31 செயற்கை கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-–40

ஸ்ரீஹரிகோட்டா, ஜன. 12–
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் விஞ்ஞானிகள் 31 செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளனர். அவர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
பி.எஸ்.எல்.வி. சி-–40 ராக்கெட் மூலமாக இந்த செயற்கைக் கோள்கள் சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்தின் முதலாவது ராக்கெட் செலுத்தும் தளத்தில் இருந்து இன்று காலை 9.29 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டன.
இந்த ராக்கெட்டில் கார்ட்டோசாட்-2 வகை பூமியை மேற்பார்வையிடும் நிலப்படவரைவுக்கலைக்கு உதவும் செயற்கைக்கோள் பிரதானமாக இடம்பெற்று இருந்தது.
இந்த செயற்கைக் கோள் 710 கிலோ எடை கொண்டதாகும். இதைத் தவிர இந்த செயற்கைக் கோளுடன் 30 செயற்கைக் கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டன. இவற்றின் மொத்த எடை 613 கிலோவாகும்.
இந்த துணை செயற்கைக்கோள்களில் 2 செயற்கைக் கோள்கள் இந்தியாவின் செயற்கைக்கோள்கள் ஆகும். அதில் ஒன்று நுண் செயற்கைக் கோள் (மைக்ரோ) இன்னொன்று மிகநுண்ணிய செயற்கைக் கோளாகும் (நானோ). மீதமுள்ள 28 செயற்கைக் கோள்கள் வெளிநாட்டு செயற்கைக் கோள்களாகும்.
கனடா, பின்லாந்து, பிரான்ஸ், கொரிய குடியரசு (தென் கொரியா), இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய 6 நாடுகளின் செயற்கைக் கோள்கள் ஆகும். 31 செயற்கைக் கோள்களுடன் மொத்தம் 1323 கிலோ எடையை சுமந்து பி.எஸ்.எல்.வி.-சி40 ராக்கெட் காலை 9.29 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.
இஸ்ரோவுக்கு பெருமை சேர்க்கும் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் சி-40வது ராக்கெட் 44.4 மீட்டர் உயரம் கொண்டதாகும். திட மற்றும் திரவ எரிபொருளைக் கொண்டு 4 கட்டமாக இயக்கப்படும் இந்த ராக்கெட்டின் மொத்த எடை 320 டன் ஆகும்.
முதலில் காலை 9.28 மணிக்கு ராக்கெட்டை செலுத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் விண்வெளியில் ராக்கெட்டின் சுற்றுப்பாதையில் பழைய செயற்கைக்கோள் இடிபாடுகள் கடந்து சென்றதால் ஒரு நிமிடம் தாமதமாக காலை 9.29 மணிக்கு செலுத்த விஞ்ஞானிகள் திட்டமிட்டனர். இதையடுத்து இந்த செயற்கைக் கோள்கள் செலுத்துவதற்கான கவுண்ட் டவுண் நேற்று காலை தொடங்கியது. ராக்கெட்டின் நான்கு நிலைகளிலும் திட மற்றும் திரவ எரிபொருள்கள் திட்டமிட்டபடி நிரப்பப்பட்டன. மற்ற ஏற்பாடுகளும் நடவடிக்கைகளும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டபடி செய்து முடிக்கப்பட்டன.
காலை 9.29 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-40 ராக்கெட் வெள்ளைப் புகையை கக்கியபடி பலத்த இரைச்சலுடன் விண்ணில் சீறிப்பாய்ந்தது. செயற்கைக்கோளின் செயல்பாடுகள் கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு விஞ்ஞானிகளால் கண்காணிக்கப்பட்டன.
சரியாக 17 நிமிடம் 20 விநாடிகளில் முதல் செயற்கைக் கோளான கார்ட்டோசாட் 2 நிலை நிறுத்தப்பட்டது. இதன் பின் ஒவ்வொரு செயற்கைக்கோளாக பிரிந்தன. கடைசியாக இஸ்ரோவின் ஒரு நுண் செயற்கைக்கோள் மட்டும் ராக்கெட் செலுத்தப்பட்டபின் ஒரு மணி நேரம் 45 நிமிடத்தில் பிரிந்தது.
செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக செலுத்தியபின் விஞ்ஞானிகள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்தனர்.
விஞ்ஞானிகளுக்கு
பாராட்டு
விஞ்ஞானிகளை பாராட்டிப் பேசிய இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண் குமார், 2018 ஆம் ஆண்டை இஸ்ரோ வெற்றியுடன் தொடங்கியுள்ளது என்றார். அடுத்த மாதம் ஜி.எஸ்.எல்.வி. -2 ராக்கெட் செலுத்தப்படும் என்றார்.
சதீஷ் தவண் விண்வெளி மையத்தின் இயக்குநர் குன்னிகிருஷ்ணன் பேசுகையில், இந்த ராக்கெட்டின் வெற்றிகரமான பயணம், இஸ்ரோ தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெறும் ஏ.எஸ். கிரண் குமாருக்கு பொருத்தமான புகழாரமாக அமைந்தது என்றார்.
பெரிய திட்டப்பணிகளுக்கு
பச்சைக் கொடி
புதிய தலைவராக பதவி ஏற்க உள்ள டாக்டர் கே. சிவனுக்கு மிகச்சிறந்த தொடக்கமாக அமைந்துள்ளது என்றார்.
இஸ்ரோவின் புதிய தலைவராக பொறுப்பேற்க உள்ள டாக்டர் கே. சிவன் பேசுகையில், நான்கரை மாதங்களுக்கு முன் மிகப்பெரிய தோல்வியைத் தழுவிய நிலையில் இந்த ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட்டிருப்பது மிகவும் சிறப்பான ஒன்று என்றார். இஸ்ரோ அடைந்த தோல்வியை சீராய்ந்து தோல்விக்கான காரணத்தைக் கண்டறிந்து அதை நீக்கியபின் இப்போது வெற்றிகரமாக செலுத்தப்பட்டிருப்பது நமது விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்புடன் கூடிய வெற்றிக்கு உதாரணம் என்றார். இன்றைய வெற்றி மற்ற பெரிய திட்டப்பணிகளுக்கு பச்சைக் கொடி காட்டியது போலிருக்கிறது என்றும் அவர் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இஸ்ரோ தலைவர் ஏ.எஸ். கிரண் குமார், பல செயற்கைக்கோள்களை ஒரே சுற்றுப்பாதையில் செலுத்தும் ஆற்றலை பெற்றிருந்த இஸ்ரோ பல்வேறு சுற்றுப்பாதையில் செலுத்தும் ஆற்றலைப் பெற்றுள்ளது என்றார். நூறுமுறை வெற்றிபெற்றாலும் தோல்வி ஏற்படும் என்பதை கடந்த முறை ஏற்பட்ட தோல்வி உணர்த்தியுள்ளது என்றும் ஒவ்வொரு முறையும் துடிப்பாக செயல்பட்டு தவறுகளில் இருந்து பாடம் படித்துக் கொள்வது அவசியம் என்றார்.
பிரதமர் வாழ்த்து
இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த சாதனையை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி உள்ளார்.
“பி.எஸ்.எல்.வி. ராக்கெட் இன்று வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்கு இஸ்ரோவிற்கும் அதன் விஞ்ஞானிகளுக்கும் என் இதயபூர்வமான வாழ்த்துகள். புத்தாண்டில் பெற்ற இந்த வெற்றி மூலம் இந்தியாவின் விண்வெளித் தொழில்நுட்பத்திற்கு பெரும் பலன் கிடைக்கும். அதன் மூலம் நமது குடிமக்கள், விவசாயிகள், மீனவர்கள் போன்றோர் பலன் பெறுவர். இந்தியாவின் இந்த வெற்றியின் பயன் நமது கூட்டாளி நாடுகளுக்கும் கிடைத்துள்ளது. இன்று செலுத்தப்பட்டுள்ள 31 செயற்கைக்கோள்களில் 28 செயற்கைக்கோள்கள் 6 நாடுகளைச் சேர்ந்த செயற்கைக்கோள்கள் ” என்று அவர் கூறியுள்ளார்.