வயது ஆவதன் காரணமாக மறதி ஏற்படுகிறதே ஏன்?

தூங்கும்போது மூளையில் ஏற்படும் மின் அலை மாற்றங்களுக்கும், வயதானவர்களுக்கு மறதி ஏற்படுவதற்கும் தொடர்பு இருப்பதாக, அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
நாம் தூங்கும்போது, மூளை, அன்றைய நிகழ்வுகள் குறித்த நினைவுகளை, தன் தற்காலிக நினைவகத்திலிருந்து, நீண்டகால நினைவகத்திற்கு மாற்றி வைக்கும் வேலையைச் செய்கிறது. இந்த வேலை நடக்கும் போது, மூளையிலிருந்து இரு வகையான அலைகள் வெளிப்படுகின்றன.
ஓர் அலை சற்றே வேகமானது. இன்னொன்று சற்றே மெதுவானது. இந்த இரு அலைகளும், சில வினாடிகள் சுருதி சேரும்போது, நினைவாற்றல் பரிமாற்றம் சிறப்பாக நடப்பதாக, கலிபோர்னிய பல்கலைக்கழக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
அவர்கள் மேற்கொண்ட விரிவான தூக்க ஆய்வில், இளம் வயதினருக்கு இரு அலைகளும் சுருதி சேர்வது நன்றாக நடப்பதை கண்டறிந்தனர். அதே சமயம், வயதானவர்கள் துங்கும்போது இரு அலைகளுக்கும் சுருதி பேதம் ஏற்படுவதையும் கவனித்தனர். இதனால் தான், வயதானவர்களுக்கு நினைவாற்றல் குறைய ஆரம்பிக்கிறது என, அந்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சரி, வயதானவர்களுக்கு இந்த சுருதி பேதத்தை மாற்ற முடியாதா? மூளைக்கு மெல்லிய மின் தூண்டலை தருவதன் மூலம், வயதானவர்களுக்கு சுருதி பேதமில்லாத, ஆழ்ந்த தூக்கத்தை தர முடியும் என, மருத்துவர்கள் கருதுகின்றனர். மேலும் இது குறித்த ஆய்வுகள் தொடர்ந்து வருகின்றன.