நாவலூரில் வேலைவாய்ப்பு முகாம்:

காஞ்சீபுரம், ஜன.12–
காஞ்சீபுரம் மாவட்டம் நாவலூரில் இயற்கை சீற்றத்தால் மறுகுடியமர்த்தப்பட்டவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமன ஆணையை மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா வழங்கினார்.
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம் செரப்பனஞ்சேரி ஊராட்சிக்குட்பட்ட நாவலூரில் உள்ள குடிசை மாற்று வாரிய -குடியிருப்புகளில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்புகள் மற்றும் சென்னை கூவம் ஆற்றின் கரையோர ஆக்கிரமிப்புகளிலிருந்து மறு குடியமர்த்தப்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகத்தால் நிறைவேற்றப் பட்டுள்ளது. தற்போது அங்கு குடியிருப்பவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் அங்குள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் பல்வேறு தனியார் கம்பெனிகள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான ஊழியர்களை தேர்ந்தெடுத்தனர். இந்த முகாமில் 700 பேர் கலந்துகொண்டனர். திறன் பயிற்சி பெறுவதற்கு 90 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 167 பேருக்கு வேலைவாய்ப்பு ஆணைகளை மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா வழங்கினார்.
இந்த முகாமில் காஞ்சீபுரம் வருவாய் கோட்ட அதிகாரி க.ராஜூ, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் ஆர்.அருணகிரி, குடிசை மாற்று வாரிய செயற்பொறியாளர் பி.மாலா, சமுதாய வளர்ச்சி அதிகாரி கே.முத்தையாபிள்ளை உள்பட பலர் கலந்துகொண்டனர்.