காலத்தால் செய்த உதவி

காலை நேரம் திருமண மண்டபத்தில் திருமண நிகழ்ச்சிக்கான வேலைகள் வேக வேகமாக நடந்து கொண்டிருந்தன.
என்ன சமையல் காரரே டிபன் ரெடியாயிடுச்சா…. திருமணத்துக்கு விருந்தினர்கள் வர ஆரம்பிச்சுட்டாங்க…. வந்தவங்களுக்கு முதலில் காப்பியை கொடுக்க சொல்லுங்க… என்ற திருமண வேலையில் பரபரப்பாக இருந்தார் மனோகர்.
அப்போது, என்னங்க மணப்பெண் அலங்காரத்துக்கு கேட்ட பூ இன்னும் வரலை … கொஞ்சம் பூக்காரனுக்கு போன் போட்டு அவனை சீக்கிரம் வரச்சொல்லுங்க என்று வேக வேகமாக கத்திக் கொண்டே வந்தாள் அவரது மனைவி சரோஜா.
அட என்னம்மா… இப்ப வந்து சொல்ற… அதை அப்பவே சொல்லக்கூடாதா…
கடைசி நேரத்தில் வந்து பூ வரலைன்னு சொல்ற… என்று கூறிய மனோகர் தனது செல்போனை எடுத்து பூக்காரனுக்கு போன் போட்டு அவனை சீக்கிரம் வரச் சொன்னார்.
மனோகரனும் அவரது மனைவி சரோஜாவும் ஒருவித பரபரப்புடன் அங்கும் இங்கும் ஓடிய படி திருமண வேலைகளை செய்து கொண்டிருந்தனர்.
விருந்தினர்களும் வரத் தொடங்கினார்.
என்னங்க கல்யாணத்துக்கு விருந்தினர்கள் வர ஆரம்பிச்சுட்டாங்க. இந்த தேவி அக்காவையும் காணோம்… மோகன் அண்ணனையும் காணோம் ; எங்க போனாங்கன்னு தெரியலையே என்றபடி சரோஜா அங்கும் இங்கும் தேடி பார்த்தார்.
அப்போது மணமகள் அறையில் தேவி அக்கா நின்று கொண்டு இருப்பதை பார்த்த சரோஜா வேகமாக அங்கு சென்று…
தேவி அக்கா இங்க என்ன செய்றீங்க… எங்க அண்ணனை காணோம். நீங்க 2 பேரும் விருந்தினர்களை வரவேற்க மண்டப வாசலுக்கு போங்க. இங்குள்ள வேலைகளை நாங்க பார்த்துகிறோம் என்று உரிமையாக கூறினார்.
சரி சரோஜா நான் போறேன் என்ற தேவி அக்கா… தனது கணவர் மோகனை தேடினார்.
அப்போது தேவி அக்கா, சரோஜாவை பார்த்து…
சரோஜா நீ போய் காபி குடிம்மா… தம்பி மனோகர் காப்பி குடிச்சானா கேளு. அவன் குடிக்கலைன்னா அவனையும் காபி குடிக்க சொல்லு.
காலையிலிருந்து நீங்க 2 பேரும் கல்யாண வேலை செஞ்சுக்கிட்டே இருக்கீங்க.
இந்த வேலை எல்லாம் நாங்க செய்ய வேண்டியது.
ஆனா எங்களை எந்த வேலையும் செய்யக்கூடாதுன்னு சொல்லிட்டு, நீயும் தம்பியும் காலையிலிருந்து அலைஞ்சுக்கிட்டே இருக்கீங்க என்று கூறினார் தேவி அக்கா.
அட அக்கா யார் செஞ்சா என்ன… நீங்க அண்ணனை கூட்டிட்டு மண்டப வாசலுக்கு போங்க என்று கூறினார் சரோஜா.
அதைத் தொடர்ந்து தேவி அக்கா வேகமாக தனது கணவர் மோகனை அழைத்துக் கொண்டு மண்டப வாசலுக்கு சென்றார்.
என்னங்க இந்த மனோகர் தம்பியும் சரோஜாவும் காபி ஏதாவது குடிஞ்சாங்களான்னு தெரியலை…. காலையிலிருந்து கல்யாண வேலை பார்த்துக்கிட்டு இருங்காங்க என்று கூறிக் கொண்டிருக்கையில் விருந்தினர்கள் அடுத்தடுத்து வரத் தொடங்கினர்.
அவர்களை தேவி அக்காவும் அவரது கணவர் மனோகரனும் வரவேற்க தொடங்கினர்.
