சென்னையில் 48 விமானங்கள் தரை இறங்க முடியாமல் தவிப்பு

சென்னை, ஜன. 13–
சென்னை மாநகரில் இன்று அதிகாலை 3 மணி முதல் காலை 8.30 மணி வரை வான மண்டலத்தில் அடர்த்தியான கரும்புகை கவ்வி சூழ்ந்திருந்ததால் வெளிநாட்டு விமானங்களையும், உள்நாட்டு விமானங்களையும் மீனம்பாக்கம் விமான நிலையங்களில் தரை இறக்க முடியாமல் விமானிகள் தவித்துப் போனார்கள். மொத்தம் 48 விமானங்கள் இவ்வாறு தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.
இன்று போகிப் பண்டிகை. இதையொட்டி உபயோகத்துக்கு பயனற்ற பழைய பொருட்களை சென்னை நகர வாசிகள் – சிறுவர் – சிறுமிகள் தீயிட்டுக் கொளுத்தினார்கள். இது ஒரு பக்கம். கடுமையான மூடுபனி மறுபக்கம். இந்நிலையில் ‘கன்னங்கரேல்’ என்ற கரும்புகை அடர்த்தியான வான மண்டலத்தை கவ்விப் பிடித்த நிலையில் சென்னை வந்த விமானங்கள், மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்திலும், உள்நாட்டு விமான நிலையத்திலும் தரை இறக்க முடியாமல் பெரும் சிரமத்துக்குள்ளாயின.
ஏர்இந்தியா, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், பிரிட்டிஷ் ஏர்வேஸ், கொலம்போ ஏர்லைன்ஸ், ஸ்பைஸ் ஜெட், இண்டிகோ, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஏர் இந்தியா – மஸ்கட், ஏர் இந்தியா துபாய், திருவனந்தபுரம், கோவா ஆகிய விமானங்கள் மொத்தம் 48 விமானங்கள் (இதில் வெளிநாட்டு விமானங்கள் 18, உள்நாட்டு விமானங்கள் 30) மீனம்பாக்கத்தில் தரையிறங்க முடியாமல் பெரும் சிரமத்துக்குள்ளாயின.
இந்நிலையில் இந்த விமானங்கள் அண்டை மாநிலத்து விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. அதிகாலை 3 மணி முதல் வானை சூழ்ந்திருந்த கரும்புகை மண்டலம், பொழுது விடிந்து 8.30 மணியளவில் இருக்கும் இடம் தெரியாமல் காற்றில் கலைந்து போனது. இதையடுத்து அந்த 48 விமானங்களும், 8.45 மணியிலிருந்து ஒன்றன் பின் ஒன்றாக மீனம்பாக்கம் விமான நிலையங்களில் தரை இறங்கின. நிலைமை 9 மணிக்கு பிறகு சீரானது.
பொங்கல் விடுமுறையையொட்டி வெளி இடங்களுக்கு புறப்பட்டவர்கள், வெளி இடங்களிலிருந்து சென்னைக்கு புறப்பட்டு வந்தவர்கள், அவர்களை வழியனுப்ப வந்தவர்கள், அழைத்துப் போக வந்தவர்கள் என்று விமான நிலையங்களில் மக்கள் கூடியதால் திரும்பிய பக்கமெல்லாம் கார்கள். இதேபோல உள்ளே – வெளியே மக்கள் தலைகள். நடக்கவும், கார்களை நிறுத்தவும் பயணிகள் சொல்லொண்ணா சிரமத்துக்கு ஆளானார்கள்.
ஒரு கட்டத்தில் தமிழக அரசின் வெளியூர் பஸ்கள் புறப்பட்டுச் செல்லும் கோயம்பேடு பேருந்து நிலையம் அளவுக்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. ஒரு சில மணிநேரத்தில் கட்டுப்படுத்தப்பட்டு சகஜ நிலை திரும்பியது.
இதேபோல் பஸ் மற்றும் ரெயில் போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் நண்பகலில் சீரானது.