பஞ்சர்

பிரதான சாலையில் வாகனங்கள் சர்சர்ரென ஓடிக்கொண்டிருந்தன.
ரமேஷ் ….. சாலையின் ஓரமாய் நின்றிருந்தான். இந்தா வந்திட்டேங்க எங்க? எதிர் திசையில் உள்ளவன் கோபமாய்க் கேட்டான்.
இன்னும் அஞ்சு நிமிசத்தில வந்திருவேன் .சரி சீக்கிரம் வாங்க. ஐயய்யோ இந்த செல்போன எவன் கண்டு பிடிச்சான்னு தெரியல .எங்க இருந்தாலும் கண்டுபிடிச்சிர்ரானுகளே . முணங்கிய வாறே கொஞ்சம் முன்னேறினான் ரமேஷ். தார்ச்சாலையில் பட்ட வெயில் தகதகவென்று கருப்பாய் மிக்கியது. ம் இப்ப என்ன பண்ணலாம்? கடன் காரன் வேற கடன் கேக்குறான் இவன் கிட்ட வாரேன்னு சொல்லிட்டேன் எப்படி போறது என்றவாறே செல்போனில் வந்த வாட்ஸ் அப்பை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தான். அது தத்துவங்களின் தகவல் களஞ்சியமாய் விளங்கியது.
இந்த ஒலகத்த கண்டுபிடிச்சவன் கடவுள்ன்னா செல்போன கண்டு பிடிச்சவன் இன்னொரு கடவுள் இந்த ஒலகத்தையே கைக்குள்ள வச்சிருக்கானுகளே வியப்பின் விளிம்பில் போய் வாட்ஸ் அப்பை ஆராய்ந்து கொண்டிருந்தான்
ஆகா என்னமா எழுதுறானுக என்று வாசகங்களை பிடித்துப் பார்த்து வாய் பிளந்தான் .
மீண்டும் கடன் காரனின் செல் போனிலிருந்து ரமேசுக்கு அபாய மணி அடித்தது.
ஆகா மறுபடியும் அடிக்கிறானே எடுக்கலாமா? வேண்டாமா?
குழப்பங்களுக்கு நடுவில் போனை எடுத்தான்
ஹலோ சார் வந்திட்டே இருக்ககேன் .எங்க சொல்லி அரைமணி நேரமாச்சு. நடந்தே வந்திருந்தாலும் இந்நேரம் வந்திருக்கணுமே .எங்க இருக்க பொய் சொல்லாம சொல்லு .இப்ப நீ எங்க இருக்க? எதிர் திசையில் உள்ளவன் வார்த்தைகளாலே அம்பு தொடுத்தான்.
சார் அண்ணே ச்சீ சார் இப்ப வந்திட்டே இருக்கேன்.
மறுபடியும் ஒரு பொய்யைச் சொல்லிவிட்டு இந்த இடத்தை விட்டு நகராமல் அங்கேயை நின்றிருந்தான். பையைத் தடவிப் பார்த்தான்.
கையில் பணமில்லாமல் இருந்தது.
ம் என்ன பண்ணலாம்?
யோசித்தபடியே நின்றிருந்தான். அப்போது ஒருவர் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வந்தார். வந்தவர் திடீரென சைக்கிளை நிறுத்தினார்.
ஐயா சைக்கிள் பஞ்சர் ஆயிருச்சு வரும் போது பைசா எடுக்காம வந்திட்டேன் எனத் தலைறைச் சொறிந்தார்.
“ஐயா இதுக்கு போயி எவ்வளவு வேணும்? என்றான் ஒரு வள்ளல்.
ஒரு அம்பது ரூபா ஆகுமா?
தலையைச் சொறிந்தார் பெரியவர்.
இந்தாங்க நூறு ரூவா என்று நூறு ரூபாயை எடுத்து நீட்டினான் வள்ளல் வாரிசு.
ரொம்ப நன்றி தம்பி என்றவர் சைக்கிளை உருட்டிக் கொண்டு போனார்.
ரமேஷ் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான்.
