மிழக நீர் நிலைகளை மீட்டு புத்துயிர் அளிக்கும் குடிமராமத்து:

சென்னை, ஜன.12–
தமிழ்நாட்டில் நீர்நிலைகளை மீட்டெடுப்பதற்கும், அவற்றுக்கு புத்துயிர் அளிக்கவும், வேளாண் பெருங்குடி மக்களின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் திட்டம் தான் குடிமராமத்துத் திட்டமாகும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெருமித்துடன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:–
இத்திட்டத்தின் கீழ் 2016-–17ம் ஆண்டில் 30 மாவட்டங்களில் ஆயிரத்து 492 பணிகள் 81 கோடியே 95 லட்சம் ரூபாய் செலவில் நிறைவு பெற்றுள்ளன. மேலும் 2017-–18ம் ஆண்டில் 331 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 2 ஆயிரத்து 65 பணிகள் செயல்படுத்த நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு, எடுக்கும் வண்டல் மண் வேளாண் பெருமக்களின் விவசாய நிலத்தை வளப்படுத்தும் நோக்குடன் வண்டல் மண் வழங்கும் திட்டம்” நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் இது வரை 5 லட்சத்து 11 ஆயிரத்து 694 விவசாயிகளுக்கு, 5 கோடியே 54 லட்சத்து 84 ஆயிரத்து 351 கன மீட்டர் வண்டல் மண் அளிக்கப்பட்டுள்ளது.
காவேரி மேலாண்மை வாரியத்தையும், காவேரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவையும் விரைந்து அமைக்க வேண்டும் என்ற தமிழ்நாட்டின் நியாயமான, நீண்டகால கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என அம்மாவின் அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
நதிநீர் இணைப்பு திட்டத்தின் கீழ் கோதாவரியிலிருந்து வெளியேறும் உபரிநீரினைத் திருப்பி, கோதாவரி-கிருஷ்ணா -பெண்ணாறு- பாலாறு- காவேரி நதிநீர் இணைப்புத் திட்டத்தின் கீழ் காவேரியில் கல்லணைக்கு அருகில் 125 டி.எம்.சி. அடி நீர் தமிழ்நாட்டிற்குக் கிடைக்க மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும்.
தமிழ்நாடு அரசு, முல்லைப் பெரியாறு அணையின் முழு நீர்மட்ட அளவான 152 அடிக்கு நீரை தேக்குவதற்கு தேவையான எஞ்சிய பலப்படுத்தும் பணிகளைச் செய்யும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கேரள அரசு, இப்பணிகளைச் செய்ய தேவையான சட்டபூர்வமான அனுமதியை பெறுவதற்கு ஒத்துழைக்காமலும், தமிழ்நாடு பொதுப்பணித் துறையின் பொறியாளர்கள் அணைப் பகுதியில் பணிகளை செய்வதற்கு இடையூறுகளை ஏற்படுத்தியும் வருவதால், தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் 2.3.2017 அன்று ஒரு நிறைவேற்றல் மனுவை தாக்கல் செய்து உள்ளது என்பதையும் தமிழ்நாட்டு மக்களின் நலனை உறுதிப்படுத்தும் வகையிலும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவினை நடைமுறைப்படுத்தவும் அம்மாவின் அரசு உறுதியான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.