சரோஜா வேகமாக மணமகள் அறைக்கு சென்று, மணமகள் செல்வியை அலங்காரம் செய்து கொண்டிருந்த பெண்களை வேகவேகமாக அலங்காரம் செய்யும் படி கூறினார்.
மனோகரும் சமையல் அறைக்கும் மணமேடைக்கும் அலைந்து கொண்டிருந்தார்.
திருமணத்திற்கு வந்த தேவி அக்காவின் உறவினர்கள் எல்லாம் ஆங்காங்கே கூடி உட்கார்ந்து தங்களது குடும்ப கதையை பேசிக் கொண்டிருந்தனர்.
மனோகரனும் சரோஜாவும் பரபரப்பாக இருப்பதை பார்த்த அவர்கள்,
இது தேவி அக்காவீட்டு கல்யாணமான்னு சந்தேகம் வருது. அந்த அளவுக்கு இவங்க தான் கல்யாண வேலையில் இருக்காங்க.
பரவாயில்லை தேவி அக்காவுக்கு இப்படி ஒரு ஆள் கிடைச்சுட்டாங்க. இல்லைன்னா வயசான காலத்தில் அவங்களால இந்த வேலை எல்லாம் செய்ய முடியாது என்று அவர்களுக்குள் பேசினர்.
தேவி அக்காவின் ஒரே மகள் செல்விக்கு தான் இன்று திருமணம்.
திருமண வேலைகளை எல்லாம் தேவி அக்காவும் அவரது கணவர் மோகனும் தான் செய்ய வேண்டும்.
வயதான காரணத்தினால் அவர்களால் முழு வேலையையும் எடுத்து செய்ய முடியாது.
அதனால் எதிர் வீட்டில் வசிக்கும் மனோகரும் அவரது மனைவி சரோஜாவும் தான் கல்யாண வேலைகளை கவனித்துக் கொண்டனர்.
தங்களது வீட்டு திருமண நிகழ்ச்சி போன்றே எல்லா வேலைகளையும் எடுத்து செய்தனர்.
மணமகன் வீட்டாரும் மண்டபத்திற்கு வந்தனர்.
திருமணமும் நல்லப்படியாக நடந்தது.
அதன்பின் வந்த விருந்தினர்கள் மணமக்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டு இருந்தனர்.
சாப்பாட்டு அறையில் விருந்தும் தொடங்கியது.
மனோகரன் சாப்பாட்டு அறையில் நின்று கொண்டு சமையல் காரர்களை வேலை வாங்கிக் கொண்டு இருந்தார்.
சரோஜா, தேவி அக்காவின் உறவினர்களுடன் சேர்ந்து கொண்டு மணமக்களுக்கான மற்ற சம்பிரதாய வேலைகளை கவனித்துக் கொண்டார்.
சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்து மணமக்கள் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
தேவி அக்கா வீட்டில் மணமக்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு அதன் பின் மணமக்கள் மாப்பிள்ளை வீட்டுக் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அப்போது தேவி அக்காவும் மனோகரனும் தங்களது வாழ்க்கையின் மிக பெரிய கடமை முடிந்ததை எண்ணி கண்ணில் ஆனந்த கண்ணீருடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
சரோஜாவும் மனோகரனையும் பார்த்த தேவி அக்கா…
அம்மா சரோஜா உனக்கும் மனோகர் தம்பிக்கும் எப்படி நன்றி சொல்வதென்றே தெரியலை.
எங்களுக்கு ஒரு மகனும் மருமகளும் இருந்தா என்ன செய்திருப்பாங்களோ அந்த அளவுக்கு நீங்க தான் இந்த கல்யாணத்தை நடத்தி கொடுத்திருக்கீங்க.
இந்த வயசான காலத்தில் பொண்ணுக்கு எப்படிடா… கல்யாணம் பண்ணி வைக்கப்போறாம்னு தவிச்சுக் கிட்டு இருந்தோம்.
அந்த கடவுளா பார்த்து எங்களுக்கு உங்களை அனுப்பி வச்சிருக்காரு.
நீங்க செய்த உதவிக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியலை என்று தேவி அக்கா, சரோஜாவின் கையை பிடித்துக் கொண்டு கண்ணீர் மல்க கூறினார்.
உடனே மனோகர்…
அக்கா இதுக்கு போய் எதுக்கு நன்றி… எங்களால் முடிந்த ஒரு சின்ன உதவி அவ்வளவு தான்.