அட இப்படியும் ரெண்டு மூனு நல்ல மனுசங்க இருக்கிறதால தான் நாட்டுல கொஞ்சமாவது மழ பேயுது என்றபடியே சைக்கிள்காரரைப் பார்த்தான்.
சிறிது தூரம் சென்ற அந்தப் பெரியவர் சுற்றும்முற்றும் பார்த்து விட்டு சைக்கினிள் பெடலைப் போட்டு ஏறி உட்கார்ந்தார். அடப்பாவி இதுவும் ஏமாற்று வேல தானா? இங்க குடுத்தவன் ஏமாளியா? இல்ல வாங்குனவன் அறிவாளியா? குழம்பியவாறே சைக்கிள் காரணை வெறித்துப்பார்த்தான் அவன் ஓரளவு தூருத்திற்குப் போய் சைக்கிளை விட்டு கீழே இறங்கினான்
எதுக்கு? சைக்கிளை விட்டு கீழ எறங்குனாரு .அவர் நின்றிருக்கும் இடத்தை நோக்க விரைந்தான் ரமேஷ்
கொஞ்சதூரம் சைக்கிளைத் தள்ளிப் போனவர் மீண்டும் இன்னொரு ஆளிடம் தம்பி சைக்கிள் பஞ்சர் ஆயிருச்சு. வீட்டுல இருந்து வரும் போது பைசா எடுக்காம வந்திட்டேன் என்று தலையைச் சொறிந்தார்.
எவ்வளவு ஒரு அப்பது ரூவா போதுமா? என்றார் அவர்.
நூறு ரூபாய் முழுத் தாளை எடுத்து நீட்டினார். சிரித்தபடியே நூறு ரூபாயை வாங்கி பையில் வைத்தார்? மீண்டும் பாவாமாய் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு போனார்.
அடப்பாவி இதே தொழிலா வச்சுருக்கானா இந்த ஆளு என்ற ரமேஷ் சைக்கிள் காரரின் அருகில் போனான்
ஐயா பஞ்சர் ஒட்டவா? ஒரு மதிரியாகக் கேட்டான்.
இல்ல தம்பி என விழித்தார் .
ஐயா தப்பில்ல நம்ம கிட்ட காசு இல்ல. அத இருக்கிறவனுக்கிட்ட இருந்து வாங்குறோம். அவ்வளவு தான் என்ற ரமேஷ் அவரின் சைக்கிளை வாங்கினார்.
வர்ற லாபத்தில ஆளுக்கு பாதி என்றாவன் சைக்கிளைத் தள்ளினான்
தம்பி …. தம்பி டிட்டாக் இளைஞனைக் கூப்பிட்டான்.
எஸ் என திரும்பினான் அவன்.
தம்பி வீட்டுல இருந்து வரம் போது பைசா எடுக்காம வந்திட்டேன்.
அதுக்கு?
ஒண்ணுமில்லப்பா சைக்கள் பஞ்சர் ஆயிருச்சு ;அதான் … தலையைச் சொறிந்தான் ரமேஷ்
ஒனக்கு சைக்கிள்ன்னா.. எனக்கு பைக்கு. என்னோட பைக்கும் பஞ்சர் ஆயிருச்சு என்றான் அவன்.
அடப்பாவிகளா நமக்கு எந்த வேலையும் ஒத்து வராது போல என்றபடியே விழித்துக் கொண்டிருந்தான். சைக்கிள் காரர் ’சைக்கிளை வாங்கினார்.
தம்பி தர்மம் கேக்குறதுக்கு ஒரு மூஞ்சி வேணும்பா. அப்பத்தான் குடுக்குறவன் கூட குடுப்பான் என்றபடியே சைகக்கிளை வாங்கி உருட்டிக்கொண்டு போனார்.
ரமேஷ் ஏக்கமாய் நின்று கொண்டிருந்த போது கடன்காரன் அவன் எதிரே வந்து நின்றான் .
அவன் வண்டி பஞ்சர் ஆக ஆரம்பித்தது.
ராஜா செல்லமுத்து