் தாண்டி வெளியே கேட்டது.
“சாப்பிட்டீங்க. நான் காஞ்சு போன ரெண்டு இட்லிய தின்னுட்டு வந்திருக்கேன். ஒங்களுக்கு சிக்கன் ரைஸா? மனுதுக்குள் மறுகினான்.
இரண்டு பேரும் சில்லி சிக்கனில் மூழ்கித் திளைத்தார்கள்.
ஏவ்…. ஏவ்  என்ற பெரும் ஏப்பத்திற்குப்பின் அழைக்கப்பட்டான் சுந்தர்
மேடம்,
“வாங்க, இப்படி வாங்க’’
“ஒக்காருங்க “
சொன்னது சரியா?
“ஓகே மேடம்,
நான் தான் ஒங்களுக்கு வாதாடுற. எங்க வீட்டுக்காரரு தான் எதிரிக்கு வாதாடுவார் .
இப்ப நாங்க கேக்குறோம் .
நீங்க திருடு போன எடத்தில எங்க இருந்தீங்க
திருடு போன எடத்துக்கு பக்கத்துல இருந்தேன்
எத்தன மணிக்கு இது நடந்துச்சு?
ராத்திரி பதினோறு மணிக்கு மேல
“ம்” அப்ப என்ன டிரஸ் போட்டிருந்தீங்க
“செகப்பு”
“இத மட்டும் சொல்லுங்க
போதும்
“ஓகே மேடம் “
” இப்ப எங்க வீட்டுக்காரரு கேள்வி கேப்பாரு,
நைட்டு பதினோரு மணிக்கு மேல அங்க ஏன் போனீங்க
வேல முடிஞ்சு வந்தேன்
தெனமும் அப்படித்தான் வருவீங்களா?
“ஆமா”
“திருடுனவங்க  ஒங்களுக்கு தெரிஞ்சவங்களா?
அவங்க யாருன்னே எனக்குத் தெரியாது
குட்
திருடுனவங்கள ஒங்கள அடையாளம் காட்ட முடியுமா?
முடியாது
ஓகே ஒங்கள வெளியே நிக்க வச்சுட்டுத்தான் இவங்க திருடப்போனாங்கன்னு சொன்னா சரியா?
இல்ல,
“குட்” என்றான் எதிர்வாதம் செய்தவன்
ஓ.கே …. நாளைக்கு நீங்க கோர்ட்டுக்கு போகலாம்.
கொஞ்சம் சொல்லித்தாரேன். நீங்க மனசில வச்சுக்கங்க
ஒகேங்க
சட்ட போட்டுட்டு போங்க.
சரிங்க
மேல்பட்டன போடனும்
சரி கூண்டுல இருக்கிற கம்ப சினிமா படத்தில மாதிரியெல்லாம் பிடிச்சி நிக்க கூடாது.
ஓ.கே
குறிப்பா நீதிபதி முன்னாடி தண்ணி குடிக்கக் கூடாது
ஏன் சார் தண்ணி குடிக்கிறது தப்பா?
நீதிபதி முன்னாடி தண்ணி குடிக்கிறது அவங்கள அவ மரியாத பண்ணுனதா அர்த்தம்
தண்ணி குடிக்கிறது தப்பு அவமரியாதையா? நொந்து கொண்டே மறுநாள் கோர்ட்டுக்கு சென்றான் சுந்தர்.
எல்லாம் சரியாகவே நடந்தது.
எதிர் வக்கீல் கேள்விகளுக்கு சரியாகவே பதில் சொன்னான் சுந்தர்
தண்ணீர் தவித்தாலும் அது  அவமானமின்னு குடிக்காமலே இருந்தான்.
கடைசியில் தீர்ப்பு சொன்னார்கள்.
“சுந்தருக்கு திருடர்களுக்கும் தொடர்பு இருக்கிறது. சுந்தரை நன்றாக விசாரிக்கவும் என்று தீர்ப்பு கூறுகிறேன் என்று உத்தரவு வந்தது.
டேய் நான் திருடன் இல்லடா. கத்தினான் .
அது யார் காதிலும் ஏறவில்லை.
தம்பி நீங்க ஒண்ணும் கவலப்படாதீங்க. அடுத்த வாய்தாவுல பாத்துக்கிறோம். நைட்டு ரெண்டு சிக்கன் ரைஸோட வாங்க என்றாள் அந்த பெண் .
என்னது மறுபடியும் சிக்கன் ரைஸா?
சுந்தருக்கு தலை சுற்றியது.

ராஜா செல்லமுத்து