இல்ல தம்பி, சொந்தகாரங்க கூட எடுத்து செய்ய முன்வராத போது எங்கிருந்தோ இங்கு வந்து, எதிர் வீட்டில் குடியிருக்கும் நீங்க மனாசார செய்யும் போது எங்களுக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை.
தேவி அக்கா நீங்களும் மோகன் அண்ணனும் செய்த உதவிக்கு முன்னாடி இதெல்லாம் ஒரு உதவியே கிடையாது. அந்த அளவுக்கு நீங்க எங்களுக்கு உதவி செய்து இருக்கீங்க என்று மனோகர் கூறினார்
தம்பி நாங்க என்ன அப்படி ஒரு பெரிய உதவி உங்களுக்கு செய்தோம் என்று தேவி அக்கா திரும்ப கேட்டார்
அக்கா நீங்க செய்த உதவியை நீங்க வேண்ணா மறக்கலாம். ஆனால் நாங்க எப்பவும் மறக்க மாட்டோம் என்று மனோகர் கூறினார்.
தேவி அக்காவுக்கு தான் செய்த உதவி என்னவென்றே மறந்து விட்டது.
அப்போது மனோகரன், தேவி அக்கா செய்த உதவியை நினைவு கூர்ந்தார்.
அக்கா நாங்க இந்த வீட்டுக்கு கூடி வந்த ஒருவாரம். இந்த பகுதியில் யாரிடமும் எங்களுக்கு பழக்கம் கிடையாது.
நானும் வேலை காரணமாக வெளியூர் சென்று விட்டேன்.
அன்று இரவு 10 மணி இருக்கும் எங்களது 3 வயது மகன் ராஜாவுக்கு திடீரென உடல்நிலை சரியில்லை.
எனது மனைவி சரோஜாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
எனக்கு போன் செய்து ராஜவின் உடல்நிலை மிகவும் மோஷமாக உள்ளது என்றும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லவேண்டும் என்று அழுது கொண்டே கூறினாள்.
இந்த பகுதியில் மருத்துவமனை எங்கு இருக்கும் என்றே எனது மனைவிக்கு தெரியாது. அவள் என்ன செய்வதென்று தவித்துக் கொண்டிருந்தாள்.
அந்த நேரத்தில் எதிர் வீட்டில் இருந்த நீங்களும் மோகன் அண்ணனும் தான் என் மனைவி அழும் சத்தம் கேட்டு, வேகமாக ஓடி வந்து என்ன என்று கேட்டீர்கள்.
அவளும் தனது மகனுக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறினாள்.
உடனடியாக மோகன் அண்ணனும் நீங்களும் எனது மகனை தோளில் தூக்கிப் போட்டு இரவோடு இரவாக 1 கி.மீட்டர் நடந்தே சென்று அங்கிருந்த மருத்துவனையில் என் மகனை அனுமதித்தனர்.
அன்று இரவு முழுவதும் மருத்துவமனையில் எனது மனைவியுடன் கூடவே இருந்து அவளுக்கு தைரியத்தை கொடுத்து உதவி செய்தீர்கள்.
சரியான நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்ததால் எனது மகனுக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் அவன் நல்லபடியாக குணம் அடைந்தான்.
மறு நாள் காலை நான் வந்த பிறகு தான் நீங்கள் இரண்டு பேரும் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு சென்றீர்கள்.
அந்த அளவுக்கு உங்கள் பையனோட குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றால் எந்த அளவுக்கு பார்த்துக்கிடுவீங்களோ அந்த அளவுக்கு எனது மகனை பார்த்துக் கொண்டீர்கள் என்று மனோகர் கூறினார்.
அட என்ன தம்பி அதெல்லாம் ஒரு உதவியா… அதை இன்னும் ஞாபகம் வச்சுக்கிட்டு இருக்கீங்க… என்று தேவி அக்கா கூறினார்.
தேவி அக்கா… அந்த விஷயம் உங்களுக்கு சிறியதா இருக்கலாம்…
தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும் அது உலகத்தைவிடப் பெரியது தான்.
அதனால நீங்க செய்த உதவி எங்களுக்கு மிகப் பெரியது தான் என்று மனோகர் கூறினார்.
தம்பி மனோகர், நாங்க செய்ததை விட நீங்க செய்தது தான் பெரிய உதவி என்று தேவி அக்கா கூறினார்.
இப்படி அவர்கள் இரண்டு பேரும் மாறி… மாறி… தங்களுக்குள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
அன்பின் பெருக்கத்தால் இருவர் கண்களிலும் நீர் கசிந்தது.
துரை. சக்திவேல்