முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு பெரியார் விருது

சென்னை, ஜன.13–
தமிழக அரசு சார்பில் தமிழ் இலக்கிய வளர்ச்சி, தமிழ்ச் சமுதாய உயர்வுக்கு தொண்டாற்றியவர்களுக்கு பெரியார் விருது, அம்பேத்கர் விருது உட்பட 9 விருதுகளை பெறுவோர் பட்டியலை தமிழக அரசு அறிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு தந்தைபெரியார் விருது வழங்கப்படுகிறது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–
தமிழ்மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ள திருவள்ளுவர் விருது உள்ளிட்ட கீழ்க்காணும் விருதுகளைப் பெற்றிட தகுதியான பெருமக்களை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
விருதுகள்பெறுவோர்
* திருவள்ளுவர் விருது 2018 : முனைவர் கோ. பெரியண்ணன்
* தந்தைபெரியார் விருது 2017 : பா.வளர்மதி
* அண்ணல் அம்பேத்கர் விருது 2017 : டாக்டர் சகோ.ஜார்ஜ், கே.ஜே
* பேரறிஞர் அண்ணா விருது 2017 : அ. சுப்ரமணியன்
* பெருந்தலைவர் காமராசர் விருது 2017 : தா.ரா.தினகரன்
* மகாகவிபாரதியார் விருது 2017 : முனைவர் சு. பாலசுப்ரமணியன் (எ) பாரதிபாலன்
* பாவேந்தர் பாரதிதாசன் விருது 2017 : கே. ஜீவபாரதி
* தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது – 2017 : எழுத்தாளர் வை. பாலகுமாரன்
* முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது – 2017 : முனைவர் ப. மருதநாயகம்
இந்த விருதுகளை திருவள்ளுவராண்டு 2049, தை மாதம் 3–ம் நாள், 16.1.2018 செவ்வாய்க் கிழமை அன்று மாலை 5 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி வழங்குகிறார்.
ரூ.1 லட்சம், தங்க பதக்கம்
விருதுபெறுவோர் ஒவ்வொருவருக்கும் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதிச் சான்றிதழ் ஆகியன வழங்கி பொன்னாடை அணிவித்துச் சிறப்பிக்கப்படும்.
இவ்விழாவில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் 50 பேருக்கு அவர்கள் வாழ்நாள் முழுவதும் திங்கள்தோறும் உதவித்தொகை ரூ.2500 மற்றும் மருத்துவப்படி ரூ.100 பெறுவதற்கான அரசாணைகள் அளிக்கப்பெறும்.