கோயம்பேட்டில் மலைபோல் குவிந்த பொங்கல் கரும்பு

சென்னை, ஜன. 13–
நாளை (14–ந்தேதி) பொங்கல் பண்டிகை. இதையொட்டி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு லாரி லாரியாக கரும்புகள் வந்து இறங்கி உள்ளன. விற்பனையும் படு ஜரூராக நடைபெற்று வருகிறது.
ஆண்டுதோறும் தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகை நாடு முழுவதும் கோலாகலத்தோடும் மகிழ்ச்சியோடும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு நாளை 14ம் தேதி கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகைக்காக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மதுரை, மேலூர், தேனி, பெரியகுளம், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், கடலூர், சிதம்பரம், பண்ருட்டி உள்பட பல இடங்களில் இருந்து லாரி, லாரியாக கரும்புகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதில், 10 அடி நீளம் உள்ள கரும்பு கட்டு(எண்ணிக்கை-20) ரூ.250 முதல் ரூ.500 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை விலையில் ஒரு கரும்பு ரூ.20 முதல் ரூ.30 வரை விற்கப்படுகிறது.
இதே போல மஞ்சள் கொத்து – இஞ்சிக் கொத்து – வாழைத்தோரணம் கோயம்பேட்டில் மலைபோல் குவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஜோடி மஞ்சள் குலை ரூ.25க்கும், ஒரு கட்டு (எண்ணிக்கை-10) ரூ.100க்கும், தென்னங்குலை விற்பனை செய்யப்படுகிறது.
வாழைத்தார் ஒன்றின் விலை அதிகபட்சம் ரூ.500க்கு விற்கப்படுகிறது. இதே போல இஞ்சிக் கொத்தும் அதனதன் அளவுக்கு ஏற்ப ரூ.20 லிருந்து ரூ.25 வரை விற்கப்படுகிறது.
சென்னை நகரின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள சில்லறை வியாபாரிகள் கோயம்பேட்டிலிருந்து கரும்பு – மஞ்சள் கொத்து – இஞ்சிக்கொத்து – வாழைத்தாரை வாங்கிப் போய் தத்தம் பகுதிகளில் விற்கிறார்கள்.
சென்னையில் உள்ள கல்வி மற்றும் தொழில் நிறுவனங்கள் முன்னதாகவே பொங்கல் பண்டிகையை கொண்டாடியதால், சில நாட்களுக்கு முன்பே கரும்பு உள்ளிட்டவற்றின் விற்பனை துவங்கியது.
இன்று மாலை விற்பனை அதிக அளவில் இருக்கும். 15ந் தேதி– மாட்டு பொங்கல், அடுத்த நாள் (16ந்தேதி) காணும்பொங்கல் கொண்டாடப்படுகிறது.