தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளுடன் விஐடியில் பொங்கல் விழா

வேலூர், ஜன. 13–
விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் வேந்தர் ஜி.விசுவநாதன் தமிழர்களுக்குரிய பாரம்பரிய தலைப்பாகை அணிந்து பொங்கல் பானையில் அரிசியிட்டு பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார்.
ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 13ந்தேதி முதல் 16ந்தேதிவரை பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. தமிழர்களின் முக்கிய திருவிழாவான இதனை உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள தமிழர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது வழக்கம். இத்திருவிழாவிற்காக தங்களின் சொந்த ஊருக்கு வருகை தந்து உற்றார் உறவினர்களுடன் உற்சாகமாக கொண்டாடுவர். பொங்கல் திருநாளில் சூரிய பகவானுக்கு பொங்கல் பானையில் பொங்கலிட்டு கொண்டாடுவார்கள்.
விஐடியில் தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான பொங்கல் திருவிழா ஆண்டுதோறும் பல்வேறு நிகழ்வுகளுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி விஐடியில் பொங்கல் விழா இன்று நடைபெற்றது.
விழாவையொட்டி விஐடியில் பயிலும் வெளிநாட்டு மற்றும் பல்வேறு மொழி பேசும் மாணவ, மாணவிகள் தமிழர்களின் பாரம்பரிய உடை அணிந்து இதில் பங்கேற்றனர்.
பொங்கல் விழாவையொட்டி விஐடி வேளாண் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் (சோலை) மற்றும் வேளாண் மாணவர் சங்கம் (வயல்) இணைந்து நவநெல் பொங்கல் என்ற நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். இதில் பாரம்பரிய நெல் கண்காட்சி பாரம்பரிய நெல் விவசாயம் பற்றிய கருத்துரை மற்றும் காணொளி வெளியீட்டினை வேந்தர் ஜி.விசுவநாதன் தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து புட்டீஸ் (Foodys) அரங்கில் விஐடி பாரதிதாசன் தமிழ் இலக்கிய மன்ற மாணவ, மாணவிகள் ஏற்பாடு செய்திருந்த பாரம்பரிய பொங்கல் வைப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற வேந்தர் ஜி.விசுவநாதன் துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் துணைவேந்தர் ஆனந்த் ஏ.சாமுவேல் இணைதுணை வேந்தர் எஸ்.நாராயணன் மாணவர் நலன் இயக்குநர் அமித் மகேந்திரக்கர் ஆகி யோருக்கு தமிழர்களுக்கு உரிய தலைப்பாகை அணிவிக்கப்பட்டது.
அதைதொடர்ந்து பொங்கல் பானையில் வேந்தரும் துணைத்தலைவரும் அரிசி, வெல்லம் பருப்பு, முந்திரி, ஏலக்காய் ஆகியவற்றை இட்டு தொடங்கி வைத்தனர். தொடர்ந்து விஐடி இலக்கிய மன்றம் சார்பில் பாரம்பரிய கலைகளான கரகாட்டம், தப்பாட்டம், தேவராட்டம், காவடியாட்டம், ஒயிலாட்டம், காளியாட்டம் புலியாட்டம், பொய்க்கால் குதிரை ஆகியவற்றுடன் விஐடி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதனை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து வேந்தர் ஜி.விசுவநாதன் பேசியதாவது:
தமிழர்களின் வரலாறு ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய சிந்துவெளி நாகரிகம் திராவிடத் தமிழர் வரலாற்றுக்கு எடுத்துகாட்டாக உள்ளது. உலகில் சிறந்த மொழிகளாக விளங்கிய தமிழ் மொழி, சமஸ்கிருதம், பார்சிகம், லத்தின் உள்ளிட்ட 7 மொழிகளில் பல காணாமல் போய்விட்டது. தமிழ் மொழி மட்டுமே இன்றும் வழக்கத்தில் உள்ளது. முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பதிப்பிக்கப்பட்டது.
இப்போது உலகமய மாக்கலை பற்றி பேசுகிறோம் அக்காலத்திலேயே ‘‘யாதும் ஊரே யாவரும்கேளிர்” என்று கலியன் பூங்குன்றனார் தமிழில் எழுதினார். இது ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் அது உலகம் முழுவதும் பரவியிருக்கும். தமிழ் மொழி இனிமையானது. பழமையானது. தமிழில் படிக்கவேண்டும், பேசவேண்டும், பெயர் வைக்க வேண்டும், ஆங்கிலம் கலந்த தமிழை தவிர்க்க வேண்டும். தமிழ்நாட்டை விட இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தமிழ்மொழி சிறப்பாக பேசப்படுகிறது என்றார். பொங்கல் விழாவினை மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் அ.மரியசெபஸ்தியான், இராசுதாகரன், செ.பாலாஜி, ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.