புகையில்லா பொங்கலை கொண்டாட உறுதிமொழியேற்ற பணியாளர்கள்!

சின்னாளபட்டி, ஜன.12–
சின்னாளபட்டி பேரூராட்சி பகுதியில் புகையில்லா பொங்கலை கொண்டாட பேரூராட்சி பணியாளர்கள் உறுதிமொழி எடுத்தனர். போகி அன்று தீயில் எரிக்கப்படும் பொருட்களை வீடுதோறும் சென்று சேகரித்து வருகின்றனர். புகையில்லா பொங்கல் குறித்த கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு செயல் அலுவலர் வெங்கட்ரமணன் பரிசுகளை வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புகையில்லா பொங்கலை கொண்டாடவும், பொதுமக்களை போகி அன்று தீயில் பழைய பொருட்களை எரிக்கவிடாமல் தடுக்கவும், பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள், துப்புரவு ஆய்வாளர் செல்விசித்ராமேரி தலைமையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். சிறுவர்கள் மத்தியில் புகையில்லா பொங்கல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கட்டுரைப்போட்டி நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கட்ரமணன் தலைமையில் அரசு உயர்நிலைப் பள்ளியிலிருந்து பள்ளி மாணவர்கள் பேரணியாக சென்று புகையில்லா பொங்கல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதுகுறித்து செயல் அலுவலர் வெங்கட்ரமணன் கூறுகையில் போகி அன்று பழைய பொருட்களை பொதுமக்கள் எரிப்பது வழக்கம். அதை தவிர்க்க முன்கூட்டியே நாங்கள் வீடுதோறும் சென்று பழைய பொருட்களுடன் கழிவுப் பொருட்களை சேகரித்து வளம் மீட்புப் புங்காவிற்கு கொண்டு செல்கிறோம் என்றார்.
விழிப்புணர்வு பேரணியில் துப்புரவு மேற்பார்வையாளர்கள் சரவணன், அகிலன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர். வீடுதோறும் சென்று பழைய கழிவுப்பொருட்களை எரிக்க விடாமல் சேகரித்து வரும் பேரூராட்சி நிர்வாகத்தை சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பாராட்டினார்கள்.